Header Ads



தியாகமில்லாமல் சொர்க்கம் புக நினைக்கும் இலங்கை முஸ்லிம்கள்

Abu Sayyaf

ஹஜ் பெருநாள் இன்னும் சில தினங்களில் எம்மை நெருங்கி வருகிறது. உழ்கியா. இன்று இலங்கை முஸ்லிம்களின் இருப்பை தீர்மானிக்கும் விடயமாக மாறிவிடுமோ என எண்ணும் அளிவிற்கு பயமுறுத்துகிறது. இது பர்ளு அல்ல, சுன்னத்து தான் என ஆலிம்கள் அலறும் நிலை. பொளத்த நாட்டில் பசுவதை பற்றி சற்று யோசிக்கத்தான் வேண்டும் என முஸ்லிம் அரசியல்வாதிகளின் முனுமுனுப்புக்கள் மெல்ல காற்றில் கலக்கிறது.

மேய்ச்சல் வெளிகளில் மாடுகளை சந்தோஷமாக பிடித்து வந்து உழ்கியா கொடுத்த எமக்கு மேர்வின் சில்வாவிடம் அனுமதியெடுக்கும் நிலை. மேர்வின் சில்வாவின் கருத்துக்களை இஸ்லாமிய சஞ்சிகைகளும், இணையங்களும் வெளியிடும் கையறு நிலை. மாடு அறுக்கவும் ஜம்மியதுல் உலமா மாநாடு போடும் காலமிது.

கடந்த வாரம் மாளிகாவத்தையில் முஸ்லிம்கள் அதிகாலையில் சுற்றி வளைக்கப்பட்டு மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். முகமூடி போட்ட தலையாட்டிகள் மட்டும் தான் இல்லாத குறை. இந்த செயல் எதை சொல்ல வருகிறது. முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்றா? அல்லது பயங்கரவாதம் மாளிகாவத்தையில் உள்ளதென்றா? வனாத்தமுல்லையும், தொட்டலங்கையும், லக்கியும் துமிந்தவும் சுட்டுக்கொண்ட கொடிகாவத்தையும் அமைதியாக நித்திரை செய்கையில் மாளிகாவத்தை மட்டும் விளித்திருக்கிறது. சூத்திரம் புரியவில்லை.

கிறிஸ் நபர்கள், மத்திய கொழும்பு முஸ்லிம் வீடுகள் தரைமட்டமாக்கப்படும் “புதிய நகர் திட்டம்”, நாளைய தெஹிவலை முதல் இதர பகுதிகள் வரை முஸ்லிம்களின் இருப்பு தொடர்பான அச்சம் என குழம்பி நிற்கிறது தெற்கிலங்கை. அன்று ஜீலியன் ரிச்சர்ட்ஸ் ஜெயவர்த்தன கூறியது போல் “முஸ்லிம்கள் வேக வேகமாக குவியும் கொழும்மபை விட்டு அதே வேகத்தில் வெளியேறுவார்கள்” என குறிப்பிட்ட வார்த்தைகள் உண்மையாகிவிடுமோ எனும் அச்சம் வேறு மெல்ல விஸ்வரூபம் எடுக்கிறது. இது தெற்கு.

கல்முனை நகர சபைக்காக சந்தி சிரிக்கும் முஸ்லிம்கள். ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் முஸ்லிம்கள், பொத்துவில்லின் நிலவிவகாரம், கிண்ணியாவின் கெடுபிடி என கிழக்கிலும் பிரச்சனைகளின் அணிவகுப்பு.

புத்தளத்தில் ஒரு பொலிஸ் கொல்லப்பட்டதற்காக பொலிஸ் திணைக்களமே போர்கோலம் பூண்டு நிற்கிறது. அநுதராதபுரத்தில் பொலிஸார் வேடிக்கை பார்க்க பேரினவாதம் சுவர்களை தகர்க்கிறது. கற்பிட்டியில் கெடுபிடி செய்கிறது.

வடக்கில் மீண்டும் குடியேற முடியாத முடங்கிய சமுதாயமாக முஸ்லிம்கள் உள்ளனர். அரசியல் கட்சிகளின் அஜன்டாக்கள் தான் இவர்களின் மீள்குடியேற்றங்களை நிர்ணயிக்கின்றன. பொலிவிழந்த வாழ்க்கை. வாழ்தல்.


ஆக மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்களிடம் ஒரு நிச்சயமற்ற வாழ்வியல் ஒழுங்கே காணப்படுகிறது. இருப்பு தொடர்பிலான அச்சம், வாழ்தல் தொடர்பிலான பயமென ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் நிம்மதியின்றி தவிக்கும் நாட்கள் இவை. சொல்லப்போனால் உல்லாசமாக வாழ்ந்த சோனகரிற்கான சோதனைக்காலமிது.

ஐக்கியம், ஒற்றுமை, ஒரு தலைமைத்துவம் என எல்லோரும் சொல்கிறார்கள். எழுதுகிறார்கள். நேற்று பிரிந்து கட்சி ஆரம்பித்தவரும் இதைத்தான் சொல்கிறார்கள். காலம் காலமாக கட்சியில் பிரியாமல் இருப்பவரும் இதைத்தான் சொல்கிறார். இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு படி மேலே போய் 3-103 ஆயத்தை உரக்க முழங்குகிறது.

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனைகள் இடியப்பக்கடையில் ஆரம்பித்து இணையத்தளம் வரை விரிவாகவும் விளக்கமாகவும் ஆராயப்படுகின்றன. ஆனால் தீர்வுகள் மட்டும் சரியாக வருவதாக தெரியவில்லை. குருட்டுப்பார்வையால் கண்டதை ஊமை மொழியால் விளக்கம் தரும் நிலையிது.

இலங்கை முஸ்லிம்கள் தங்களை நிறையவே மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஹஜ்ஜில் கூட எகொனமி, பிறீமியம், லக்சரி என எக்குலுவ்சிப் பக்கெஜ்களை கொண்ட சமூகமல்லவா நாம். அப்பிள் போன்கள் அரசியல் செய்யும் சமூகத்திற்கு சொந்தக்காரர்கள் அல்லவா நாம். மய்யத்து வீட்டிற்கும் தம்-புரியாணி அனுப்பி உறவு பாராட்டும் சமூகமல்லவா இலங்கை சோனவர்கள். தியாகமில்லாமல் சொர்க்கம் புக நினைக்கும் மனிதர்கள் நாம்.

நமது வாழ்க்கை தடம் முற்றிலும் மாற்றப்படல் வேண்டும். இலங்கையின் வருங்கால மற்றும் நிகழ்கால சவால்களிற்கு முகங்கொடுக்கவல்ல ஒரு சமூகமாக நாம் மாற பர்மா (மியன்மார்) முஸ்லிம்களிடம் கற்க நிறையவேயிருக்கிறது. அதே போல் இஸ்ரேலின் கிழக்கு ஜெரூஸலேம் பகுதியில் வாழும் அராபிய முஸ்லிம்களின் சமூக அரசியல் ஒழுங்குகள் தொடர்பாக கற்கவும் நிறையவேயிருக்கிறது.

No comments

Powered by Blogger.