Header Ads



வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றமும், காரணங்களும்

- முஹம்மத் சரீப் -

இலங்கை முஸ்லிம்கள் 1400 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவர்களில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலேயே மாதகலில் கடல் வணிகம் சம்பந்தப்பட்ட குடியிறுப்பொன்றை உறுவாக்கியிருந்தனர். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மன்னர்களுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அனுப்பிய கடிதங்களில் ஒன்று அனுராதபுரத்திலிருந்த இலங்கை மன்னருக்கும் அனுப்பப்பட்டிருக்கலாம்.  காலவோட்டத்தில் இலங்கையின் வடபகுதியில்  வாழ்ந்த புராதன குடிகளாகிய நாகர்களில் அனேகர் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர். இதனால்தான் 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம்களின் பெரும் குடியிருப்புகள் அராலி முதல் மாதகல் வரை காணப்பட்டதாக வரலாற்றாசிரியர் அலக்ஸாண்டர் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.  அதே வேளை இலங்கையின் கிழக்கு மாகாணத் தமிழர்கள் 9ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சோளர் படையெடுப்புடன் கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக பொலநறுவ திருகோணமலைப் பிரதேசங்களில் குடியேறியிருந்தனர். யாழ்ப்;பாணத் தமிழர்களோ 1270களுக்கு  பின்னர் தான் யாழ்ப்பாணத்தில் குடியேறியுள்ளனர். இவர்கள் தாம் தான் வடக்கு கிழக்கின் பூர்வீகக் குடிகள் என்று போலியான பிரச்சாரத்தை மேற்கொண்டு தமக்கென ஒரு தனிநாடு வேண்டுமென்று போராடினர். இவர்களை விட பூர்வீகம் உடையவர்களாகவும் 1400 வருட கால வரலாற்றைக் கொண்டவர்களாகவும் முஸ்லிம்கள் காணப்பட்டதால் முஸ்லிம்களை வடக்கு கிழக்கிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் தமது கோரிக்கை வலுப்பெறும் என்று உணர்ந்தனர். அதனால் தான் 1985இல் யாழ் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற புலிகளின் கூட்டமொன்றில் முஸ்லிம்களைப் பற்றி கேள்விணயான்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த புலிகளின்; யாழ் தளபதி மறைந்த கிட்டு 'முஸ்லிம்கள் எப்படி வந்தார்களோ அப்படியே செல்வாhகள்'  என்று கூறியிருந்தான்.  வடக்கிலிருந்து முஸ்லிம்களை வேரறுக்க வேண்டுமென்று  காலாகாலாமாக சில சாதித் தமிழர்களிடையே காணப்பட்ட சிந்தனை தான் 1990இல் செயல் வடிவம் கொடுக்கப்பட்டது.

கருப்பு செப்டம்பர் பற்றி அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். 1971இல் ஜோர்தானில் பதாயீன் பதாஹ் பலஸ்தீன் விடுதலை இயக்கங்கள் செயற்பட்ட காலத்தில் அவர்களுக்கெதிராக தடையொன்று மன்னர் ஹுஸைனால் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து ஜோர்தான் இராணுவமும் பலஸ்தீன் போராளிகளும் பரஸ்பரம் மோதிக் கொண்டனர். இரண்டு பக்கமும் இழப்புகள் ஏற்பட்டது. இரு பகுதியினரும் முஸ்லிம்கள். இது ஓரு சகோதரப் படுகொலையாக அன்று விளங்கியது. இதனால் பலஸ்தீன் விடுதலை இயக்கங்கள்   அங்கிருந்து வெளியேறி லெபனானுக்குச் சென்றன.

கருப்பு ஒக்டோபரும் ஒரு சகோதரப் படுகொலையின் ஞாபகார்த்தமாகவே இலங்கையில் அனுஷ்டிக்கப்படுகிறது. தமிழர்கள் முஸ்லிம்களை எவ்வாறு கருதுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம். ஆனால் முஸ்லிம்களை பொருத்தமட்டில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மொழியைப் பேசும் இருவேறு இனத்தவர்களாக இருந்தாலும் தமிழர்கள் சகோதரர்களாக கருதப்பட்டார்கள். அவ்வாறு கூறித்தான் ஒவ்வொரு முஸ்லிம் உம்மாவும் 1990 வரை தமது பிள்ளைகளை வளர்த்தெடுந்தனர். அதனால் தான் புலிகள் முஸ்லிம்களை கொன்று குவித்த போதெல்லாம் சகோதர நல்லெண்ணத்துடன் முஸ்லிம்கள் நடந்து கொண்டார்கள். இறுதியில் பள்ளிவாசல்களும் கொலைக் களமாக்கப்பட்ட பின்னர் முஸ்லிம்களும் தமது பொறுமையை இழந்து செயற்படும் நிலமை உருவானது.

இலங்கையில் கருப்பு ஒக்டோபர் என்பது சகோதர இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு அடக்குமுறை என்பவற்றுக்கு எதிரான ஒரு கண்டன நோக்குடன் முன்வைக்கப்பட்ட ஒரு போராட்டமாகும். கருப்பு யூலை என்பது ஆண்டாண்டு காலம் மோதல் நிலவிய இரண்டு மொழி பேசும் வௌ;வேறு இனங்களுக்கிடையிலான மோதலையும் இழப்புகளையும் ஞாபகப்படுத்தும் ஒரு மாதமாகும். கருப்பு யூலை யுத்தப்பிரகடணம் செய்த இரண்டு இனங்களுக்கிடையிலான இழப்புகளையும் கருப்பு ஒக்டோபர் நிராயுதபாணியான அப்பாவிகளுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்யப்படாமல் எதிர் பாராத விதமாக தாக்குதல்களை நடத்தி அவர்களை இனவழிப்புக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் உட்படுத்தியதையும் குறித்து நிற்கும். இனி கருப்பு ஒக்டோபருக்கான காரணங்கள் என்ன? எவ்வாறு அது செயற்படுத்தப்பட்டது என்பவற்றைப் பார்ப்போம்.
  
1990 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் வெளியேறிதன் பின்னர் புலிகள் நகர்ப் பிரதேசங்களுக்குள் ஊடுருவினர். அவ்வாறு வந்த புலிகள் பல்வேறு பட்ட வரிகளை பொருட்கள் மீது விதித்தனர். செல்வந்தர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டனர். இந்நிலையில் கப்பம் செலுத்த மறுத்த முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கிழக்கில் புலிகள் பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டிருந்தனர். 1990 யூன் 11 அன்று மீண்டும் யுத்தம் ஆரம்பமான கட்டத்தில் சரணடைந்த 200 முஸ்லிம் பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமாக பொலிஸில் இணைவதை சந்தேகக் கண்ணுடன் நோக்கிய புலிகள் அதனால் தமது இருப்புக்கும் ஆபத்து வருமென்று கருதினர். இதனால் தான் சரணடைந்த முஸ்லிம் பொலிஸார் எல்லோரையும் சுட்டுக் கொன்;றதுடன் தமது இயக்கத்திலிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் புலி உறுப்பினர்களையும் கொன்றிருந்தனர். அதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் ஆத்திரமுற்றிருந்தனர். இது இவ்வாறிருக்க 1990.07.16 அன்று ஹஜ் சென்று திரும்பிய ஹாஜிகளும் அவர்களின் குடும்பத்தினருமாக 68 பேர் மட்டக்களப்பு குருக்கள்மடத்;தில் வைத்து புலிகளால்  கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமுற்ற கிழக்கு முஸ்லிம்களில் சிலர் இராணுவத்துடன் சேர்ந்து புலிகளுக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து 1990.08.03 ஆம் திகதியன்று இரவு இஷா தொழுகையில் ஈடுபட்டிருந்த 104 முஸ்லிம்கள் காத்தான்குடி மீரா ஜும்ஆப் பள்ளி மற்றும் ஹுசைனியா  பள்ளி போன்றவற்றில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் 6 வயதுக்கும் 14 வயதுக்குமிடைப்பட்ட 25 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனால் ஆத்திரமுற்ற முஸ்லிம்கள் சில தமிழ்ப் பகுதிகளிலும் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர். இப்படியான தாக்குதல்கள் ஆரம்பத்தில் புலிகளின் முஸ்;லிம்களுக்கெதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்தவில்லை. அதனால் மீண்டுமொரு தாக்குதலுக்கு புலிகள் திட்டமிட்டனர். அதன் பிரகாரம் 1990. 08. 11 அன்று ஏராவூர் சதாமியாபுரம் காட்டுப்பள்ளி போன்ற பிரதேசங்கள் குறிவைக்கப்பட்டது. இரவு வேளையில் இப்பிரதேசங்களுக்குள் ஊடுறுவிய புலிகள் பள்ளிவாசல் ஒலிபெருக்கியை எடுத்து புலிகள் ஊரைச் சூழ்ந்துள்ளார்கள்: எல்லோரும் பள்ளவாசலுக்கு ஓடி வாருங்கள் என்று அழைப்பு விடுத்தனர். சூழ்ச்சியை அறியாத முஸ்லிம்கள் தமது பிள்ளை குட்டிகளுடன் பள்ளிவாசலை நோக்கி ஓடி வந்தனர். ஏற்கனவே மரங்களுக்குள் ஒழித்து நின்ற புலிகள் நிராயுதபாணியான பொதுமக்கள் மீது சுடத்தொடங்கினர். இறுதியில் 122 பேர் அநியாயமாகப் பலியாகினர். 65இக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிறு கிழிக்கப்பட்டு சிசு வெளியே எடுக்கப்பட்டு சுவற்றில் அடித்துக் கொல்லப்பட்;டது. அதைச் செய்தது பெண் புலி உறுப்பினர் ஒருத்திதான்.    பதிலுக்கு ஏராவூர் முஸ்லிம்களும் தாக்குதலில் ஈடுபட்டதால் புலிகளின் தலைவர்களெல்லாம் கிழக்கு மாகாணத்திலிருந்து பின்வாங்கி யாழ்ப்பாணத்துக்கு தப்பிச் சென்றிருந்தனர்.
 
இந்நிலையில் யாழ் சென்ற கிழக்குப்புலிகள் வடமாகாண முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். இந்நிலையில் யாழ் கோட்டை இராணுவ முகாம் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வந்ததால் புலிகள் முஸ்லிம்களை எதுவும் செய்யவில்லை. 1990 செப்டம்பர் 26 அன்று இராணுவம் கோட்டையிலிருந்து பின்வாங்கி மண்டதீவுக்குச் சென்றது. இராணுவ முகாம் மீதான தாக்குதல்கள் இல்லாத நிலையில் விமானத்தாக்குதல்களும் குறைவடைந்திருந்தது. இந்நிலையில் மீண்டும் முஸ்லிம்களை அழிக்க வேண்டுமென்ற கோரிக்கை புலிகள் மத்தியில் எழுந்தது. முஸ்லிம்களை வெளியேற்ற முன் அவர்களில் செல்வச்தர்களிடமிருந்து கப்பம் பெறவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.  இதையடுத்து புலிகள் முஸ்லிம் செல்வந்தர்கள் 22 பேரையும் வாலிபர்கள் 25 பேரையும் கடத்திச் சென்றிருந்தனர்.செல்வந்தர்களில் கெளிரு என்ற அப்துல் காதர் சித்திரவதையினால் கொல்லப்பட்டார். ஏனைய 21 செல்வந்தர்களும் பெருந்தொகைப் பணத்தை கப்பமாக செலுத்திய பின்னர் ஒன்றரை வருடத்தின் பின் விடுவிக்கப்பட்டனர். வாலிபர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர். இவ்வாறு அச்சமான ஒரு சூழ்நிலையை உருவாக்கிய பின்னர் முஸ்லிம்களை படிப்படியாக வெளியேற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதல் கட்டமாக சாவகச்சேரியில் 800 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த முஸ்லிம்கள் 18.10.1990 வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து மன்னாரிலிருந்து முஸ்லிம்கள் 23.10.1990 அன்று 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் 26.10.1990 அன்று வெளியேற்றப்பட்டனர். இறுதியாக 1380 ஆண்டுகளுக்கு மேல் வடக்கில் வாழ்ந்துவந்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் 30.10.1990 அன்று இரண்டு மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டனர். வவுனியாவில் சாலம்பைக்குளம் சூடுவெந்தபுளவு மற்றும் பாவற்குளம் முஸ்லிம்களுக்கும் எச்;சரிக்கை விடப்பட்;டதையடுத்து வெளியேறியிருந்தனர். மொத்தமாக ஏறக்குறைய 85 ஆயிரம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.

இவ்வாறு புலிகள் முஸ்லிம்களுக்கெதிரான இனச்சுத்திகரிப்பை செய்து முடித்தனர். மன்னாரில் இரண்டு பைத்தியம் பிடித்தவர்கள் கைவிடப்பட்;டிருந்தனர். யாழில் 47 பேர் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களைத் தவிற வேறு எந்த முஸ்லிமும்  வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இருக்கவில்லை. வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் கிழக்குப் புலிகள் சந்தோஷமடைந்திருந்தனர். இதனால் 1991 இல் பாரிய இனப்படுகொலை எதுவும் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெறவில்லை. அதேவேளை கிழக்கு முழுவதும் முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்து புலிகளுக்கெதிரான ஜிகாதில் ஈடுபட்டிருந்தனர். இதனால் தனிப்பட்ட சிறியளவிலான கொலைகளே முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் 1991 யூலை 10 ஆம் திகதி ஆனையிரவு படைத்தளம் மீதான தாக்குதலை புலிகள் ஆரம்பித்திருந்தனர். முப்பத்தொரு நாற்கள் நடைபெற்ற இச்சண்டையில் 575க்கு மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டிருந்தனர். ஏறக்குறைய 1500 பேர் காயமடைந்திருந்தனர். இப்பெருமிழப்பினால் தமிழீழ கோரிக்கையை வலுப்படுத்த மாற்று நடவடிக்கைகள் பற்றி பல மாதங்களாக புலிகள் ஆராய்ந்தனர். அதனடிப்படையில் 29.04.1992 அன்று பொலனறுவை மாவட்டத்திலுள்ள அழிஞ்சிபொத்தான கிராமம் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் 56 முஸ்லிம் ஆண் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். 15 பேர் காயமடைந்திருந்தனர். முஸ்லிம்களை பெருமளவில் கொல்வதன் மூலம் கொழும்பு முஸ்லிம்களை தமிழர்களுக்கெதிராக தாக்குதல்களை நடாத்தி விட்டு அதன் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற நாடு என்று உலகநாடுகளுக்கு காட்டி தமிpழீழத்தை சர்வதேச தலையீட்டுடன் பெற்றுக்கொள்வது திட்டமாக இருந்தது. கொழும்பு தமிழர்களின் பிணங்களின் மீது தமிழீழத்தை கட்டியெழுப்பும் திட்டம் வெற்றிபெறவில்லை. முஸ்லிம்களும் பெரிதாக எதையும் செய்ய முன்வரவில்லை. வழமை போல் முஸ்லிம் அரசியல்வாதிகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டனர். ஆனால் புலிகளின் கொலைவெறியை அது அடக்கவில்லை.

இதனால் மீண்டுமொரு தாக்குதலை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ள திட்டமிடப்பட்டு 1992.10.15 அன்று  பொலநறுவையிலுள்ள நான்கு முஸ்லிம் கிராமங்கள் குறி வைக்கப்பட்டன. பள்ளியகொடல்ல அக்போபுர அஹமட்புரம் பம்புரான போன்ற கிராமங்களில் நடுநிசியில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 171 முஸ்லிம்களும் 12 படையினரும் கொல்லப்பட்டனர். 83 பேர் காயமடைந்திருந்தனர். இச்செய்தியை கேள்விப்பட்ட கொழும்பு முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். அதேவேளை கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்த ஒரு மாணவன் இதற்கெதிராக ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்டு சகமாணவர்களின் உதவியை நாடினான். இறுதியில் அன்று பின்நேரம் இடம்பெற்ற கூட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. உடனடியான மாணவர்கள் தம்மாலான பணத்தை வழங்கினர். போஸ்டர்கள் பதாதைகள் தயாராகின. ஒக்டோபர் 18 அன்று ஆர்ப்பாட்டம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தில் இடம் பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களும் கலந்து கொண்டதால் 2000 பேருக்கு மேற்பட்ட மாணவர் கூட்டம் சேர்ந்திருந்தது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பி.பி.சி., சி.என்.என். போன்ற செய்தித் தாபனங்களும் கலந்து கொண்டிருந்தன. எல்.ரீ.ரீ.ஈ. யின் இனப்படுகொலைக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் என்ற தலையங்கத்துடன் அவர்களுடைய தொலைக்காட்சி செய்தி ஒலி-ஒளிபரப்பாகியது. அதனால் மனித உரிமை அமைப்புகள் புலிகளின் சர்வதேச தொடர்பாளர்களை கேள்வி கேட்டு பின்னியிருந்தன.

இத்தகைய ஒரு நெருக்குதலின் பின்னனியில் இவ்வாறான கொலைகள் தொடரும் பட்சத்தில் தமது ஆதரவை இழக்க நேரிடும் என்று புலிகளுக்கு அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனால் முஸ்லிம்களை பாரியளவிலும் சிறிதளவிலும் கொல்லும் நடவடிக்கைகளை புலிகள் நிறுத்த வேண்டியேற்பட்டது.  2006 ஆம் ஆண்டு மூதூரிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்படும் வரை புலிகள் பெரிதாக எதையும் செய்ய துணியவில்லை. ஆனால் உடன்படிக்கை கைச்சாத்தான 2002 ஆம் ஆண்டு வாழைச்சேனையில் வைத்து பத்து முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

புலிகளுக்கெதிரான இந்த வெற்றிகரமான ஆர்ப்பாட்டம் ஒரு ஓக்டோபர் மாதத்திலேயே இடம்பெற்றிருந்தது.  வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றமும் ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்திலேயே இடம் பெற்றிருந்தது. அதே வேளை பல்கலைக் கழக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்த அதே  நபர் தான் இலங்கையின் சில இடங்களில் 'கருப்பு ஒக்டோபரை' அனுஷ்டிக்குமாறு முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்ததாக நம்பப்படுகிறது. ஆர்ப்பாட்டம் அதையடுத்து கருப்பு ஓக்டோபர் அழைப்பு இதனை அவதானித்த அப்போதைய  முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்களும் இதற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை முஸ்லிம்களை கேட்டிருந்தார். அதனால் 1992 ஒக்டோபர் 30 அன்று இலங்கை முழுவதும் முஸ்லிம்கள் கடைகளை பூட்டி பூரண ஹர்த்தாலை அனுஷ்டித்தனர். அன்றிலிருந்து தான் வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் கருப்பு ஒக்டோபராக ஞாபகப்படுத்தப்படுகிறது.

No comments

Powered by Blogger.