கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு
- அப்துல்லாஹ் -
(பாகம்-1)
தமிழர்கள் தனிநாடு ய போராட்டங்களை ஆரம்பித்த காலத்திலிருந்து முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். சொத்து இழப்புகள் தொழில் இழப்புகள் என்று ஆரம்பித்து உயிரிழப்புகள் வரை தொடர்ந்தது. 1990இல் இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் புலிகள் மீண்டும் ஊர்களுக்குள் வந்தனர். இதன் பின்னர் முஸ்லிம்கள் பாரிய இனப்படுகொலைகளினால் ஆயிரக்கணக்கான உயிர்களையும் இனச்சுத்திகரிப்பினூடாக கிழக்கில் சிறிய பெரிய ஊர்களையும் வடக்கில் மாவட்ட மட்டத்தில் பெரும் பிரதேசங்களையும் இழந்தனர். இவ்வாறான இழப்புகளுக்கு தமிழர்கள் ஏதாவது நட்டஈடுகளை வழங்கினார்களா என்றால் இன்று வரை இல்லை என்பது தான் கவலைப்பட வேண்டிய விடயம்.
ஈழப்போராட்டம் ஆரம்பமான காலகட்டத்தில் 18 ஜுலை 1983 அன்று கந்தர்மடத்தில் கண்ணிவெடித்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதையடுத்து யாழ் நகரில் பல பகுதிகளிலும் இராணுவம் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியிருந்தது. இந்த தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது யாழ் வைத்தியசாலையின் முன்னால் நண்பனொருவனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அப்துல் அஸீஸ் அம்ஜத் என்ற ஒஸ்மானியாக் கல்லூரியின் மாணவன் மீது இராணுவத்தினர் சுட்டதில் அவ்விடத்திலேயே அவர் பலியானார். இராணுவத்தின் கவச வாகனமொன்றிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவைகள் சோனகதெரு சிவல பள்ளிவீதியில் நின்ற மஹ்ரூப் என்பவரின் வயிற்றில் பட்டதால் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். அந்த வகையில் ஈழப்போராட்டம் தாக்குதல் வடிவம் பெற்ற முதல் நாளிலேயே முஸ்லிம்கள் இருவரையும் பலிகொடுத்திருந்தது. அம்ஜத்துக்கு அப்போது 14 வயது. இவர்கள் இருவரும் தான் ஈழப்போராட்டம் ஆரம்பமான காலத்தில் முதன் முதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்களாவர்.
இதையடுத்து 1985இல் மீரான் முஹிதீன் என்ற சித்த சுவாதீனமற்ற நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டார். இவர் ஒரு அரசாங்க உளவாளி என்ற முட்டாள் தனமான நம்பிக்கையடிப்படையில் கடத்தப்பட்டு பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு குளக்கரையொன்றில் வீசப்பட்டிருந்தார். புலிகளே அவரைக் கடத்திச் சென்றதாகவும் கொலை செய்ததாகவும் பின்னர் தெரிய வந்தது. 1988இல் ஜமீன் என்ற சித்த சுவாதீனமற்ற நபர் புளொட் அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பிறகு யாழ் முஸ்லிம்கள் சிலர் தலைப்பட்டு அவர் சித்த சுவாதீனமற்றவர் என்று கூறியதால் விடுவிக்கப்பட்டார். இருந்த போதிலும் சித்திரவதையினால் ஜமீனுடைய ஈரல் வீங்கி விடுவிக்கப்பட்டு இரண்டு மணித்தியாளத்தினுள் இறந்து விட்டார். சின்னப்பள்ளிவாசலுக்கு முன்னாள் தூக்கி வீசப்பட்டிருந்த ஜமீன் தண்ணீர் தாகத்தால் துடித்துக் கொண்டிருந்த வேளையில் அருகிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவருக்கு குடிப்பதற்காக ஊற்றினேன். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் தான் அவருடைய வயிற்றுக்குள் சென்றது. மிகுதியை அவர் குடிக்க முயன்றும் அது அவருடைய தொண்டையயை தாண்டிச் செல்லவில்லை. அவர் நன்றாக தாக்கப்பட்டுள்ளார் என்பதையறிந்து அவருடைய வயிற்றைப் பார்த்த போது அது பச்சை நிறமாக காணப்பட்டது. அவர் பிழைப்பது கடினம் என்பது விளங்கியது.
1986இல் ஈழப்போரில் முதன் முதலாக கொல்லப்பட்ட அம்ஜத்தின் தந்தையார் அப்துல் அஸீஸ் அவர்கள் யாழ்ப்பாணம் பஜாரிலுள்ள தனது கடையிலிருந்து வெளியே வந்த போது இராணுவம் ஏவிய ஷெல் பட்டு அவ்விடத்திலேயே வபாத்தானார்.
1986ஆம் அப்போது ஜமாஅதே இஸ்லாமிக்கும் இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கும் முறுகல் நிலை காணப்பட்ட காலம். ஜெலீல் மாஸ்டர் என்பவருக்கும் நிஹார் என்பருக்கும் தனிப்பட்ட மோதல் ஒன்று இடம்பெற்றது. இந்த மோதலின் பின்னர் ஜெலீல் மாஸ்டரின் தம்பி நவாஸ் என்பவர் கொழும்பிலிருந்து வந்திறங்கி நடைபெற்ற சம்பவத்தை கேட்டறிந்து வீதியில் நின்று சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு நின்ற ஹக்கு என்பவர் நாங்கள் வந்தாலும் தாக்குவீர்களா? என்று கேட்க நவாஸ் ஆம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது பிரதேசத்துக்கு சென்ற ஹக்கு பொம்மைவெளி என்ற பிரதேசத்தில் இருக்கும் சண்டியர்களை அழைத்துக் கொண்டு குளத்தடி சந்திக்கு வந்தனர். இதைக் கேள்விப்பட்ட இளைஞர் அமைப்பினர் தாமும் ஆயதங்களை தூக்கிக் கொண்டு வந்தனர். இரு குழுவினருக்குமிடையே பயங்கரமான வால் சண்டையும் அடிபிடியும் இடம்பெற்ற வேளையில் நிலமை கட்டுக்கடங்காமல் போகவே வெள்ளை என்;பவர் தன்னிடமிருந்த கிரணட்டை எடுத்துக்காட்டி எல்லோரையும் போய் விடுமாறு கூறினார். இந்நிலையில் கிரணட்டின் கிளிப்பையும் கழற்றி விட்டார். அதன் கிளிப் கையத் தள்ளவே பாடசாலை வளவிலுள்ள குப்பைக்குள் அதைப் போட முயற்சித்தார். அங்கு மாணவர்கள் சிரமதானப் பணியிலிருந்ததால் அங்கு வீசினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமெனக் கருதி ஹக்கு இருந்த பக்கமாக கிரணட்டை வீசினார். இதனால் ஹக்கு என்பவரும் ஜவ்ஸி என்ற சிறுவனும் வபாத்தாகினர். கிராம அதிகாரியான ஜவ்பர் என்பவர் தலையில் காயம்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வபாத்தானார். இதைவிட ஒன்பது பேர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருந்தனர். இன்னும் 18 பேருக்கு சாதாரண காயங்கள் ஏற்பட்டிருந்தன.
இதைப்பற்றி விசாரித்த புலிகள் அக்கைக்குண்டு இஸ்ரேல் தயாரிப்பு என்றும் இராணுவத்திடம் மட்டும் அது இருந்தது. உங்களிடம் அது எப்படி வந்தது என்ற தோரணையில் விசாரனை நடத்தினர். 1986இல் யாழ் கோட்டை பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டு அங்கிருந்த ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்ட வேளையில் ஒரு பெட்டி ஜே.ஆர். ரக கைக்குண்டுகள் மட்டும் கைவிடப்பட்டிருந்தது. அதுவே ஜெலீல் மாஸ்டர் கைக்கு கிடைத்தது. அப்போது தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்களுக்கெதிரான கடத்தல்கள் கப்பம் கேட்டல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் நோக்குடன் அது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இக்குண்டை பற்றி கேள்விப்பட்ட ஜெலீல் மாஸ்டரின் சகோதரர்கள் அதனை உரிய நபரிடமிருந்து மிரட்டிப் பெற்றிருந்தனர். அதுவே இருதியில் மூன்று உயிர்களைக் குடித்தது. சகோதர முஸ்லிமொருவரின் இரத்தத்தை ஓட்டுபவர் சுவர்க்கம் செல்ல மாட்டார் என்ற முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பு இங்கு நோக்கப்படல் வேண்டும். முதலில் குண்டைப்பற்றி அவ்வளவாக புலிகள் அலட்டிக்கொள்ளவில்லை. முஸ்லிமொருவரே ஜே.ஆர். குண்டின் கிளிப்பை எடுத்து அவர்கள் கேட்காமலே கொடுத்தார். இது தன் கண்ணை தன் கையால் குத்துவது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒரு செயல். குண்டு ஜே.ஆர். ரகம் என்று தெரிந்ததும் விசாரணை வேறுவிதமாக இருந்ததுடன் கடுமையாகவும் புலிகள் செயற்பட்டனர். இதன் பின்னர் ஜெலீல் மாஸ்டர் வெள்ளை உட்பட நாற்பது முஸ்லிம் இளைஞர்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவர்களை நாற்பது நாட்கள் வரை புலிகள் தடுத்து வைத்திருந்தனர். அவர்களை சுட வேண்டுமென முஸ்லிம் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டமொன்றைச் செய்தனர். இதற்கு ஒரு இஸ்லாமிய அமைப்பும் துணை போயிருந்தது. இதன் போது ஜெலீல் மாஸ்டருடைய வீடும் அவரின் இரத்த உறவினர்களின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டது. ஒரு முஸ்லிமை கொல்லுமாறு காபிர்களிடம் உதவி கேட்டால் அவரும் காபிராகி விடுவார் என்பது மார்க்கத் தீர்ப்பாகும்.
அதனைத் தொடர்ந்து மறு நாள் காலை நான்கு மணியளவில் ஜெலீல் மாஸ்டரும் (36 வயது) வெள்ளையும் (இபுறாகிம் நமீஸ்) (17வயது) சோனகதெருவிலுள்ள ஐந்து சந்திக்கு கொண்டு வரப்பட்டனர். இருவரும் இரண்டு ரக்கத்துகள் சுன்னத்து தொழுத பின்னர் கிளி என்ற முஸ்லிம் புலி உறுப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிளியுடன் அக்கரைப்பற்று பாரூக் என்ற புலியுறுப்பினரும் வந்திருந்தார். இருவரையும் சுட்டுக்கொன்ற அவர்கள் அருகிலுள்ள முஸ்லிம் வீடுகளிலுள்ளவர்களை எழுப்பி தகவலை உறவினர்களுக்குச் சொல்லுமாறு சொல்லி விட்டு சென்றிருந்தனர். ஜெலீல் மாஸ்டருக்கும் கிரணட் வீச்சுக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பாரூக் தான் 1986 இல் யாழ் டெலிகொமினிகேசன் இராணுவ முகாம் மீது தாக்குதல் இடம்பெற்ற வேளையில் பின்னாலிருந்து சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் புலிகளின் உள்வீட்டு மோதலில் கிட்டுவின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்னால் தெரியவந்தது. கிளி தற்போது கட்டாரில் வேலை செய்கின்றார். இந்நிலையில் ஏனையவர்களை தினமும் இரண்டு பேர் வீதம் சுட்டுக்கொல்லுமாறு பிரபாகரனிடமிருந்து பாரூக்குக்கு நேரடியாக உத்தரவு கிடைத்திருந்தது. அதே வேளை முஹிதீன் தம்பி நவாஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு புலிகளின் முகாமுக்கு சென்றது. முகாமை அண்மித்த வேளை அது ஆயிரம் பேரைக் கொண்ட பெரும் மக்கள் அணியாக மாறியிருந்தது. நாரே தக்பீர் சத்தம் அங்கே முழங்கியதால் அங்கு காவலில் இருந்த புலிகள் பெரும் அச்சத்துடன் காணப்பட்டனர். அங்கிருந்த புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் முறுகல் ஏற்பட்ட வேளையில் கிட்டு தலையிட்டு சமரசப்படுதிதியதுடன் கடத்தப்பட்ட ஏனையவர்களை விடுவிக்குமாறு கிட்டுவால் கட்டளையும் விடப்பட்டது. முஸ்லிம்கள் தமக்கிடையில் சண்டையிடக் கூடாது என்பதும் ஒரு குழுவுக்கு எதிராக இன்னொரு குழுவைச் சேர்ப்பதும் கூடாது கொலையை விட கொடிய குற்றம் என்பது இச்சம்பவம் நமக்குத் தரும் படிப்பினையாகும்.
அடுத்த பாகத்தில் புலிகள் முஸ்லிம்களை எவ்வாறு பகடைக்காய்களாக பாவித்தார்கள் என்பதைப் பார்ப்போம்..!
தொடரும்..!!
Post a Comment