விபச்சாரம், கர்ப்பம்கலைப்பு, விவாகரத்து யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலவரம்
யாழ். மாவட்டத்தில் குறைந்த வயதில் பெண்கள் கர்ப்பம் தரித்தல் மற்றும் கருக்கலைப்புச் செய்தல் போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களுடன் 18 வயதுப் பெண்கள் முதல் 23 வயதுப் பெண்கள் வரை தொடர்பு பட்டுள்ளதாகவும் ஒரு வாரத்தில் மட்டும் தமக்கு 7 முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் அபிவிருத்தியும் வளங்களின் பயன்பாடும் சம்பந்தமாக உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றும் போது,
யாழ். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தற்போது விபச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை எங்களுடய கலாசாரம், பண்பாடு போன்றவற்றை முன்னிலைப்படுத்தி நாங்கள் மறைத்து வருகின்றோமே தவிர யாராலும் மறுத்து விட முடியாது. 18வயது முதல் 23 வயது வரையான இளம் பெண்கள் கர்ப்பம் தரித்து கர்ப்பத்தைக் கலைப்பதற்காக வருகின்றார்கள். எமது நிறுவனத்திற்கு ஒரு வாரத்தில் 7 முறைப்பாடுகள் வரை கிடைக்கப் பெற்றன. இவ்வாறு வரும் பெண்கள் கர்ப்பத்தைக் கலைப்பதோடு நின்று விடாமல் தங்கள் கணவன்மாரிடமிருந்து விவாகரத்துப் பெற்றுத் தருமாறும் கோருகின்றனர்.
இங்கே எமக்குப் பல கேள்விகள் எழுகின்றன இந்தப் பெண்கள் வேறுயாருடனும் தொடர்புபட்டுள்ளார்களா? அவர்கள் மூலம் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்களா? ஆனால் பாலியல் ரீதியான எதிர்பார்ப்புகளும் தேவைகளும் எல்லா மனிதர்களுக்குமே இயற்கையானது. அதை பிழை என்று கூறமுடியாது. இன்றைக்கு இவ்வளவு பிரச்சினைகளுக்கும் நாங்களும் ஒரு வகையில் காரணமானவர்கள். எனவே அதற்கான பரிகாரத்தை நாங்கள் தேடியே ஆக வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான் மோதலுக்குப் பின்னர் மகாத்மா காந்தி கூறினார். விதவைகளை மறுமணம் செய்யுங்கள் என்று. அப்படி எங்களில் எத்தனை பேர் தயாராகவுள்ளோம். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் யாழ்ப்பாணத்தில் சீதனத்துடன் பெண் தேடுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க பாதிக்கப்பட்ட பெண்களிடம் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என எப்படிக் கூற முடியும்?
89 ஆயிரம் விதவைகள் வாழ்கிறார்கள் அவர்களை எப்படி வாழ வைப்பது. என்ன செய்வது என்பது பற்றியெல்லாம் புலம்பெயர்ந்த மக்கள் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒருவரும் இளம் விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கத் தயாராக இல்லை. உண்மையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்கப்படாவிட்டால் சமூகப் பிறழ்வுகள் தவிர்க்க முடியாதவையாகி விடும்.
பாடசாலை மாணவர்கள் சீருடையைக் கழற்றி வைத்து விட்டுப் போகிறார்கள். அந்தளவிற்கு மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் விபச்சாரம் நடக்கின்றது. இன்றைக்கு இளம்பெண்கள் செல் போனில் பேசுகிறார்கள். நான் உன்னுடன் கதைக்கிறேன் நீ "றீலோட்' போடு என்று கூறுகிறார்கள். நவீனங்களை மறுக்கவில்லை. ஆனால் அது பயன்படும் விதத்தில் நாம் அக்கறையாக இருக்க வேண்டும் இன்றைக்குப் பெண்கள் முன்னேறவில்லை என நான் சொல்ல மாட்டேன்.
எனினும் பெண்கள் தாங்கள் கடமை புரியும் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். மோதல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களில் 29 வீதமானவர்கள் இன்றைக்கும் தங்கி வாழ்பவர்களாகவுள்ளனர் . இதனை விட கணவன்மார் பற்றிய தகவல்கள் தெரியாமல், கணவன்மாரைப் பிரிந்து வாழ்பவர்களாகவும் உள்ளனர். இவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அபிவிருத்தி அமைய வேண்டும்.
இதே வேளை அபிவிருத்தி பற்றிப் பேசுவதனால் ஒரு நாட்டின் அபிவிருத்தியில் பெண்களுக்கான அபிவிருத்தி என ஒன்று கிடையாது. காரணம் அபிவிருத்தி பொதுமையானது அமித்தியா சென் சுட்டிக் காட்டியதைப் போன்று அபிவிருத்தியில் ஜனநாயக விழுமியங்களை இணைக்கின்ற போது அது செழுமை பெற்று சமூகத்தின் அடிப்படைக் கலாசார விழுமியமாக மாற்றமடையும்.
எனவே அபிவிருத்தி தன்னிச்சையானதாகவோ கட்சிகள் சார்ந்ததாகவோ அமைந்து விடக்கூடாது. அப்படி அமைந்தால் அது சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் ஒன்றாகவே அமையும். இன்றைக்கு அரசு முழுவளங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கு நினைக்கின்றது. அரச சார்பற்ற நிறுவனங்களையும் கூட. குறிப்பாகக் கிளிநொச்சியில் ""போமிற்'' இல்லை, ஆவணம் இல்லை என மக்களை ஓரம் கட்டிக் கொண்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக எந்தக் கவலையும் கிடையாது. பூநகரியில் கே.பிக்கு 100 ஏக்கர் காணிகொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இது எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றதென்று தெரியவில்லை என்றார்.
Post a Comment