இலங்கையில் 14 சதவீதத்தினர் வறுமையில் - அமைச்சர் சரத் அமுனுகம
இலங்கையில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோர் 14 சதவீதத்தினராவர். நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு செல்வோரின் எண்ணிக்கையை 3 மில்லியனாக அதிகரிப்பதன் மூலம் வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க முடியுமென சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.
எதிர்வரும் 31ம் திகதி உலக சனத்தொகை 7 பில்லியன்களாக அதிகரிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு கொழும்பு கோல்பேஸ் ஹேட்டலில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சிரேஷ்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை 40 முதல் 45 சதவீதமாகக் காணப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் 14 சதவீதத்தினர் மாத்திரமே வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையில் தற்போது தனி மனித வருமானம் 4500 அமெரிக்க டொலர்களாக மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. அதுமாத்திரமின்றி பொருளாதார வளர்ச்சி 8 இல் இருந்து 9 சதவீதமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இலங்கையில் சனத்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பொருளாதார கொள்கைகளும் பாலின சமபங்கு இலவச கல்வி பொது சுகாதாரம் என்பனவும் நிலையாக பேணப்பட்டு வருவதனால் வறுமை நிலையை இலங்கையில் இருந்து முற்றாக நீக்குவதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Post a Comment