வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றமும், மீளாத் துயரமும்
யாழ் அஸீம்
ஓ! இதயமற்றவர்களே
இந்த இறையில்லங்கள்
என்ன பாவம் செய்தன?
பாவங்களைக் கழுவும்
பள்ளியிலே - உங்கள்
பாவக்கரங்களை ஏன் பதித்தீர்?
உங்கள் அழிவுக்கு வித்தினை
ஏன் விதைத்தீர்?
வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிதைந்து போன இறையில்லங்களைக் காணும் போது இதயம் இப்படித்தான் குமுறுகிறது. இப்போது நினைத்தாலும் நெஞ்சுக்குள் எரிமலை கனன்று நெருப்புத் துளிகளாய்ச் சிதறும் கண்ணீர்த் துளிகள்... அந்த நாளின் வெம்மை மறவாத பெருமூச்சுக்கள்...!
வரலாறு மறக்காத வரலாற்றின் வடுவாக அமைந்து விட்ட அந்தத் துயர நிகழ்வு நடந்து இருபத்தொரு வருடங்களாகி விட்டன. 1996 ஒக்டோபர் இறுதி வாரம் இன பந்துக்களாக வாழ்ந்த நாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் பந்துகளாக உதைத்து விரட்டப்பட்டோம். வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்கள் யாவரும் ஒரு வாரத்தினுள் வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வெளியேறுவதற்கு இருமணிநேர அவகாசமே வழங்கப்பட்டது.
'இருமணிநேரம் தருகிறோம்
உயிருடன் உங்களை விடுகிறோம்
எல்லாம் உங்கள் நன்மைக்கே
எடுப்பதை எடுத்துப் புறப்படுங்கள்
எல்லாம் நாமே காத்திடுவோம்
இனியொரு நாளில் அழைத்திடுவோம்'
என்று புலிகள் கூறியதும் கையிலிருந்த பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் செல்கையில், இடைவழியில் வழி மறித்து, 'பொன்னும் பொருளும் எமக்கே சொந்தம். ஈழத்தைக் கடப்பதற்கு இருநூறு போதும் என்று அத்தனையும் அபகரித்து பண மூடைகளாகவும் தங்கநகை மூடைகளாகவும் அபகரித்துச் சென்றதும் அழிக்க முடியாத மனத்தடங்களாகும்.
'வஞ்சமின்றின் கையசைத்த
பிஞ்சுக் குழந்தைகளின்
மஞ்சாடி நகைகளையும்
நெஞ்சிலே இரக்கமின்றி
மிஞ்சாது பறித்துச் சென்ற கொடூரம் என்றும் மறக்கக்கூடியதல்ல...
வட மாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட கறுப்பு ஒக்டோபர் மாதமானது இலங்கை வரலாற்றில் இரண்டு கறுப்பு பக்கங்களைக் கொண்டுள்ளதாகும். 1990 ஒக்டோபரில் வட மாகாண முஸ்லிம்கள் தமது தாயத்தின் ஐந்து மாவட்டத்திலிருந்தும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டது வரலாற்றில் பதிவுகளைப் பெற்றுள்ள போதும் அது ஒரு பலவந்த வெளியேற்றமாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வெளியேற்றத்தின் போது முஸ்லிம்களது அசையும் அசையாச் சொத்துக்கள் அனைத்தும் கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவம் இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பாரிய கொள்ளைச் சம்பவமாக இருந்த போதும் அது வரலாற்றில் போதுமான அளவு உள்வாங்கப்படவில்லை. அல்லது அதற்குரிய சரியான இடம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை. வெளியேற்றம், கொள்ளையடிக்கப்பட்டவை ஆகிய இரு கறுப்பு பக்கங்களைக் கொண்ட இருபத்தொரு கறுப்பு ஒக்டோபர் மாதங்களைக் கடந்து விட்ட போதும், யுத்தம் முடிவுற்று சமாதான சூழ்நிலை ஏற்பட்டு மூன்று வருடங்கள் கடந்து விட்ட போதும் இம் மக்களின் மீள்குடியேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது.
கடந்த காலங்களில் சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான நிறுவனமும் வட மாகாண முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன என்பதே கசப்பான உண்மையாகும்.
இலங்கை இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரின் போது புலிகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்ட அகதி முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றங்கள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. நிச்சயம் அவர்கள் மீது கரிசனை செலுத்தியாக வேண்டும். கடந்த காலங்களில் வன்னியிலிருந்து வந்து முகாம்களில் வாழ்ந்த தமிழ் மக்களுக்காக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் நிறுவனங்களும் முஸ்லிம் கவுன்சிலும் மனிதாபிமான உதவிகளைப் புரிந்த வேளையில் அவர்களுடன் வட மாகாண முஸ்லிம்களும் இணைந்து உதவிகள் புரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்துக்கு சர்வதேச நிறுவனங்களும் நாடுகளும் உதவுவதை வட மாகாண முஸ்லிம்கள் வரவேற்கின்றனர். எனினும் இரு மணி நேர அவகாசத்தில் அசையும் அசையாச் சொத்துக்கள் யாவும் கொள்ளையிடப்பட்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் இரு தசாப்த காலமாக அகதி முகாம்களில் படும் அவலங்களை சர்வதேச நாடுகளும் உதவி வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஏன் கண்டு கொள்ள மறுக்கின்றன? இவர்களின் பார்வையில் வட மாகாண முஸ்லிம்கள் மனித இனமில்லையா? திட்டமிடப்பட்ட புலிகளின் இனச் சுத்திகரிப்புப் புரியவில்லையா? மனித உரிமைகள் பற்றிக் கூக்குரலிடும் நிறுவனங்களுக்கு வட மாகாண முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை இன அழிப்புக்குச் சமமானது என்பது தெரியவில்லையோ?
இனப்படுகொலை மட்டும் இன அழிப்பு அல்ல. இன அழிப்பு என்பது ஓர் இனத்தை பகுதியாகவோ பூண்டுடனோ அழித்தொழிக்கும் திட்டமிட்ட நோக்கம் கொண்டதாகும். 1948ல் இன அழிப்புக்கு (புநழெரனைந) எதிரான சாசனம் ஐக்கிய நாடுகள் பேரவையால் உருவாக்கப்பட்டது.
இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை ஐ.நா. சாசனம் பின்வருமாறு வரையறை செய்கின்றது.
- ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது.
- ஓர் இனத்துக்கு அல்லது குழுமத்துக்கு வலிந்தும், திட்டமிட்டும் பாரிய உடல், உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது.
- சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது.
- இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காமல் கொடுமைகள் புரிதல்.
- பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவமான அடையாளங்களை அழித்தல்.
இன அழிப்பு நடவடிக்கைகள் எவை என்பதை மேற்கூறிய சாசனங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன. இச்சாசனத்தின் அடிப்படையில் சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவதும், பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவ அடையாளங்களை அழித்தலும் இன அழிப்புக்குச் சமமான குற்றங்களாகும். இவை இரண்டுமே வட மாகாண முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மனித உரிமை நிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பும் இது பற்றி அறியாதவைகளல்ல. இத்தகைய நிலைப்பாட்டை எவ்வாறு அழைப்பது? சர்வதேச நாடுகளினதும் ஐ.நா.சபை அமைப்பினதும் இரட்டை வேடமா? இனவாதமா? இதுவரை காலமும் ஐக்கிய நாடுகள் சபையும் வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் கண்மூடித்தனமாகவே இவ்விடயத்தில் நடந்து கொண்டுள்ளது. வன்னி அகதிகளை மீளக் குடியேற்றும்படி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் ஐ.நா. சபை என்றாவது வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றும்படி வலியுறுத்தியுள்ளதா?
அது மட்டுமன்றி சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் 2008க்கு முன்னர் பாதிக்கப்பட்ட அகதிகள், 2008க்கு பின்னர் பாதிக்கப்பட்ட அகதிகள் என இரண்டாகப் பிரித்து, 2008க்கு பின்னர் அகதிகளானவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு, வீட்டுத் திட்டங்களும் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன. இரு தசாப்தங்களுக்கும் மேலாக அல்லலுறும் வட மாகாண முஸ்லிம்கள் 2008க்கு முன்னர் அகதிகளானவர்கள் எனப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வட மாகாண முஸ்லிம் அகதிகள் மிகவும் விரக்தியுள்ள நிலையில் தொடர்ந்தும் துயர வாழ்க்கை வாழ்கின்ற நிலையே தற்போதைய நிலவரமாகும்.
அண்மையில் மடுவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சர்வதேச நாடுகளும் அரச சார்பற்ற நாடுகளும் வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் அவர்களை மீள்குடியேற்ற உதவுவேன். என வாக்களித்துள்ளமைவரவேற்கக்கூடியதாகும். எனவே இது விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கூடிய அக்கறையுடன் செயற்பட வேண்டியிருப்பதுடன், வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்காக பிரார்த்திக்க வேண்டியது இலங்கை முஸ்லிம்கள் யாவரதும் கடமையுமாகும்.
Post a Comment