"தண்ணி' போட்டால் இனிமேல் கார் நகராது
மது அருந்தி விட்டு, போதையில் கார் ஓட்டுவதைத் தடுக்கும் புதிய தொழில் நுட்பத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
மது அருந்தி விட்டு, போதையில் கார் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இது சர்வதேச அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள "குவின்டிக்யூ' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுவீடன் மற்றும் நியூ மெக்சிகோவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, போதையில் கார் ஓட்டுவதைத் தடுக்கும் புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த தொழில்நுட்ப கருவியை காரில் பொருத்தி விட்டால், கார் ஓட்டுபவர் மது அருந்தியிருந்தால், அந்த கார் "ஸ்டார்ட்' ஆகாது. இதனால், ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
இந்த கருவி முதலில் காரில் பொருத்தப்படும். பின்னர், கார் கதவுகள், "ஸ்டியரிங்' உள்ளிட்ட சில பகுதிகளில், மது அளவை கண்டுபிடிக்கப் பயன்படும் "சென்சார்'கள் வைக்கப்பட்டு, அந்த கருவியுடன் இணைக்கப்படும். காரில், ஓட்டுனர் இருக்கையில் அமரும் நபர், "ஸ்டியரிங்' மீது கை வைக்கும் போது, அவரது தோலின் வழியாகவும், சுவாசத்தின் வழியாகவும், ரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவை சென்சார்கள் ஓரிரு வினாடிகளில் கண்டுபிடித்துவிடும். அவரின் ரத்தத்தில், ஆல்கஹால், 0.08 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், கார் "ஸ்டார்ட்' ஆகாத வகையில், அந்த தொழில்நுட்ப கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிகிறது.
Post a Comment