முஸ்லிம் சர்வதிகாரிகளை விரட்ட விக்கிலீக்ஸ் வழங்கிய பங்களிப்பு
மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தற்போது கிளர்ச்சிகள் வெடித்திருப்பதற்கு தனது இணையத்தளமான விக்கிலீக்ஸ் கணிசமான அளவு செல்வாக்கைச் செலுத்தியதாக அதன் ஸ்தாபகர் ஜூலியன் அசெஞ் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
டுனீசியத் தலைவருக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவு தொடர்பாக விக்கிலீக்ஸ் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் அந்த விடயமானது எழுச்சிக்கான நம்பிக்கையை மக்கள் மத்தியில் எழுப்பியிருந்ததாகவும் அதேபோன்று சூழவுள்ள நாடுகளிலும் இந்த விவகாரங்கள் செல்வாக்குச் செலுத்தியிருப்பதாகவும் அசெஞ் கூறியுள்ளார்.
லெபனான் பத்திரிகை அல் அக்பர் என்ற அந்தப் பத்திரிகை டுனீசியாவில் என்ன நடந்தது என்பதற்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கை ஏற்படுத்தியிருந்தது என்று எஸ்.பி.எஸ்.நிகழ்ச்சித் திட்டத்தில் அசெஞ் கூறியுள்ளார்.
எகிப்து, யேமன், ஜோர்தான் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு டுனீசியா உதாரணமாகத் திகழ்ந்தது என்பது குறித்து எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்திருப்பதாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் டுனீசியா பூராவும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் பாரியளவில் இடம்பெற்றன. வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றால் அந்தப் போராட்டம் உக்கிரமடைந்தது. இதன் விளைவாக பென் அலி பதவி நீக்கப்பட்டார். அதேபோன்று கெய்ரோவில் 18 நாட்கள் இடம்பெற்ற கிளர்ச்சியானது ஹொஸ்னி முபாரக்கின் 30 வருட சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
இதேபோன்ற ஆர்ப்பாட்டங்கள் யேமனில் இடம்பெறுகின்றன. அதேவேளை ஜோர்தானிலும் அமைதியீனம் ஏற்பட்டிருக்கிறது.
சர்வாதிகார ஆட்சிகெதிரான பொதுமக்களின் அதிருப்தியீனங்கள் தீவிரமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று அசெஞ் கூறியுள்ளார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சுவீடனுக்கு அவர் நாடு கடத்தப்படுவாரா இல்லையா என்பது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் அசெஞ் லண்டனிலிருந்தவாறு இந்தக் குழப்பங்களையெல்லாம் நான் பார்த்து வருகிறேன். இது சகல இடங்களிலும் இடம்பெற்றுவருவதை பார்க்கவேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் அமெரிக்க இராஜதந்திரிகள் நிலை கொண்டிருக்கும் இடங்களிலிருந்து இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கேபிள்களை இரகசியமாகப் பெற்று தமது இணையத்தளமான விக்கிலீக்ஸ் மூலம் அசெஞ் வெளியிட்டு வருகிறார். ஈராக், ஆப்கானிஸ்தான் யுத்தம் தொடக்கம் இலங்கை, இந்தியா, உட்பட பல நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜதந்திரிகள் தமது நாட்டிற்கு அனுப்பிய ஆவணங்களை அவர் வெளியிட்டு வருகிறார். அவரின் இந்த நடவடிக்கையானது சிலருக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், ஏனையவர்கள் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்படவேண்டுமெனக் கூறுகின்றனர்
Post a Comment