தேர்தலுக்கு பின் இலங்கையில் பஞ்சம் ஏற்படும் - ஐ.தே.க.
உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் இலங்கையில் பஞ்சம் தலைவிரித்தாடப் போகின்றது. பொதுமக்கள் உயிர் வாழ முடியாது. தமது பிள்ளைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. வின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் கூறுகையில்,
தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது பாரிய சுமைகளை சுமத்தி துரோகத்தனமாக செயற்படுகின்றது. நாட்டில் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது. மக்கள் உயிர் வாழ முடியாத நிலையில் உள்ளனர்.
மந்த போசனம் மற்றும் போதியளவு உணவு பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்களும் தீவிரமடைந்து வருகின்றன.
இதனை சற்றும் சிந்திக்காது அரசாங்கம் அதி சொகுசு வாகனத்தை சாதாரண பஸ்களுக்கு விதிக்கப்படும் வரியில் இறக்குமதி செய்கின்றது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதோடு அதற்கான வரி குறைப்புகளிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகளை பாதுகாத்து இலங்கையை பௌத்த இராச்சியமாக மாற்றப் போவதாக கூறிய அரசாங்கம் இறுதியில் நாட்டை சூதாட்ட பூமியாகவும் பட்டினியின் இருப்பிடமுமாகவே மாற்றியுள்ளது.
மஹிந்த சிந்தனை பெயரளவிலே உள்ளது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் பொது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். வாழ வேண்டிய பிள்ளைகளையும் வாழ வைக்க முடியாது பட்டினியில் அவர்கள் மரணிக்க வேண்டுமென்றால் தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களியுங்கள்.
Post a Comment