அல்ஜீரியா, யேமன் நாடுகளிலும் போராட்டம் வெடித்தது
எகிப்தை தொடர்ந்து, அல்ஜீரியாவிலும் போராட்டம் வெடித்தது. போலீசுக்கும் வெடித்தது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
வட ஆப்ரிக்க நாடான டுனீசியாவில் உருவான அரசுக்கு எதிரான போராட்டம், எகிப்தில் நிலை கொண்டு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டு தற்போது, அல்ஜீரியாவில் குடிபுகுந்துள்ளது.
அல்ஜீரியாவில் 1999 முதல் அப்துல் அஜீஸ் புட்டாபிளிக்கா அதிபராக இருக்கிறார். எகிப்தை போலவே அங்கும் 20 ஆண்டுகளாக அவசரநிலை சட்டம் அமலில் இருக்கிறது. இதனால், தலைநகர் அல்ஜெய்ர்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பின்மை, வறுமை, அரசியல் சுதந்திரம் மறுப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளிலும் அல்ஜீரியா, எகிப்தை போன்று தான் உள்ளது. எகிப்தில் போராட்டம் தீவிரம் அடைவதற்கு முன்பே, கடந்த ஜனவரியில் அல்ஜீரியாவில் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்நிலையில், எகிப்து மக்களின் வெற்றி, அல்ஜீரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. நேற்று தலைநகர் அல்ஜெய்ர்சில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி, அதிபரை பதவி விலகக் கோரியும், அவசரநிலை சட்டத்தை நீக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகருக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழையும் வழிகளை போலீசார் அடைத்து விட்ட போதிலும், அதையும் மீறி மக்கள் குவிந்து விட்டனர். இதனால், பல இடங்களில் மக்களுக்கும், போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து 400 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் இதை போன்று மிகப் பெரிய அளவில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் எதுவும் நடக்கவில்லை என்பதால் இந்த ஆர்ப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
யேமன்னில் போராட்டம்
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகக் கோரி நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை நோக்கி பேரணி மேற்கொண்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றதால் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏமனில் அரசியல் சீர்திருத்தம் மேற்கொள்வது பற்றிய பேச்சுவார்த்தைக்கு எதிர்க்கட்சி சம்மதித்துள்ளது.
Post a Comment