Header Ads



பூகம்பத்தில் மரணமடைந்தவர் தொகை உயர்வு - 150 கைதிகள் தப்பியோட்டம்

துருக்கியில் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள், வீடுகள் உள்ளிட்டவை இடிந்து விழுந்தன. இதில், 270 பேர் பலியானதாக, அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், பலி எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கிடையில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வான் இலி மாகாணத்தில்,  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.6 புள்ளிகள் பதிவான இந்நிலநடுக்கத்தால், எர்ட்ஜிஷ் நகரில் ஆயிரம் கட்டடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இவற்றில், 40 கட்டடங்களின் இடிபாடுகளில் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை 270 பேர் பலியாகியிருப்பதாகவும், 1,300 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், உள்துறை அமைச்சர் இத்ரிஸ் நயிம் சகின் அறிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என, பிரதமர் ரெட்ஜெப் டாயிப் எர்டோயன் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்போரை மீட்கும் பணியில், 2,400 மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். முதலுதவி மற்றும் சிகிச்சை அளிப்பதற்காக, 680 டாக்டர்கள், செவிலியர்கள் கொண்ட குழு இயங்கி வருகிறது. 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்கிடையில் சிக்கியிருப்போரைக் கண்டறிய, 12 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.


இதற்கிடையில், வான் நகரில் உள்ள பெரிய சிறைச்சாலையின் சுற்றுச் சுவர்கள் விழுந்ததால், அதிலிருந்த 150 கைதிகள் தப்பியோடி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  நிலநடுக்கத்திற்குப் பின், அதே பகுதியில் நூறு முறை நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக, அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், சேதமடைந்த வீடுகள், கட்டடங்களில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் விலகியிருக்கும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நிலநடுக்கத்திற்குப் பின், மக்கள் தெருவிலும், சாலைகளிலும் தங்கள் பொழுதைக் கழித்தனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், தற்காலிக முகாம்களை அமைத்து வருகிறது. இஸ்ரேல், கிரீஸ், ஈரான், அஜர்பைஜான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. எனினும், துருக்கி இந்தச் சிக்கலான சூழலைச் சமாளித்து விடும் என, பிரதமர் எர்டோயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.