Header Ads



வாழத் துடிக்கும் வடக்கு முஸ்லிம்களும், சவால்களும்

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்.
(கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை இது. அக்கட்டுரையின் பலவிடயங்கள் தற்காலத்திற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் அதனை இங்கு மீளப்பதிவிடுகிறோம்)

வடமாகாண முஸ்லிம்கள் தமது பாரம்பரிய தாயகப் வாழ்விட பிரதேசங்களிலிருந்து புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் 20 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. சிங்கள சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் யாழ்ப்பாணம் எமது மூதாதையர் வாழ்ந்த பகுதி எனக்கூறி அங்கு வாழப்புறப்பட்டு அதற்கு அரசாங்க ஆசியும் கிடைத்திருக்கும் இவ்வேளையில் யாழ் முஸ்லிம்களின் வரலாற்றை சுருக்கமாகவும், வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்தில் எதிர்நோக்கும் சவால்களை சற்று விரிவாகவும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

யாழ் முஸ்லிம்களின் வரலாறு

வடக்கின் தலைநகரம் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் தாயகமும் வடக்கே என்பதை நிரூபிக்கும் வகையில் வரலாற்று ஆசிரியர்கள் 7 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றமைக்கான வரலாற்று சான்றுகளை பல சந்தர்ப்பஙகளில் முன்வைத்துள்ளனர்.

இவர்களில் உடநபாசநn என்ற ஆங்கில அதிகாரி மற்றும் இப்னு பதூதா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அரேபியர்கள் யாழ்ப்பாணத்துடன் கொண்டிருந்த வியாபாரத் தொடர்புகளே 7 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் யாழ்பாணத்தில் இஸ்லாம் பரவவும், அங்கு முஸ்லிம்கள் வாழவும் வழிகோலியது என்பது வரலாற்று ஆசிரியர்களின் வாதமாகும். வரலாற்று ஆசிரியர் இப்னு பதூதாவின் வாதப்படி, போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் செல்லும்வரை யாழ்ப்பாணத்தின் தலைநகராக விளங்கிய நல்லூரில் முஸ்லிம்களே பிரதான வர்த்தகர்களாக விளங்கியதுடன், கொழும்புத்துறையில் முஸ்லிம் வியாபாரிகளின் படகு இறஙகுத்துறையும், அதனையண்டி அவர்களின் களஞ்சியசாலைகள் மற்றும் குடியிருப்புகள் காணப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

போர்த்துக்கேயர் தமது ஆதிக்கத்தை நாட்டின் பல பகுதிகளுக்கு விஸ்தரித்தையடுத்து அவர்களின் அடுத்த இலக்காக முஸ்லிம்களின் வியாபார மேலாதிக்கத்தை ஒடுக்கி, அவர்களை மதம் மாற்றுவதை பிரதான இலக்காக கொண்டிருந்தனர்.

இதனால் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செலுத்தி வந்த வியாபார ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அத்துடன் ஆயிரக்காணக்கான முஸ்லிம்கள் இஸ்லாம் சமயத்திலிருந்து மதம்மாற மறுக்கவே அவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பல நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் சிறைப்படுத்தவும்;பட்டனர்.

போர்த்துக்கேயரின் வெளியேற்றத்தையடுத்து ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்த போதும் முஸ்லிம்கள் மீது மீண்டும் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் காலப்பகுதியில் பல முஸ்லிம் மஸ்ஜித்துகள் திட்டமிட்டு இடிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த மற்றும் அவர்களின் சமய அடையாளச் சுவடுகளை இல்லாமல் செய்வதற்காக குறித்த பகுதிகளில் வேறு சமயங்களைச் சார்ந்தவர்கள் குடியேற்றப்பட்டதுடன், அவர்களின் சமய வழிபாட்டுத்தலங்களும் நிறுவப்பட்டன.

இவ்வாறு போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரின் காலப்பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை காரணமாக அவர்கள் யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள பல பகுதிகளுக்கும் இடப்பெயர நேர்ந்தது.

அதேவேளை யாழ்ப்பாண முஸ்லிம்களும் இலங்கையின் ஆதிக்குடிகள் என்பதற்கு வரலாற்று நூல்களுடன், யாழ்ப்பாண வழக்கிலுள்ள சில பெயர்களும் அதற்கு சான்றுகளாக உள்ளன. மிருசுவில் பகுதியிலுள்ள உசன், சாவகச்சேரி மற்றும் சங்கத்தானுக்குமிடையிலான சோனகன் புலவு ஆகியன முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிகளாக இருந்துள்ளன.

நல்லூர் கோயிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் கூட ஒரு காலத்தில் முஸ்லிம்களின் குடியிருப்புகளாக இருந்துள்ளமைக்கு அந்தப்பகுதி சோனகன் தோப்பு என அழைக்கப்பட்டதையும், அப்பகுதியில் காணப்படும் ஸியாரம் எனப்படும் அடக்கஸ்தலமும் சிறந்த உதாரணங்கள் எனலாம்.

அத்துடன் (பாரம்பரிய தாய்) காணி உறுதிகள் மூலம் குடாநாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளிலுள்ள காணிகளின் பெயர்கள் சோனகன் வடவி, சோனக வெளி, சோனக வாடி, சோனக அடி, சோனகரடைப்பு என்ற பெயர்களில் அழைக்கப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

அதேநேரம் ஓல்லாந்தரின் வெளியேற்றத்தையடுத்து ஆங்கிலேயர்களின் காலப்பகுதியானது யாழ்ப்பாண முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதெனலாம்.

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினர். மஸ்ஜித்துக்களை நிறுவினர். எனினும் அவர்கள் முன்னர் போன்று வியாபாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தமுடியாமல் போனதுடன், அவர்கள் தமது முன்னயை வாழ்வியல் பிரதேசங்களையும் இழக்க நேரிட்டது.

தமிழ் சமூகத்துடன் உறவு

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களைவிட குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் நட்புறவை கொண்டிருந்தமை பல ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டும் விடயமாகும். இந்த உறவுக்கு பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. அதில் ஒன்றுதான் போர்த்துக்கேயர் தமிழ் இந்துக்களை பலாத்கார சமயமாற்றத்திற்கு உட்படுத்தியபோதும், முஸ்லிம்களை போர்த்துக்கேயரால் அவ்வாறான சமயமாற்றத்திற்கு உட்படுத்த முடியவில்லை. இதனால் முஸ்லிம்களில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். முஸ்லிம்களின் சமயப்பற்றைக் கண்ட பல நூற்றுக்கணக்கான இந்துக்கள் போர்த்துக்கேயருக்கு அடிபணியாமல் இந்து சமயத்தை தொடர்ந்தும் பின்பற்ற வழியேற்பட்டது.

இச்சம்பவங்கள் மூலம் ஆரம்பித்த தமிழ் முஸ்லிம் உறவானது 1983 ஆம் அண்டு அரசாங்க ஆதரவுடன் தென்னிலங்கையில் சிங்கள குழுக்கள் மேற்கொண்ட இனவன்முறைத் தாக்குதலில் முக்கிய கட்டத்தையடைகிறது. தென்னிலங்கையிலிருந்த வடக்கு தமிழர்களை அங்கிருந்து ஜுப்பாவும், தொப்பியும் அணிவித்து பாதுகாப்பாக மீண்டும் வடக்கு அழைத்துவந்த பெருமை முஸ்லிம்களைச்சாரும்.

எனினும் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதி தமிழ், முஸ்லிம் உறவுக்கு சவாலாக அமைந்த காலமாகும், தமிழ் ஆயுதக்குழுக்கள் தமது சந்தேகப்பார்வையையும், அடாவடித்தனங்களையும் முஸ்லிம்கள் மீது திருப்பிய காலப்பகுதி இதுவெனலாம்.

பலாத்கார வெளியேற்றம்

இவ்வாறு தமிழ் ஆயுத குழுக்களின் சந்தேகங்கள் தொடரவே 1990 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் புலிகளினால் நியாயபூர்வ காரணங்கள் எதுவுமே கூறப்படாது பலாத்காரமாக வெளியேற்றப்படுகின்றனர்.
குறிப்பாக யாழ் முஸ்லிம்கள் 2 மணித்தியால அவகாசத்தில், 200 ரூபாயுடன், கையில் ஒரு சொப்பிங் பேக் அளவு உடுப்புகளுடன் மாத்திரம் புலிகளினால் ஆயுத முனையில் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இதன் மூலம் வடக்கு முஸ்லிம் சமூகமானது தென்னிலங்கை அகதி முகாம்களிலும், அறியாத முஸ்லிம் உறவுகளின் வீடுகளிலும் அடைக்கலமடைய நேரிட்டதுடன், அவர்களின் பல பில்லியன்கள் பெறுமதியான அசையும், அசையா சொத்துக்களை இழக்கவும் நேரிட்டது. தமிழ், முஸ்லிம் உறவில் இச்சம்பவம் ஒரு பேரிடி என்றபோதும், இந்த வெளியேற்றத்திற்கும் அப்பாவி தமிழ் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்பதே பல்லாயிரக்கணக்கான வடக்கு முஸ்லிம்களின் வாதமாக இருந்தது.

தொடர்ந்து வந்த காலப்பகுதியில் புலிகள் யாழ்குடாநாடு மற்றும் வடக்கின் சில பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சில விரல்விட்டு எணணுமளவு முஸ்லிம் வர்த்தகர்கள் வடக்குச்சென்று தமது வர்த்தக நடவடிக்கைளை மீள ஆரம்பித்தனர். தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு பிரபா - ரணில் ஒப்பந்தத்தையடுத்து, வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு புலிகள் வருத்தம் தெரிவித்த நிலையில் ஒருசில முஸ்லிம் குடும்பஙகள் மீண்டும் வடக்கில் மீளக்குடியேறச் சென்றன. எனினும் வடக்கு முஸ்லிம்களிடையே புலிகள் குறித்து நிலவிய பாரிய சந்தேகமானது அவர்களின் மீள்குடியேற்றத்தை தாமதிக்கவே செய்தது.

தற்போதைய நிலை
கடந்த வருடம் உள்நாட்டில் விடுதலைப்புலிகள் அடைந்த தோல்வியானது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை மீண்டும் அவர்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறவும், மஸ்ஜித்துகளை மீளநிர்மாணிக்கவும், வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதென்பது வடக்கு முஸ்லிம்களின் வாதமாகவுள்ளது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்திலும், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடமாகாணத்திலும் தற்போது மீளக்குயேறியுள்ளதாக அறியவருகிறது. இருந்தபோதிலும் இந்த விகிதம் வெறுமனே 5 சதவீதமேயாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டில் கடந்தவருடம் விடுதலைப் புலிகள் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர், அரசாங்கத் தரப்பானது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. இதனால் இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் அநேகரிடையே தமது பாரம்பரிய பிரதேங்களில் மீண்டும் குடியேறுவது குறித்த ஆர்வம் மேலோங்கியது.
இருந்தபோதிலும் இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களை தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேற்றுவதில் அரசாங்கம் காண்பித்த மெத்தனப் போக்கும், மீளக்குடியேறிய முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காண்பிக்காமையும்;, சர்வதேசத்தின் உதவிகள் மீளக்குடியேறும் மக்களை சென்றடைவது தாமதமடைவதும், மீளக்குடியேறுவது என்ற வடக்கு முஸ்லிம்களின் கனவை தகர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசாங்கத்திற்கு அக்கறையில்லையா?

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டவுடன் வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியமர முடியுமெனவும் அவர்களுக்காக உதவிகள் வழங்கப்படுமெனவும் அரசாங்கம் அறிவித்தது. அதற்கும் ஓருபடி மேலே சென்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வடக்கு முஸ்லிம்கள் மீளக்குடியேற்றப்படுவர் என்றார். எனினும் அவரின் வாக்குறுதி கடந்த மே மாதத்துடன் காலாவதியானபோதும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் ஆமை வேகத்திலேயே நடைபெறுகிறது. ஏற்கனவே மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு உரிய இழப்பீடுகள், தொழில் வாய்ப்புகள், நட்டஈட்டுக்கான கொடுப்பனவுகள் என்பன உரியமுறையில் வழங்கப்படாமையே ஏனைய முஸ்லிம்கள் மீளக்குடியேறாமைக்கு காரணமாக கூறப்படுகிறது.

சிங்கள சமூகத்தினரை யாழ்ப்பாணத்தில் குடியேற்ற அரசாங்கம் காண்பிக்கும் ஆர்வம்கூட, புத்தளத்து அகதி முகாம்களில் அல்லற்படும் வடக்கு முஸ்லிம்களை அவர்களின் சொந்தப்பிரதேசங்களில் மீளக்குடியமர்த்துவதில் காட்டப்படுவதில்லை என்பதுதான் இங்கு கவலைக்குரிய விடயம்.ஓருவகையில் அரசாங்கத்தை குற்றம்சொல்லி பயனில்லை என்றே கூறவேண்டும். ஏனெனில் தமிழர் தரப்பின் மீள்குடியேற்றத்தில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் அக்கறை செலுத்துகின்றமை காரணமாக அவ்விடயத்தில் அரசாங்கம் ஓரளவு ஆர்வம் காட்டுகிறது.

அவ்வாறே யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளில் சிங்கள சமூகத்தை குடியேற்றவும் அரசாங்கமும் அக்கறை காண்பிக்கிறது. இதற்கு பௌத்த பேரினவாத சிந்தனையும் துணைநிற்கிறது. ஆனாலும் இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. இதனால் அரசாங்கம் சொற்பளவில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்கள் தொடர்பிலோ அல்லது புத்தளம் அகதி முகாம்களில் மீளக்குடியேறும் கனவுகளுடன் காத்திருக்கும் முஸ்லிம்கள் குறித்தோ ஆர்வம் காட்டப்போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

மௌனிகளான சர்வதேசம்

சர்வதேச சமூகம் வடக்கில் மீளக்குடியேறிய மற்றும் மீளக்குடியமர ஆர்வம் கொண்டுள்ள முஸ்லிம்கள் விடயத்தில் மௌனம் காப்பதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. அரசாங்க அமைச்சர் றிசாத் பதியுதீன்கூட இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இடம்பெயர்ந்து மீளக்குடியேறும் மக்களுக்கு யூ.என்.எச்.சீ.ஆர். 25 ஆயிரம் ரூபாய் வழங்குகிற போதும், மீளக்குடியமறும் வடக்கு முஸ்லிம்கள் இந்த நிதியுதவயை கேட்டால் நீங்கள் பழைய அகதிகள் எனகூறப்படுவதாகவும், இவ்விடயத்தை தான் ஜெனீவா வரை கொண்டுசென்றபோதும் பயன் கிட்டவில்லையெனவும் அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார்.

குருடர்களான முஸ்லிம் நாடுகள்

இங்கு நாம் முஸ்லிம் நாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டவேண்டும். பொதுவாக மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் செல்வந்த நாடுகளின் பட்டியலில் வைத்து நோக்கப்படுகிற போதும் இடம்பெயர நேரிட்ட வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அந்த நாடுகள் எந்த உதவியும் செய்யவில்லையென்ற குற்றச்சாட்டு நீடிக்கவே செய்கிறது.

முஸ்லிம் நாடுகள் தாராளமாக உதவ முன்வரும் பட்சத்தில் குறிப்பிடத்தக்க காலத்தில் வடக்கு முஸ்லிம் பிரதேசங்கள் அபிவிருத்தியை நுகரமுடியும். எனினும் எந்த முஸ்லிம் நாடு வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முன்வரும் என்பதுதான் கேள்வியாகவுள்ளது.இங்கு மற்றுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும்;. அதாவது வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்னும் சர்வதேசமயப்படுத்தப்படாமை, முஸ்லிம் நாடுகளின் உதவிகள் வடக்கு முஸ்லிம்களை சென்றடைய தாமதிப்பதற்கான முக்கிய காரணியாக விளங்குகிறது. வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்துவது முஸ்லிம் அரசியல் வாதிகளையும், முஸ்லிம் அமைப்புக்களையுமே சார்ந்துள்ளது.

வடக்கு முஸ்லிம்கள் குறித்த பிரச்சினைகளில் சர்வதேச முஸ்லிம் நாடுகள் தமது கவனத்தை செலுத்துமாயின் அரசாங்கத்தை நம்பியிராமலேயே வடக்கு முஸ்லிம் பிரதேசங்கள் மேம்பட வாய்ப்புள்ளது.

இந்திய அரசாங்கம் வடக்கு தமிழர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க முடியுமென்றால் ஏன் இந்த முஸ்லிம் நாடுகள் முன்வந்து இட்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களது தாயகப் பிரதேசத்தில் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வரக்கூடாது? இவ்வாறான ஒரு நிலை ஏற்படுமாயின் வடக்கு முஸ்லிம்களும் தொடர்ந்தும் அரசாங்கத்தை நம்பியிருக்கவேண்டி ஏற்படாதல்லவா?

முஸ்லிம் காங்கிரஸும், யாழ் முஸ்லிம்களும்.
வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகளை 2 தேர்தல் மாவட்டங்களாக வகைப்படுத்தலாம். கடந்த காலங்களில் வன்னி தேர்தல் மாவட்டமானது பல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும், அமைச்சர்களையும் கண்டுள்ளது. இவர்கள் மூலம் அந்த தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பல்வேறு நன்மைகளைப் பெற்றனர். எனினும் யாழ் தேர்தல் மாவட்டம் இதுவரை 2 முஸ்லிம் எம்.பி களையே கண்டுள்ளது. அவர்களில் ஒருவர் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த டாக்டர் இல்யாஸ் (புத்தளம்). மற்றவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சட்டத்தணி இமாம். இவர்களிருவருமே யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு எதையுமே பெற்றுக்கொடுக்கவில்லை என்பதே அம்மாவட்ட முஸ்லிம்களின் வாதமாக இருக்கிறது.

இந்நிலையிலேயே இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்ற கட்சியென தம்மைக் கூறிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ் குறித்து யாழ் முஸ்லிம்களிடையே நியாயமான கேள்விகள் எழுகின்றன. அதாவது ஒவ்வொரு தேர்தல்களிலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸிற்கு அதிகளவில் வாக்களிக்கின்றனர். அவர்களின் வாக்குகள் மூலம் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கடந்த காலங்களில் யாழ் முஸ்லிம்கள் தமக்களித்த வாக்குளினடிப்படையிலாவது தமக்காக ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸினால் ஏன் ஒதுக்க முடியாதென்பதுதான் அந்த நியாயமான கேள்வியாகும். முஸ்லிம் காங்கிரஸை தவிர்த்து ஏனைய எந்தக் கட்சியினாலும் யாழ் மாவட்ட முஸ்லிம்கள் சார்பில் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தற்போதைக்கு வழங்க சாத்தியமில்லை. எனவே இவ்விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சாதகமாக சிந்திக்கவேண்டிய தேவையிருப்பதை மறுக்க முடியாது.

இவற்றுக்கப்பால் தற்போதைய மீள்குடியேற்ற அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் தொடர்பில் சில ஐயுறவுகள் வடக்கு முஸ்லிம்களிடையே நிலவவே செய்கின்றன. பிரதியமைச்சர் கருணா என்றழைக்கப்படும் முரளிதரனின் கடந்தகாலச் செயற்பாடுகள் வடக்கு முஸ்லிம்கள் நம்பிக்கைக் கொள்ளும்படியாக இல்லை.

எனவே வடக்கு முஸ்லிம்களில் ஒருசாரார் தமது பிரச்சினைகள் இவர்கள் மூலம் தீர்க்கப்படாது என நம்புகின்றனர். இந்த நம்பிக்கை ஒருவகையில் நியாயமாகவே தோன்றுகிறது. இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் முஸ்லிம்களே தற்போது அதிகளவில் அகதிகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நாட்டில் அதிகளவிலான அகதிகளாகவுள்ள நிவையில அவர்களின் நம்பிக்கையைப் பெறவும், வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அதிக அக்கறை செலுத்தவும் வடக்கைச்சேர்ந்த தமிழர் அல்லது முஸ்லிமை மீள்குடியேற்ற அமைச்சராக நியமித்திருக்க முடியுமென்பதும் அந்த முஸ்லிம்களில் ஒரு தரப்பினரின் வாதமாகவுள்ளது.

நாட்டில் பௌத்த சமயத்தைப் பின்பற்றும் சிங்கள மக்கள் அதிகம் என்பதற்காக பௌத்தசாசன அமைச்சை சிங்கள சமூகத்தைச்சேர்ந்த ஒருவரிடம் கையளிக்க முடியுமென்றால் நாட்டில் இடம்பெயர்ந்து அகதிகளாக உள்ளவர்களில் முஸ்லிம்கள் அதிகம் என்ற நிவையில அவர்களை கவனிக்கும் அல்லது மீளக்குயேற்றும் அமைச்சை ஒரு முஸ்லிம் அமைச்சரிடமே ஒப்படைத்திருக்கலாம் என்பதும் வடக்கு முஸ்லிம்களின் அபிப்பிராயமாவுள்ளது.

வெளிமாவட்ட முஸ்லிம்களின் குமுறல்

வடமாகாண முஸ்லிம்கள் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டபோது அவர்கள் புத்தளம், அநுராதபுரம், குருநாகல், நீர்கொழும்பு மற்றும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் அடைக்கலமடைய நேர்ந்தது. தற்போது யுத்தம் ஓய்ந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதாக அரசாங்கம் பிரசாரம் செய்யும் நிலையில் வடக்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வாழும் பிரதேசங்களில், குறித்த வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களுக்கு சென்று மீளக் குடியமரலாம்தானே போன்ற பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக அறியவருகிறது.

இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தமது பிரதேங்களில் கடந்த 20 வருடங்களில் தொடர்ந்து தங்கியிருக்கின்றமை காரணமாக தமது மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் வாய்ப்பை இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்கள் தட்டிப்பறிப்பதாகவும், தொழில் வாய்ப்புகளிலும் இவர்களே செல்வாக்குச் செலுத்துவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுக்களில் ஒருபுறம் நியாயம் இருக்கவே செய்கிறது என்ற கசப்பான உண்மையை ஏற்றானாலும், வடக்கு முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டப்பின் வடக்கு மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பல்கலைக்கழகக் கோட்டா இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படாமைக்கான காரணத்தை வடக்கு முஸ்லிம்களினால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான். உண்மையில் இவ்விடயத்தில் செல்வாக்குச் செலுத்தியிருக்க வேண்டியவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளே.

அடிப்படைப் பிரச்சினைகள்
வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துவிடலாம் என்று சிலர் தப்புக்கணக்குப் போடுவதையும் தற்போது அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. உண்மையில் இது தவறானது. 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வடக்கு முஸ்லிம்களின் எணணிக்கை பலமடங்காக அதிகரித்துள்ளது.

இவர்களனைவரையும் மீளக்குயேற்றும் போது அவர்களிற்கான இருப்பிடங்களே பிரதான செல்வாக்குச் செலுத்தப்போகிறது. 1990 களில் ஒரு குடும்பமாக கானப்பட்டவர்கள் தற்போது 2 அல்லது 3 குடும்பஙகளாக பெருகியுள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் முன்னர் குடியிருந்த காணிகளில் ஒரு குடும்பததை குடியமர்த்தினாலும் ஏனைய குடும்பஙகளுக்கு எத்தகைய தீர்வை பெற்றுக்கொடுப்பது என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையல் புதிய காணிகளை அரசாங்கம் இம்மக்களுக்கு வழங்கவேண்டிய தேவையுள்ளது. அதில் வீடு கட்டுவதற்கான உதவிகளும் செய்து கொடுக்கப்படுவதுடன், புலிகளின் காலத்தில் கைவிடப்பட்ட உடமைகளுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு வழங்குவது குறித்தும் ஆராயப்படவேண்டும். வடக்கு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்களை மீள நிர்மாணிப்பதிலும், அவற்றை திறந்துவைப்பதிலும், வடக்கு முஸ்லிம் பிரதேசங்களை பார்வையிட காட்டப்படும் ஆர்வமும், ஊடகங்களுக்கு அறிக்கை அனுப்ப மேற்கொள்ளும் அவசரமும் ஏனைய விடயங்கள்; மீதும் செலுத்தப்பட வேண்டுமென்பதையே வடக்கு முஸ்லிம்கள் விரும்புகின்றனர்.

முஸ்லிம் கவுன்ஸில் மற்றும்
உலமா சபையின் பொறுப்புகள்
இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் தற்போதைய நிலையல் முஸ்லிம் கவுன்ஸில், அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்துவதுடன் ஒரு அமுக்கக்குழு போன்றும் செயற்படுகிறது. அகில இலங்கை உலமா சபையும் முஸ்லிம் மார்க்க விடயத்தில் செல்வாக்கை கொண்டுள்ளது.

எனவே இவ்விரு அமைப்புக்களும் இணைந்து வடக்கில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்கவும், மீளக்குடியேற காத்திருக்கும் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்கவும் முன்வரவேண்டும். எமது முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும், அரசாங்கத்திடமும் இந்த 20 வருடகாலத்தில் வடக்கு முஸ்லிம்கள் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தனர். எனினும் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை.

ஆகவே முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் உலமா சபை ஆகியன வடக்கு முஸ்லிம்களின் நலன்கருதி களத்தில் குதிக்க இதுவெ மிகச்சிறந்த தருணம். கொழும்பிலுள்ள முஸ்லிம் தூதுவராலயங்களின் படியேறியாவது வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தலாம். இதில் கிடைக்கும் சாதகங்களைக் கொண்டே வடக்கு முஸ்லிம்களின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுகொள்ள முடியும். வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஒவ்வொருவருட நிறைவிலும் முஸ்லிம் அரசியற் கட்சிகளும், அமைப்புக்களும் ஊடகங்களில் வடக்கு முஸ்லிம்களை நினைவு கூறுவதுடன் மாத்திரம் தமது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்வதன் காரணமாக அந்த முஸ்லிம்களின் இன்னல்கள் முற்றுப்புள்ளியின்றி தொடரவே செய்கிறது.

செயற்பாட்டு நடவடிக்கைகள் மாத்திரமே வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தருமென்பது வடக்கு முஸ்லிம்களின் நம்பிக்கையாகவுள்ளது. ஆம், உரியவர்கள் களத்தில் குதிப்பார்களா..??

No comments

Powered by Blogger.