உணவுப் பற்றாக்குறையை தடுக்க அரசநிறுவன வளவுகளில் பயிர்ச்செய்கை
இலங்கையில் உணவுப் பஞ்சத்தை தவிர்க்க அரசநிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அரச பணியாளர்களின் தங்குமிடங்களைச் சுற்றியுள்ள வெற்று நிலங்களில் மரக்கறிகளைப் பயிரிடுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.
இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை அரசாங்கம் வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த சுற்றறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் கருணாதிலக தெரிவித்தார்.
பயிரிடுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து நிலங்களிலும் மரக்கறிகள் பயிரிடப்பட வேண்டும். இதற்கென மாகாணசபைகள் ஊடாக நிதி வழங்குவதற்கு விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. அரச நிறுவனங்களில் குறிப்பாக அமைச்சுக்களின் பணியகங்களில் கூட முன்னுதாரணமான முறையில் மரக்கறிகள் பயிரிடப்படவுள்ளன.
இந்த சுற்றறிக்கையின் படி, அரசநிறுவனங்கள், பாடசாலைகளின் வளவுகளில் காணப்படும் நிலத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது போனால் அவற்றுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உணவுப்பஞ்சம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதாலேயே அரசாங்கம் இந்த அவசர நடவடிக்கையை எடுத்துள்ளது.
Post a Comment