போராட்டமும் பேச்சும் தொடரும் : எகிப்தில் புதிய திருப்பம்
எகிப்து துணை அதிபர் ஒமர் சுலைமான், முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் நடத்திய முதல் ஆலோசனை தோல்வியில் முடிந்தது. "எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. போராட்டம் தொடரும். எனினும் பேச்சுவார்த்தையும் தொடரும்' என்று முஸ்லிம் சகோதரத்துவ கட்சி அறிவித்துள்ளது. இதற்கிடையில் கெய்ரோவில் இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பத் தொடங்கியுள்ளது.
எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி நேற்றோடு 14 வது நாளாக மக்களின் போராட்டம் தாரிர் சதுக்கத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளுடன் துணை அதிபர் ஒமர் சுலைமான் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனடியாக அதிபர் பதவியில் இருந்து முபாரக் விலக்கப்பட வேண்டும்; இடைக்கால அரசின் தலைவராக ஒமர் சுலைமான் பதவியேற்றுக் கொள்ள வேண்டும். இந்தாண்டு செப்டம்பரில், பாரபட்சமற்ற வெளிப்படையான தேர்தலை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் முக்கிய தலைவர்கள்,"அரசு நல்ல நோக்கத்துடன் செயல்படுகிறது. ஆனால் குறிப்பிடத் தக்க மாற்றம் எதுவும் இல்லை.எங்களின் சில கோரிக்கைகளை மட்டுமே அவர்கள் ஏற்றனர். எனினும் பேச்சுவார்த்தை தொடரும். அதேநேரம் போராட்டமும் தொடரும்' என்று தெரிவித்தனர். முதல் கட்ட பேச்சுவார்த்தையில், ஜனநாயகத் தலைவர் எல் பரேடி கலந்து கொண்டதாக முதலில் செய்திகள் வந்தன. பின்னர் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
அதிருப்தியில் மக்கள் : ஆனால், தாரிர் சதுக்கத்தில் 14 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மக்களிடம், இந்த நடவடிக்கைகள் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக வெறுப்பையே தந்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்த சிலர்,"கடந்த 30 ஆண்டுகளாக இந்த எதிர்க்கட்சிகள் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இப்போது எங்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்றனர்.
ராணுவத்துடன் மோதல் : நேற்று முன்தினம் தாரிர் சதுக்கத்தைச் சுற்றி போக்குவரத்தைச் சீர்படுத்துவதற்காக, ராணுவ பீரங்கிகள் சதுக்கத்துக்குள் நுழைய முயன்றன. ராணுவ வீரர்கள், மக்கள் அமைத்திருந்த தடுப்புகளை அகற்ற முயன்றனர். "சதுக்கத்தில் எங்களின் போராட்டப் பரப்பைக் குறைக்க ராணுவம் முயல்கிறது' என்று குற்றம்சாட்டினர்.
ஹிலாரி வெளிப்படை : இந்நிலையில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், முபாரக் தற்போது பதவி விலக மாட்டார் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: முபாரக், வரவிருக்கும் தேர்தலில் கலந்து கொள்ளமாட்டேன்; கட்சித் தலைவர் பதவியில் இருந்து நானும் என் மகனும் விலகி விட்டோம் என்று கூறியுள்ளார். 30 ஆண்டுகளில் முதன் முறையாக, துணை அதிபர் ஒருவரை நியமித்துள்ளார். இவையனைத்தும் குறிப்பிடத் தகுந்த நடவடிக்கைகள். அதேநேரம் இவை முதற்கட்ட நடவடிக்கைகள் தான்.
சுமுகமான அதிகார மாற்றத்திற்கு இவை வழிகோலாது. எகிப்து அரசியல் சாசனப்படி, அதிபர் பதவி விலகினால், 60 நாட்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இன்றைய நிலையில் அரசியல் சாசனத்தைத் திருத்தி தேர்தலும் நடத்துவதற்கு அந்த 60 நாட்கள் போதாது. அதனால், முபாரக் பதவி விலகுவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதை எகிப்து மக்கள் உணர வேண்டும். அவரை உடனடியாகப் பதவியில் இருந்து விலக்க முடியாது. முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், எல்பரேடியும், சி.என்.என்., "டிவி'க்கு அளித்த பேட்டியில், முபாரக் பதவி விலக தாமதம் ஆகும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த பேட்டியில்,"இந்தப் போராட்டத்திற்கு முன்பிருந்த நிலைக்கு எகிப்து திரும்பாது. முறையான அதிகார மாற்றத்தை நோக்கி அது சென்று கொண்டிருக்கிறது. எகிப்து மக்கள் விடுதலையை விரும்புகின்றனர். பாரபட்சமற்ற ஜனநாயகத் தேர்தலை விரும்புகின்றனர். பொறுப்பான அரசை விரும்புகின்றனர். அதனால், எகிப்தில் அதிகார மாற்றம் உடனடியாகத் தேவை' என்று கூறியுள்ளார்.
Post a Comment