Header Ads



கடாபிக்காக இலங்கையில் ஜனாஸா தொழுகை நடத்துமாறு கோரிக்கை

படுகொலை செய்யப்பட்ட லிபியத் தலைவர் முஅம்மர் கடாபி மற்றும் சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் சுல்தான் பின் அப்துல் ஆகியோரின் மறைவுக்காக சகல பள்ளிவாசல்களிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் அலவி மெளலானா மற்றும் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா சகல பள்ளிவாசல் கதீப்மார்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

42 ஆண்டுகளாக லிபியாவை ஆட்சி செய்த தலைவர் முஅம்மர் கடாபி கடந்த வியாழக்கிழமை அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் லிபிய கிளர்ச்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடாபியின் மறைவானது அந்நாட்டு மக்களை மட்டுமல்லாது இலங்கையில் உள்ள சகல இன மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் எங்கள் நாட்டின் உற்ற நண்பனாகவும், எமது நாட்டுக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கிய தலைவராவார்.

ஏகாதிபத்தியவாதிகள் நில ஆக்கிரமிப்பு மற்றும் வளங்களை சூறையாடுவதற்காக பயங்கரவாதிகள் என்ற போர்வையில் மேற்கொண்டு வரும் சட்டவிரோத நட வடிக்கையில் லிபியத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்விதமான நட வடிக்கைகளுக்கு எதிராக அந்நிய நாடு களுக்கு எதிராக அவர்கள் சகலரும் அணிதிரள வேண்டியது காலத்தின் அவசிய தேவை எனவும் தெரிவித்தனர்.

அதேநேரம் எமது அயல் நாடான சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் பல்வேறு மனிதாபிமான உதவிகளை நாம் மறந்துவிடலாகாது. எமது நட்பு நாடுகளின் தலைவரின் இழப்பானது ஈடு செய்ய முடியாது எனவும் மேல்மாகாண ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டனர்.

மேற்படி இருவரின் இழப்புக்களுக்காகவும் எமது சகோதரர் என்ற வகையிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சகல பள்ளிவாசல்களிலும் ஜனாஸா தொழுகை நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் மறுவாழ்வுக்காகவும் அந்நாடு களில் சமாதானம் மலர்ந்து மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.

No comments

Powered by Blogger.