Header Ads



யூசுப் கர்ளாவியின் யேமன், சிரிய தலைவர்கள் கொல்லப்படுவர் என்ற ஆருடம் பலிக்குமா?

புகழ்பெற்ற இஸ்லாமிய பிரச்சாரகரும் சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றியத்தின் தலைவருமான ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி இஸ்லாமிய ஜனநாயக கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார். லிபியா, தூனிஸியா, எகிப்து ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து இதனை ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார். சென்ற வாரம் கட்டாரில் இடம்பெற்ற குத்பாப் பிரசங்கத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ‘‘கடாபி பூமியில் அட்டூழியம் புரிந்தார், கொலை செய்தார், மக்களை விரட்டியடித்தார், ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தினார், அபூ ஸலீம் சிறைக் கைதிகள் 1200 பேரை ஏதும் நடக்காதது போன்று ஒரே இரவில் கொலை செய்தார்.

இன்றைய தினம் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். தனக்கு தெய்வீக சக்தி உண்டு என்ற நினைப்பில் அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்த ஒருவர் வீழ்ந்துபோன நாள் இது. கடாபி குறித்து நான் எதிர்வு கூறியபோது சொன்ன முதல் வார்த்தை கடாபி மக்களால் கொல்லப்படுவார் என்பதுதான். கடாபி தலைவராகவும், தத்துவ ஆசிரியராகவும் இருக்க விரும்பினார். தனக்கு ஒரு நூல் இருக்க வேண்டும் என விரும்பி பசுமை நூலை எழுதினார். இப்பொழுது எல்லாம் முடிந்துவிட்டது.

இதேபோல்தான் வரலாற்று ஆதாரங்களை வைத்து உறுதியாகச் சொல்கிறேன் - சிரியாவின் பஷர் அல் அஸதிற்கும், யெமனின் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கும் கடாபிக்கு நேர்ந்த இதே கதிதான் நடக்கும்.

கடாபிக்குப் பின்னரான காலப்பகுதி குறித்துப் பேசும்போது, லிபிய மக்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும் என்றும் முன்னைய ஆட்சிக்கு ஒத்துழைத்தவர்களை பழிதீர்க்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். லிபிய அரசு அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கர்ளாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இறுதியாக லிபியா, தூனிஸியா, எகிப்தை உள்ளடக்கிய பிராந்திய கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற தனது ஆவலையும் வெளிப்படுத்தினார். ஒன்றுக்கொன்று தொடர்புள்ள இப்புரட்சித் தேசங்கள் தமக்கிடையில் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளை அவசியம் ஏற்படுத்த வேண்டும். புரட்சிக்குப் பின்னர் விடுதலை பெற்றுள்ள நாடுகளிலுள்ள விசுவாசிகள் தமக்கிடையில் ஏன் ஒன்றிணையக் கூடாது என்ற தனது அபிலாஷையையும் அவர் அதில் வெளிப்படுத்தினார்.

No comments

Powered by Blogger.