Header Ads



''தூரத்து விடிவெள்ளி''

(வடக்கு முஸ்லிம்கள் அவர்களின் தாயகப் பிரதேசத்திலிருந்து இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டு 21 வருடங்கள் நிறைவடைவதையிட்டு யாழ் முஸ்லிம் வலைத்தளம் நடத்திய கவிதைப் போட்டிக்காக அனுப்பிவைக்கப்பட்ட கவிதை இது)
 
    - அபு அப்பாஸ் -

தூரத்து விடிவெள்ளி தெரிகிறது
நாம் மீண்டும் தாயகம் செல்வோமென்று
என் பெரியம்மா சொன்ன கவிதை
இரண்டாயிரத்து ஒன்பதிலே ஆனதே உண்மையாக!

தொண்ணூரில் எம்மை வேரறுத்து
வீடற்ற அகதிகளாக்கியோர் எங்கே
அணியணியாய் நிற்க வைத்து
கொள்ளையிட்ட எமதுடைமைகள் எங்கே..?

பாலகியின் காதறுத்து பிடுங்கிய காதணியும்
பாலகனிடம் பிடுங்கியெடுத்த பால்மா பக்கெட்டும்
மூடைமூடையாய் பறித்தெடுத்த பணமும் பொன்நகையும்
முல்லைத்தீவு அழிவை தடுத்து நிறுத்தியதா..?

வடக்கு முஸ்லிம்களின் முதுசங்களை கொள்ளையிட்டு
எந்தவுரிமையில் ஏலத்தில் விற்றனர் புலிகள்
எமது பாட்டன் முப்பாட்டன் சொத்துகளை
முண்டியடித்து வாங்கி வீட்டிலடுக்கியவர்கள் இன்றெங்கே..?

இரண்டுமணிநேர அவகாசத்தில் முஸ்லிம்களை துரத்திய வேளையில்
அழுததே வானமும் பூமியும் தண்ணீர் பீறிடவே
அத்தண்ணீர் நந்திக் கடலிலும் முல்லைக்கடலிலும்
ஒன்று சேர்ந்து சுற்றி வளைத்ததாலோ
தப்பியோட முடியாமல் முடங்கினரே முள்ளி வாய்க்காலிலே..!

தாய் மண் விரட்டியவர்களை தெற்கே தாய்நாமாக  வரவேற்று
இப்பாரிய பிரதேசம் உங்களுடையது என்று கூறியதுவே
கொடுஞ்செயல் செய்தவர்களை நிலம் சுருங்கி மைதானளவிலாகி
செய்ததே வெள்ளைக் கொடியுடன் சரணடையவே..!

முழுத் தமிழினத்தையும் பலிகொடுத்தாவது தமிழீழத்தை
வென்றெடுப்போமென்றனர் புலிகள் என்பத்தியெட்டில்
மூன்று இலட்சம் தமிழர்களை அடகுவைத்து
தலைவரை மட்டும் காக்க முனைந்தனரே இறுதியிலே..!

முஸ்லிம்களை பரம்பரை விரோதிகளாக சித்தரித்து
தமிழ் முஸ்லிம் நட்பை சீர்குலைத்த பாவிகள்
நந்திக் கடலடியில் அடியோடு அழிவுற்றதால்
தெரிந்தது விடிவெள்ளி மீண்டும் ஒருமுறை..!

தமிழ் முஸ்லிம் உறவு மீண்டும் அரும்புகையில்
அரசியல்வாதிகள் வைக்க முயல்கின்றனர் ஆப்புதனை
அதனையுடைத்தெறிந்து மீண்டும் கட்டியெழுப்புவோம்
ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகள் காலத்து நிலமையினை..!

துப்பாக்கி ஓசைகளும் குண்டுச் சத்தங்களும்
ஓய்ந்துவிட்ட வேளையிலே அச்சங்கள் நீங்கிடவே
மக்களின் பரிதாப ஓலங்கள் அடங்கிடவே
நிம்மதிப் பெருமூச்சு நிலவி ஞாபகப்படுத்துகிறதே  எழுபதுகளை..! 

முஸ்லிம்கள் மட்டுமன்றி தமிழர்களும் பார்க்கட்டுமே
மனதில் அந்த சாந்தியான விடிவெள்ளியை
இறைவனை வேண்டுகின்றோம் அப்பாக்கியத்தை நமக்களிக்க
தமிழர்களுக்காக வேண்டுகின்றோம் இஸ்லாத்தின் நேர்வழியை..!

வாழ்ந்தனுபவித்த மூதாதையர் மாண்டு விட்டதால்
உற்சாகப்படுத்துவோம் இளந்தலைமுறையினரை இனிய வழியில்
இனிவரும் இருபத்தியோராவது வருடத்திலாவது
உறுதிப்படுத்துவோம்  வடக்கிலவர்களின் மீள்குடியேற்றத்தை..!

No comments

Powered by Blogger.