Header Ads



கருப்பு ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு (பாகம்-2)

அப்துல்லாஹ்

1987 ஜனவரியில்  புலிகளின் அலுவலகம் ஒன்று முஸ்லிம் பிரதேசத்தில் காதி அபூபக்கர் வீதியில் அமைந்திருந்தது. இந்த முகாம் நடமாட்டங்கள் ஹெலியிலிருந்து அவதானிக்கப்பட்டு அந்த முகாம் குறிவைக்கப்பட்டது. இராணுவத்தால் ஏவப்பட்ட ஷெல் ஒன்று அந்த அலுவலகத்துக்கு முன்னிருந்த மின்கம்பத்தில்  பட்டதால் முகாமுக்கு முன்பிருந்த வீட்டின் மீது ஷெல் விழுந்து ஒரு தாயும் (மீராஸாஹிபு நாச்சியாவும்) அவரது மகள் தாஹிராவும்  பலியாகினர். 

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களையும் தம்முடன் இணைத்துக்கொள்ளவே தமிழ் ஆயுதக்குழுக்கள்  முனைந்தன. 1986இல் ரெலோவும் அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போன்றவற்றின் செயற்பாடுகள் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தடைசெய்யப்பட்டன. இதன் பின்னர் விடுதலைப்புலிகளே அப்பிரதேசங்களில் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் புலிகளின் தமிழீழ கோரிக்கைக்கு தடையாக இருப்பதாக எண்ணிய புலிகள் முஸ்லிம்களை வேரறுக்க வேண்டுமென முடிவு செய்தனர். முஸ்லிம்களுக்கெதிராக பல சதித் திட்டங்களை தீட்டினார்கள். இந்தக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கொலைகளையும் ஆட்கடத்தல் கப்பம் போன்ற கொடுஞ்செயல்களையும் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.  இந்தக் காலப்பகுதியில்   புலிகள் எவ்வாறு முஸ்லிம்களை பலிகொடுக்கத்தயாரானார்கள் என்பதை சில நிகழ்வுகளுடன் ஒப்பு நோக்குவோம்.    

1987 ஜனவரியில் யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தில் அமைந்திருந்த படை முகாம் மீது கிட்டு தலைமையிலான புலிகள் தாக்கி 5 படையினரையும்  3 பொலிஸாரையும் கைதுசெய்திருந்தனர். இந்த தாக்குதல் இறுதிக்கட்டத்தை அடைந்தவேளையில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் வந்து தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை திசை திருப்பும் நோக்கில் புலி உறுப்பினர் ஒருவர் சோனக வட்டாரத்திலுள்ள  ஜின்னாவீதி வழியாக தனது மோட்டார் சைக்கிளின் லைட்டைப் போட்டுக்கொண்டு வேகமாக செலுத்தினார். கோட்டை பக்கமாக தாக்கிக் கொண்டிருந்த ஹெலி திடீரென திரும்பி மோட்டார் சைக்கிளை நோக்கிச்சுட்டது. சூடுகள் முஸ்லிம் பகுதியிலுள்ள வீடுகள் மீது விழுந்ததில் ஆறு மாதக்குழந்தையொன்று காயமடைந்தது. இன்று வளர்ந்து வாலிபனாகிவிட்ட அக்குழந்தை பாலக வயதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக வளர்ச்சி குன்றி கால்கள் பலமற்றதாக காணப்படுகின்றார்.  இவ்வாறு விடுதலைப்புலிகள் பொதுமக்களை பலிகொடுக்கும் வகையிலான செயற்பாடுகள் ஏராளம்.

1987 ஒக்டோபர் 16ஆம் திகதி இந்திய படையினர்  அராலியூடாக யாழ் கோட்டையை நோக்கிச் செல்ல எத்தனித்தது. அவ்வேளை இந்திய படையினர்  கடுமையான மோட்டார் செல் தாக்குதலை சோனகத் தெரு  மீது மேற்கொண்டது. இதனால் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு இந்திய படையினர்; நிலை நோக்கி வெள்ளைக் கொடியொன்றை ஏந்திய வண்ணம் சென்றனர்.வழியில் ஓட்டுமடச் சந்தியில் புலிகளின் இரு உறுப்பினர்கள் நின்றனர். அவர்களிடம் இந்தியப் படை மீது தாம் திரும்பிவரும் வரை தாக்குதல் நடத்த வேண்டாம்  எனவும் தாம் படையினரிடம் சென்று எமது பகுதி நோக்கி செல் தாக்குதல் நடத்தவேண்டாமென கூறவே செல்வதாகவும் கூறினர்.  புலிகள் இருந்த இடத்திலிருந்து படையினர் மீது நேரடியாக  சுட முடியாதவாறு ஒரு வளைவு வீதியில் இருந்தது. ஓம் என்று கூறிவிட்ட முஸ்லிம்கள் அந்த வளைவை அண்மித்த போது புலிகள் வானை நோக்கிச் சுட்டனர். சனத்தை கண்டதும் இந்திய படையினரும்  பலமான துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. பொதுமக்கள் எல்லோரும் பலதிசைகளில் பிரிந்து ஓடினர் துப்பாக்கி குண்டுகள் அருகிலுள்ள சுவர்களில் பட்டுத்தெரித்த போதும் இறைவன் அருளால் யார் மீதும் படவில்லை. இவ்வாறு புலிகள் பொதுமக்களை பலிகொடுப்பதற்கு அஞ்சுவதில்லை. சிதறியோடிய மக்கள் புலிகளின் கண்ணுக்கு புலப்படாத ஓரிடத்தில் ஒன்று கூடி இந்திய படையினரை சந்தித்து தமது பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தவேண்டாமென வேண்டிக்கொண்டனர்.  அவர்கள் சென்று வந்தபின்னர் திடீரெண கடும் மழை பொழியத் தொடங்கி இரவு முழுவதும் பெய்தது. இராணுவ பங்கர்களுக்குள் தண்ணீர் சென்றதால் இராணுவம் வாபசாகி மீண்டும் அராலிக்கு சென்றிருந்ததுடன் அராலியூடான தமது முன்னேற்ற முயற்சியையும் கைவிட்டிருந்தது. 

வடக்கில் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் புலிகள் பல சதித் திட்டங்களை முஸ்லிம்களுக்கெதிராக செயல்படுத்தியிருந்தனர். 1987ஆம் ஆண்டு இந்தியப் படையினர்  இலங்கையில்  நிலைகொண்டிருந்த காலத்தில் மூதூர் கட்டைப்பறிச்சானில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் புலிகளால் இந்தியப்படை மீது கிளைமோர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியப்படை 10 பொதுமக்களை சுட்டுக்கொன்றது. சனசந்ததி மிக்க ஒரு பிரதேசத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்தின் ஒர் அங்கமாகவே செயல்படுத்தப்பட்டிருந்தது.

1988 ஜனவரி 22ஆம் திகதி மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.எம். மக்பூல் என்பவர் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இலங்கையின் முதல் முஸ்லிம் அரசாங்க அதிபராக இருந்த மகபூலின் இழப்பு முஸ்லிம் சமூகத்துக்கே பேரிழப்பாகும். இவரைத் தொடர்ந்து உதவி அரசாங்க அதிபர்  உதுமான் மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முஹமட் மட்டக்களப்பு மேலதிக  அரசாங்க அதிபர் வை.அஹமது குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் இபுறாஹிம்  மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய பளீல் ஆகியோர்  கொல்லப்பட்டனர். இவை முஸ்லிம்களின் புத்தி ஜீவிகளை அழிக்கும் புலிகளின் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளாகும்.

அடுத்த பாகத்தில் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளைப் பற்றி பார்ப்போம்..!

 தொடரும்...!!

No comments

Powered by Blogger.