இலங்கை சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு
இலங்கையின் வடகிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இருக்கும் ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறார்களிடம் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக யுனிசெஃப், உலக உணவுத் திட்டம் மற்றும், சுகாதார சேவைகள் அமைச்சகம் ஆகியவை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 53 சதவீதமான சிறார்களும், திருகோணமலையில் 45 சதவீதமும், அம்பாறையில் 44 சதவீதமான சிறார்களும் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது.
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே இடம் பெறுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
இது தொடர்பாக மகளிர் மற்றும் சிறார்கள் நல துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கூறும் போது,
யுத்தத்தினால் தான் இவ்வாறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், முதற் கட்டமாக இவ்வருடத்தில் இருந்து வடகிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஐந்து வயதுக்கு குறைவாக உள்ள சிறார்களுக்கு பாலர் பள்ளியில் வாரத்திற்கு மூன்று முறை பால் கொடுக்கவுள்ளதாக கூறினார். மேலும் இது ஒரு தேசிய பிரச்சனை என்றும், பெண்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பயிற்சிகளையும் திட்டங்களையும் ஏற்படுத்தி கொடுக்க தாங்கள் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Post a Comment