முஸ்லிம் தலைவர்கள் திருந்தட்டும்...
அரபுலகில் பழைய ஆட்சியதிகார ஒழுங்கு படிப்படியாக முடிவுக்கு வரப்போகிறது என்பதை எதேச்சாதிகார அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சிகளும் தங்களது ஆட்சிக்கு இனி மேலும் கூட புதியதொரு ஜனநாயகப் படிமத்தைக் கொடுக்க முடியுமென்ற வீணான நம்பிக்கையில் அரபுலகின் மன்னர்களும் ஜனாதிபதிகளும் கறைபடிந்த அரசுகளை மினுக்கித் துலக்குவதற்கு மேற்கொள்ளும் பிரயத்தனங்களும் தெளிவாகவே உணர்த்துகின்றன.
23 வருட காலமாக சர்வாதிகார ஆட்சியை நடத்திய ஜனாதிபதி பென் அலியை குடும்பத்தாருடன் சேர்த்து நாட்டைவிட்டு இரவோடிரவாகத் தப்பியோட வைத்த டியூனீசியாவின் மல்லிகைப் புரட்சியைத் தொடர்ந்து தற்போது ஒருவாரத்திற்கும் கூடுதலான காலமாக எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் 30 வருட ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இடம்பெற்றுவரும் மக்கள் கிளர்ச்சி மேற்காசியாவில் மாத்திரமல்ல, ஏனைய பிராந்தியங்களிலும் கூட அதிர்வுகளை ஏற்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
எகிப்தில் தீவிரமடைந்திருக்கும் மக்கள் கிளர்ச்சி வேறு எந்தவொரு சர்வதேச முன்னுதாரணத்தைக் காட்டிலும் 25 வருடங்களுக்கு முன்னர் சர்வாதிகாரி பேர்டின்ண்ட் மார்கோஸை விரட்டியடிப்பதற்கு பிலிப்பைன்ஸில் திருமதி கொராசொன் அக்கியூனோ தலைமையில் இடம்பெற்ற மக்கள் சக்திப் போராட்டத்துடனேயே பெருமளவுக்கு ஒப்பிடக்கூடியதாக இருக்கிறது. முபாரக்கினால் இவ்வார ஆரம்பத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட உப ஜனாதிபதி ஒமர் சுலைமான் விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை எதிரணிக் கட்சிகள் நிராகரித்திருக்கும் நிலையில் மக்கள் கிளர்ச்சி மேலும் வியாபகமடைந்திருக்கிறது. முபாரக் பதவியில் இருந்து விலகும்வரை ஆர்ப்பாட்டங்கள் ஓயப்போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தலைநகர் கெய்ரோவில் உள்ள விடுதலைச் சதுக்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த நிலையில் செவ்வாயன்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய 82 வயதான முபாரக் எதிர்வரும் செப்டெம்பரில் முடிவடையவிருக்கும் தனது தற்போதைய பதவிக்காலம் வரையுமே அதிகாரத்தில் இருக்கப்போவதாகவும் அதற்குப் பிறகு ஜனாதிபதியாக இருக்க விரும்பவில்லையென்றும் அறிவித்தார். தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாமல் இருந்திருந்தாலும் கூட, செப்டெம்பரில் 6 ஆவது பதவிக்காலத்துக்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு நாட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் முபாரக் தெரிவித்தார். மூன்று தசாப்தகாலமாக தங்களை ஆட்சிசெய்து வரும் அவர் ஆட்சியதிகாரத்தைக் கைவிட்டு ஓடும்வரை தங்களது போராட்டம் முடிவுக்கு வரப்போவதில்லை என்பதே கிளர்ச்சியாளர்களின் பிரகடனமாக இருக்கிறது.
கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்துக்கு எதிரான உணர்வுகளை அமைதியான முறையில் வெளிப்படுத்துவார்களேயானால் அவர்களுக்கு எதிராக படைபலத்தைப் பிரயோகிக்கப் போவதில்லை என்று இராணுவம் விடுத்த அறிவிப்பு முபாரக் எந்தளவுக்கு முற்றுகைக்குளாகியிருக்கிறார் என்பதை பிரகாசமாக வெளிக்காட்டுகிறது. முன்னாள் விமானப்படைத் தளபதியான ஜனாதிபதி முபாரக் அமைதியான முறையில் அதிகார மாற்றத்தைச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்வதற்கு தனது பதவிக் காலத்தின் இறுதிமாதங்களைப் பயன்படுத்தப் போவதாகவும் தனது மண்ணைவிட்டு ஒருபோதும் ஓடப்போவதில்லை என்றும் எகிப்தியிலேயே மரணமடையப் போவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆட்சியதிகாரத்தில் முபாரக் தொடர்ந்தும் இருப்பதை ஆதரிப்பதற்குத் தயாராயில்லை என்ற சமிக்ஞையை ஒபாமா நிருவாகம் காண்பித்ததையடுத்தே நாட்டு மக்களுக்கு உரையாற்றி தனது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதில் சந்தேகமில்லை.
இதனிடையே, வீதி ஆர்ப்பாட்டங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் இன்னொரு அரபு ஆட்சியாளரான ஜோர்தான் மன்னர் அப்துல்லா தனது அரசாங்கத்தைப் பதவி நீக்கிவிட்டு செவ்வாயன்று முன்னாள் பிரதமரான மரூவ் அல்பகித்தை புதிய அமைச்சரவையை அமைப்பதற்காக அழைத்திருக்கிறார். உடனடியாக அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு பகித்தை மன்னர் அப்துல்லா கேட்டிருக்கிறார்.
1999 ஆம் ஆண்டு முடியாட்சியைப் பொறுப்பேற்ற அப்துல்லா தனது காலஞ்சென்ற தந்தையார் மன்னர் ஹுசெய்ன் முன்னெடுத்த அரசியல் சீர்திருத்தங்களைத் தொடரப்போவதாக அப்போது உறுதிமொழி வழங்கினார். மன்னர் ஹுசெய்னின் அரசியல் சீர்திருத்தங்கள் 22 வருடகால இடைவெளிக்குப்பிறகு 1989 ஆம் ஆண்டில் முதற்தடவையாக பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கும் பலகட்சி அரசியல் முறைமை மீளவும் கொண்டு வரப்படுவதற்கும் 1948 அரபுஇஸ்ரேல் போருக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இராணுவச் சட்டம் இடை நிறுத்த வழிவகுத்தன.அதற்குப் பிறகு அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டப்படவில்லை.
டியூனீசிய,எகிப்திய மக்கள் கிளர்ச்சிகள் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் அதிர்வுகள் ஜோர்தான் மக்களையும் கிளர்ந்தெழ வைத்துவிடுமென்ற பீதியில் தான் மன்னர் அப்துல்லா தற்போது அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அக்கறையுடையவராகத் திடீரெனத் தன்னைக்காட்டிக்கொள்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
இது இவ்வாறிருக்க, அரபுலகில் மிகவும் நீண்டகாலமாக அதிகாரத்தில் இருக்கும் இன்னொரு ஆட்சியாளரான யேமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலி, தலைநகர் சானாவில் இன்றைய தினம் எதிரணிக்கட்சிகள் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டப் பேரணியைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய சாலி 2013 ஆம் ஆண்டில் முடிவடையவிருக்கும் தனது தற்போதைய பதவிக்காலத்துக்குப்பிறகு தனது பதவியை நீடிக்கப்போவதில்லை என்றும் தனது மகனிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை என்றும் உறுதியளித்திருக்கிறார்.
மூன்று தசாப்தகாலமாக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் சாலி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதிசெய்யும் நோக்குடன் ஆளும் கட்சி ஜனாதிபதியின் பதவிக்காலங்களின் வரையறைகள் தொடர்பில் புதிய யோசனைகளை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரபுலகில் தோன்றிவரும் கிளர்ச்சி அலை தனது ஆட்சிக்கும் இடைநடுவில் முடிவைக் கட்டிவிடக்கூடுமென்ற பீதியில் சாலி "பதவிக்காலம் நீடிப்புமில்லை,அரசியல்வாரிசுக்கு பதவியுமில்லை' என்று பிரகடனம் செய்வதைக் காணக் கூடியதாக இருக்கிறது. ஆளும் கட்சிக்குப் பாராளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மைப் பலம் இருக்கின்ற போதிலும் கூட, தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு எதிரணிக்கட்சிக்கு சாலி அழைப்பு விடுக்கிறாறென்றால், அவரது ஆட்சிக்கு எதிராக யேமன் மக்கள் மத்தியில் கிளம்பத் தொடங்கியிருக்கும் எதிர்ப்புணர்வின் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறதல்லவா?.
அரசியலமைப்பு ஏற்பாடுகளை தங்களுக்கு வசதியான முறையில் வளைத்துக் கொண்டு பதவிக்காலங்களை நீடிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிரான உணர்வுகள் மக்கள் மத்தியில் தோன்றுவதை உருட்டுப் புரட்டுகளைச் செய்து நீண்டகாலத்துக்கு தடுக்கமுடியாது என்பதற்கு எகிப்திய, யேமனிய நிகழ்வுகள் தெளிவான உதாரணங்களாகும்.தங்களது கறைபிடித்த அரசுகளை மினுக்குவதற்கு அரபுலக ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனங்கள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நீண்டநாட்கள் காத்திருக்கத் தேவையில்லை
Post a Comment