Header Ads



ஈரானில் ஆட்சி அதிகாரம் யார் வசம்..? அமெரிக்காவுக்கு வந்துள்ள சந்தேகம்

இரானை நிஜமாக யார் ஆட்சி செய்கிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுவது இரானிய அரசாங்கத்துடன் உறவாட அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளைப் பாதிக்கின்றன என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹில்லரி கிளிண்டன் பிபிசி பெர்ஷியன் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். "அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்த உடனேயே தான் இரானிய ஆட்சியாளர்களுடன் பேசுவதற்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் முயற்சி எடுக்கத் தயார் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார். ஆனால் அந்த நாட்டில் யார் முக்கியமான முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறது.

ஆதலால் அதிபர் ஒபாமா முயன்றிருந்தும் பலன் ஏற்படவில்லை" என்று கிளிண்டன் குறிப்பிட்டார்.இரான் ஒரு இராணுவ சர்வாதிகாரக் கட்டமைப்பாக உருமாறிவருகிறது என்று தான் நினைப்பதாக அவர் கூறியுள்ளார். இரானிய அரசாங்கத்துடன் உறவாட முயன்று பலன் தராத நிலையில், இரானிய மக்களுடன் வேறு வழிகளில் உறவாட அமெரிக்கா முயற்சிகள் எடுத்துவருவதாக கிளிண்டன் தெரிவித்தார்.

அந்த நோக்கத்தில் இரானிய மக்களுக்கென 'இணையத்தில் அமைந்திருக்கக்கூடிய தூதரகம்' ஒன்றை இந்த வருஷக் கடைசிக்குள் அமெரிக்கா ஏற்படுத்தவிருப்பதாக ஹில்லரி குறிப்பிட்டார். இரானிய அரசாங்கத்துக்கு எதிராக இனி அந்நாட்டில் சீர்திருத்தப் போராட்டம் செய்ய விரும்புவோர் முன்கூட்டியே சர்வதேச உதவிகளை நாடுதல் நலம் என்று அமெரிக்க ராஜாங்கச் செயலர் கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.