முஸ்லிம் காங்கிரஸ் விவகாரம், ஐ.தே.க. க்கு நீதிமன்றம் தடை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட அக்கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தற்காலிகத் தடை விதித்து ஐக்கிய தேசிய கட்சிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 18ம் ஆண்டு அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு தமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்தப் பொதுத் தேர்தலில் தாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்துப் போட்டியிட்டாலும், சட்ட ரீதியில் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரம் இல்லை என உத்தரவிடுமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரணை செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 25ம் திகதிவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கக்கூடாதென ஐக்கிய தேசிய கட்சிக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது
Post a Comment