Header Ads



கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு (பாகம்-3)

- அப்துல்லாஹ் -

1988 இல் முஹமட் என்பவர் ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டார். தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கொல்லப்பட்டார் என அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கூறியிருந்தனர். 1988இல் ஜுனைதீன் என்பவர்  ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால் நல்லூரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். ஜுனைதீனின் மோட்டார் சைக்கிள் ஆசை என்பவரால் பறித்துச் செல்லப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிள் இந்திய இராணுவத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டது.  இதற்கு பலிவாங்களாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ஜுனைதீன் முன்பு முஸ்லிம்கள் வாழாத யாழ் அராலி  பிரதேசத்தில் வாழ்ந்தார். அங்கு சென்ற சில மாட்டு வியாபாரிகள் இவரை  முஸ்லிம் பிரதேசத்துக்கு வருமாறு கூறி அங்கு சின்னப்பள்ளிவாசலுக்கு சொந்தமான ஓரிடத்தில் ஒரு வீட்டையும் அமைத்துக் கொடுத்திருந்தனர். இவர் ஊரைப் பிரிக்கும் ஒரு நபருடன் சேர்ந்து தனக்கு உதவி செய்தவர்களையே சுட்டுக்கொல்ல சபதமெடுத்த வேளையில் தான் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். அல்லாவிடின் பத்து முஸ்லிம் வாலிபர்களை இவர் சுட்டுக் கொன்றிருப்பார்.


1990 ஜனவரியில் சாம்சன் என்பவரிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருந்து தப்பியோடிய நபரொருவர் தனது துப்பாக்கியை ஒழித்து வைக்குமாறு கூறி கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்த நபரை பிடித்த ஈ.பி.ஆர். எல்.எப் இனர் சாம்சனையும் கடத்தி அடித்து கொலை செய்து விட்டனர். இதே விடயத்துக்காக சமீன் றியாஸ் என்பவர் 1990 ஏப்ரிலில் புலிகளால் கடத்திச் செல்லப் பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.  இவர் கொல்லப்பட்ட விபரம் 2009 மேயில் இராணுவம் வெள்ளா முள்ளிவாய்க்காலை கைப்பற்றிய பின்னரே தெரிய வந்தது.  குறிப்பிட்ட அந்த இயக்க உறுப்பினர் தனது ஆயுதத்தை கையளிக்க   றியாஸையே முதலில் அனுகியிருந்தார் என்பதற்காகத் தான் றியாஸ் புலிகளால் கடத்தப்பட்டிருந்தார். அவரைக் காட்டிக் கொடுத்தது நைனா முஹம்மது என்ற முஸ்லிமினத் துரோகி ஒருவராவார். ரவுப் ஹக்கீம் பிரபாகரனுடன் முஸ்லிம்கள் தாமாகவே வெளியேறினார்கள் என்று உடன்படிக்கை செய்த போது அளிக்கப்பட்ட விருந்தை இவரே சமைத்ததாக சொல்லப்பட்டது.  இவர் தற்போது கட்டாரில் வசிக்கின்றார். 

1990 மார்ச்சில் புலிகள் மீண்டும் யாழ் நகருக்குள் நுழைந்திருந்தனர். அதையடுத்து சோனகதெருவிலுள்ள முஸ்லிம் கல்லூரி வீதியின் முடிவில் பிள்ளையார் விலாசுக்குச் சொந்தமான வீடொன்றில் புலிகள் முகாமொன்றை அமைத்திருந்தனர். இந்த முகாம் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு பதிலாக அங்கிருந்து 100 மீட்டர் தூரத்திலிருந்த வீடொன்றின் மீது 1990 செப்டம்பரில் விமானத்திலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்குண்டு வீச்சில் அப்துல் வஹாப் லாபிர் (29வயது),  மீரான் ஸாஹிப் (55வயது) (சாச்சிக் காக்கா) மற்றும் நுஸ்லா சிமோல் (8வயது )என்ற சிறுமி ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.

1990இல் இந்தியப்படை வெளியேறியதுடன் புலிகளின் திட்டங்கள் மாறியிருந்தன. வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம்களை முற்றாக வெளியேற்ற வேண்டுமென்ற திட்டம் வகுக்கப்பட்டது. மார்ச்சில் இந்தியப்படை வெளியேறிய காலப்பகுதியில் இலங்கை படையினர் புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய காலமாக இருந்தது. புலிகளின் தலைமைப்பீடம் இலங்கைப் படையினரையும் தமிழீழ எல்லையை விட்டு அப்புறப்படுத்த திட்டமிட்டது. இதற்கான தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. படையினரையும் பொலிஸாரையும் பல இடங்களில் புலிகள் சீண்டிப்பார்த்தனர். படையினருக்கு புலிகளுடன் மோதல் தரும் ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்; என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தன. அதனால் படையினர் புலிகள் விடயத்தில் மிகவும் நலினமான ஒரு போக்கை கையாண்டனர். இருந்த போதிலும் புலிகள் படையினரை தாக்க சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்தனர்.     1990 யூன் 11 அன்று முஸ்லிம் தையல்காரர் ஒருவர் தனது காதல் நடவடிக்கைக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யுமாறு புலிகள் பொலிஸாரை வற்பறுத்தினர். அவர் விடுதலை செய்யப்படாததை அடுத்து அந்த பொலிஸ் நிலைய அதிகாரியும் சில பொலிஸாரும் புலிகளால் கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து கிழக்கு மாகாணத்திலிருந்த அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சுற்றி வளைத்த புலிகள் பொலிஸாரை சரணடையுமாறு வேண்டினர். ஏறக்குறைய 600 பொலிஸார் பிரேமதாஸ அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் சரணடைந்தனர். அவர்களில் தமிழர்கள் 200 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முஸ்லிம் பொலிஸார் 200 பேரும் சிங்கள பொலிஸார் 200 பேரும் புலிகளால் 1990 யூன் 11 அன்று  சுட்டுக்கொல்லப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர்.

கொல்லப்பட்ட முஸ்லிம் பொலிஸார் மூதூர் தோப்பூர் ஏராவூர் காத்தான்குடி அம்பாறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களாகவிருந்தனர். அவர்கள் குடும்ப வறுமை காரணமாக பொலிஸ் சேவையில் புதிதாக இணைந்திருந்தனர்.  இவர்கள் கொல்லப்பட்டதால்  கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்காக பழிவாங்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். இராணுவம் புலிகளை தாக்க முன்னேறி வந்த சமயம் அவர்களில் சிலர் படையினருடன் சேர்ந்து புலிகளை தாக்கினர். இதனால் புலிகள் எதிர்பாராத திருப்பம் கிழக்கில் ஏற்பட்டது.கிழக்கு ஏற்கனவே முஸ்லிம் இளைஞர்களுக்கு பரீட்சயமான இடமாக இருந்ததால் இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிம்களால் குறுக்கு வழிகள் கண்டறியப்பட்டு புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் புலிகள் கிழக்கின் சன நடமாட்டமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறி காட்டுப்பகுதிகளுக்கு சென்றனர்.

அடுத்த பாகத்தில் புலிகள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை பட்டியல்களைப் பார்ப்போம்..

தொடரும்...!


No comments

Powered by Blogger.