அல்குர்ஆன் கூறும் உளநிலைகள் - ஓர் உளவியல் நோக்கு
நளீம் (நளீமி)
மனிதனுள்ளே வடிவமைக்கப்பட்டுள்ள இரு மூலக்கூறுகளான உடற்தேவைகள், உள (ஆன்மா) தேவைகளுக்கு இடையில் இடைவிடாது நடைபெறுகின்ற போராட்டத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு மனிதனின் உளநலம் தீர்மானிக் கப்படுகிறது என்பதுவே உளநலம் குறித்த இஸ்லாமியப் பார்வையாகும்.
இப்போராட்டம் உள்ளம் என்ற களத்தில் நிகழ்வதால் அடிப்படையில் இது ஓர் உளப் போராட்டம் ஆகும். உளநலனை மேம்படுத்துவதற்கான போராட்டமாகும். எனவே, நபி (ஸல்) அவர்கள் இதனை "மிகப் பெரிய ஜிஹாத்" என வர்ணித்தார்கள். உளநலனுக்கான போராட்டத்தின் முன்னால் மனிதன் உள ரீதியாக பல கட்டங்களை/உள நிலைகளை அடைந்து கொள்கிறான். அவன் பெற்றுக் கொள்கின்ற உள்ளத்தின் கட்டத்தை அடிப்படையாகக் கொண்டே அவனது உளநலன் தீர்மானிக் கப்படுகிறது. அதனை அல்குர்ஆனின் ஒளியின்கீ ழ் கீழ்வருமாறு விளக்கலாம்.
# உள நிலை 01
ஈருலக வாழ்வின் அத்திவாரமாக அமைகின்ற உளப்போராட்டத்தின்போது ஒருவனின் உள்ளம் உடலியற் தேவைகள், மனோ இச்சைகள், அற்ப இன்பங்களில் மூழ்கி, ஆன்மீக உலகின் தேவைகளை முற்றிலும் புறக்கணிக்கின்ற ஒரு நிலைக்கு வருவதை அல்குர்ஆன் ஷிர்க், குப்ர், நிபாக் எனக் குறிப்பிடுகிறது. அவர்கள் அந்த உளநிலையை அடைவதற்கான காரணம் அவர்களது உள்ளங்களில் நோய்கள், உளச் சிக்கல்கள், பயம், பதற்றம் என்பன குடியிருப் பதாகும் என்கிறது. அதாவது அல்லாஹ்வை மறந்து வாழ்கின்றவனே பயங்கரமான உளநோயாளி/உளநலம் பாதிக்கப்பட்டவன் என்கிறது.
"யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கான உதாரணம்; வானத்திலே இருந்து கீழே விழுந்த பின்னர் பறவைகள் அவனைக் கவ்விக்கொண்டு செல்வதைப் போல அல்லது ஒரு தூர இடத்திற்கு பயங்கரமான காற்று அவனை அடித்துச் செல்வதைப் போன்றதாகும்." (அல்குர்ஆன்)
"அல்லாஹ் ஒருவனை வழி கெடுக்க நாடினால் அவனது உள்ளத்தை நெருக் கீட்டுக்கும் குழப்பத்துக்கும் உட்படுத்துவான். அவன் மூச்சுத் திணறியவனாக வானை நோக்கி படிப்படியாக ஏறிச் செல்வதைப் போல." (அல்அன்ஆம்)
"அவர்களது உள்ளங்களிலே நோய் இருக்கிறது. அல்லாஹ் அவர்களது நோயை மேலும் அதிகரிக்கட்டும்." (அல்பகறா)
நவீன உள மருத்துவத்துறை பல்வேறு உளநோய்களை, உளப் பாதிப்புக்களை இனங்கண்டுள்ளது. உதாரணமாக மன அழுத்தம், பதகளிப்பு, மனச்சோர்வு, காரணமற்ற பயம், OCD என பட்டியல் நீண்டு செல்கிறது. உண்மையில் இன்று அனைத்தும் மேற்சொன்ன காரணங்களின் விளைவாக உருவான வையே என்பது இஸ்லாத்தின் பார்வையாகும்.
# உள நிலை 02
எப்போதும் மிருகத்தேவைகளை மட்டும் (பசி - காமம் - மனோஇச்சை) நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்ற ஓர் உளநிலையாகும். அல்குர் ஆன் இதனை அதிகமதிகம் தீமை களைத் தூண்டும் உள்ளம் என அழைக்கிறது.
"தனது மனோ இச்சையைக் கடவுளாகக் கொண்டு வாழ்பவனை நீர் பார்த்தீரா" (அல்புர்கான்) "நிச்சயமாக உள்ளம் பாவங்களின்பால் அதிகம் தூண்டக் கூடியது; அல்லாஹ் வின் அருள் கிடைத்தவர்களைத் தவிர." (யூஸுப்)
# உள நிலை 03
ஒரு முஸ்லிம் ஆன்மீகத் தேவைகளை நோக்கி நெருங்குவதற்கான அடிப் படையாக ‘உள விழிப்பு நிலை’ அவசியப்படுகிறது. தனது பலவீனங்களை உணர்ந்தவனாக, பாவங்களிலும் மனோஇச்சைகளிலும் விழுவதற்கான காரணிகளைப் புரிந்தவனாக, மனச்சாட்சியுடன் உரையாடி தனது பாவங்களுக்கான மன்னிப்பை அல்லாஹ்விடம் அடிக்கடி கெஞ்சிக் கேட்டவனாக ஒருவனின் உளநிலை மாறும் கட்டத்தையே இது குறிக்கிறது. "அடிக்கடி தன்னைக் கண்டித்துக் கொள்ளும் உள்ளத்தின் மீது சத்தியமாக!" (அல்கியாமா)
# உள நிலை 04
ஒருமுஸ்லிம் மிகத் தூய்மையான எண்ணத்துடன் பாவமன்னிப்புக் கேட்டு, அல்லாஹ்வை அதிகம் நெருங்கி, உடல் ஆன்மீகத் தேவைகளை நடுநிலையாக நிறைவேற்றி, தனது முழு விருப்பங்களையும் ஆசைகளையும் அல்லாஹ்வின் விருப்பமாக மாற்றி வாழும்போது அவனுள்ளே துளிர்விடுகின்ற உள நலனின் உச்சகட்டத்தை இது குறிக்கிறது. இதனை அல்குர் ஆன் ‘ஸலீம், முத்மஇன்னா’ என அழைக்கிறது. "அமைதியும் ஆரோக்கியமும் பெற்ற உள்ளமே!" (ஸூறதுல் பஜ்ர்) என விழித்துப் பேசுகிறது.
# உளநிலை 05
மேற்சொன்ன அனைத்து வகையான உளநிலைகளுக்கும் அடிப்படையாக அமைகின்ற ஓர் உளநிலையைப் பற்றி அல் குர்ஆன் ஆழ்ந்து விளக்குவதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மனிதனின் நடத்தையை / வாழ்வை வடிவமைக்கின்ற, தீர்மானிக்கின்ற பெரும் உந்து சக்தி அவனது எண்ணங்களாகும்.
எனவே, உளவியலாளர்கள் ‘எண்ணமே வாழ்வு’ என்கின்றனர். நவீன உளவியலில் அதிகம் வலியுறுத்தப் படுகின்ற ஒரு தனித்துறையாக வளர்ந்து வருகின்ற ஓர் எண்ணக்கருதான் நேர்மறைச் சிந்தனை/நேர்மறை உளவியல் என்பதாகும். அந்த வகையில், ஒரு மனிதன் எதனை கூடுதலாக எண்ணுகின்றானோ அந்த எண்ணம் போலவே அவனது வாழ்க்கை அமைகிறது என்பதுவே இதன் கோட்பாடாகும்.
எனவேதான், அல்குர்ஆன் முதல் அத்தியாயமாக ஸூறா பாத்திஹாவை வைத்திருப்பதன் நோக்கம் ஓர் மனிதன் ஓதும்போது அல்லாஹ்விடம் அடிக்கடி நேர்வழியைக் கேட்க வேண்டும் என்பதற்காகும். அவ்வாறே அந்நேர் வழி கிடைக்கப் பெறாமைக்கு ஒரு பெரும் தடைக்கல் காணப்படுகிறது.
அதிலிருந்தும் அடிக்கடி பாதுகாப்புக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அல்குர்ஆனின் கடைசி அத்தியாயமாக ஸூறதுந் நாஸை வைத்துள்ளான்.
அதாவது எதிர்மறை எண்ணம் என்று சொல்லக்கூடிய (தீய, ஷைத்தானிய) எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்புக் கேட்க வேண்டும் என்பதையே அந்த ஸூறா வலியுறுத்துகிறது.
மனித, ஜின் இனத்தைச் சேர்ந்த ஷைத்தானிய எண்ணங்கள் கண்களுக்குப் புலப்படாதவை. ஆனால், அவைதான் ஒரு மனிதனின் வாழ்வை நாசப்படுத்துகின்ற விஷக்கிருமிகளாகும். அதிலிருந்து பாதுகாப்புப் பெற்று ஒரு தனியான உள நிலையாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதே அல்குர்ஆன் வலியுறுத்துகின்ற கருத்தாகும்.
Post a Comment