உம்மா வேலைக்கு போனா குழந்தைகள் குண்டாகும்
வேலைக்கு போகும் பெண்களின் குழந்தைகள் குண்டாகின்றன என்று அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகம், கார்னல் பல்கலை, சிகாகோ பல்கலை இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தின.
நாட்டின் முக்கியமான 10 நகரங்களில் 3, 5, 6 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளை வைத்துதான் ஆராய்ச்சி. அவர்களது உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, படிப்பு, அவர்களது பெற்றோரின் பொருளாதார நிலை, அவர்களது வேலை உள்பட பல அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வில் தெரியவந்த தகவல்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது,
அப்பா, அம்மா பார்க்கும் வேலைக்கும் குழந்தைகளின் உடல் பருமனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருந்தால் வீட்டில் சமைப்பது, குழந்தைகளுக்கு அவர்களே பரிமாறுவது போன்றவை மாறும். குழந்தைகள் தாங்களாகவே எடுத்துப் போட்டு சாப்பிடுகிற சூழல் உண்டாகும். அவர்கள் ஆபீஸ் விட்டு வந்த பிறகும், குழந்தைகளை கவனிக்க நேரமிருக்காது. அதனால், குழந்தைகள் தங்களை தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று ஏதேதோ உணவுப் பொருட்கள், தின்பண்டங்களை கொடுத்துவிடுவார்கள். அந்த குழந்தைகள் குண்டாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகள் குழந்தைப் பருவத்தில் இருக்கும்போது அம்மா எத்தனை ஆண்டுகள் வேலைக்கு போகிறார், தினமும் எத்தனை மணி நேரம் வேலை பார்க்கிறார் என்பதை பொருத்தும் குழந்தை குண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
குழந்தைக்கு என்ன பிடிக்கும், அவர்களுக்கு சத்தானது எது என்று மளிகைக் கடைக்கு சென்று பார்த்துப் பார்த்து வாங்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. காலையில் ஆபீஸ் கிளம்பவும் மாலையில் ஆபீஸ் களைப்பில் இருந்து விடுபடவுமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதுதான் மறைமுகமாக குழந்தைகளின் உடல் பருமனை அதிகரிக்கிறது. நூடுல்ஸ் போன்ற இன்ஸ்டன்ட் உணவுகளையும் ரெடிமேடு உணவுகளையும் அந்த குழந்தைகள் அதிகம் சாப்பிட வேண்டி இருக்கிறது. அவற்றில் அதிக கொழுப்பு, அதிக கலோரி இருப்பதால் சீக்கிரம் குண்டாகிவிடுகின்றன. இதில் 5, 6 வது வகுப்பு படிக்கும் குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் இவ்வாறு ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.
Post a Comment