சரத் பொன்சேக்காவுக்கு சளி, இருமல் சுடுதண்ணி வழங்க நீதிமன்றம் உத்தரவு
சளி மற்றும் இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவிற்கு அருந்த சுடுநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை மீண்டும் சேவையில் இணைத்து அவர்களுக்கு ஊதியம் வழங்கியதாக சரத் பொன்சேகா மற்றும் அவருடைய செயலாளராகச் செயற்பட்ட சேனக டி சில்வா ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா மற்றும் சேனக டி சில்வா ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சரத் பொன்சேகா சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி முதலில் கருத்துக்களை முன்வைத்தார். சந்தேகநபரான சரத் பொன்சேகா கடந்த இரு வாரங்களாக சளி மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சுடுநீர் வழங்குமாறு சிறைச்சாலை வைத்தியர் கூறியுள்ளபோதும் அதற்கான சலுகைகள் இதுவரை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை வைத்தியர் கூறியிருப்பின் ஏன் இன்னும் சரத் பொன்சேகாவிற்கு சுடுநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர சிறைச்சாலை அதிகாரியிடம் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுப்பதாக சிறைச்சாலை அதிகாரி பதிலளித்தார்.
எனினும் சுடுநீர் வசதியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்
Post a Comment