Header Ads



இலங்கையில் தூயநீருக்கு சவால்

இலங்கையில் தூயநீரைப் பெற்றுக்கொள்வதில் பல சவால்கள் உள்ளன.இலங்கை போதிய நீர்வளம் அற்றதொரு நாடு என்பதனால் எதிர்காலத்தில் குடிநீரைப் பெறுவதில் பெரும் பிரச்சினைகள் தோன்றும்.எனவே தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவது போன்ற மழைநீர் சேகரிப்புத்திட்டம் இங்கும் அமுல்படுத்தப்படவேண்டுமென இரசாயனவியலாளர் எஸ். பேராசிரியன் தெரிவித்தார்.

 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற "நீர்வளமும் சுகாதாரமும்' என்னும் தலைப்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

 எமது பிரபஞ்சத்தில் வேறு எந்தக் கிரகத்திலும் காணப்படாத பாரிய நீர் வளம் எமது பூமியில் உள்ளது.பூமியின் மேற்பரப்பு 70.8% நீரால் சூழப்பட்டிருக்கிறது.இந்த நீரில் 97.5% உப்பு நீராகும். மீதி நன்நீராக இருக்கின்றது. ஆனால், இந்த நன்நீரில் பெரும்பகுதி (87%) பனிக்கட்டிகளாக துருவப்பகுதிகளில் உறைந்து காணப்படுகின்றன.எனவே,மனித சமுதாயம் பயன்படுத்தக்கூடிய நீர் 0.26% மட்டும்தான்.

இருப்பினும் இந்தச் சொற்ப அளவு நீரில் பெரும்பகுதி மனிதனது நடவடிக்கைகளால் பெரிதும் மாசடைந்து வருகின்றது. அதன் விளைவாக உலக மக்கள் தொகையில் 40% மக்கள் நன்நீர் கிடையாது அவஸ்தைப்படுகின்றார்கள்.சுமார் 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் உலகில் நாளாந்தம் 14,000 குழந்தைகள் மாசடைந்த நீரினால் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றார்கள்.

 தொழிற்சாலைகள் நீர்வளங்களில் அகற்றும் உயிராபத்து நிறைந்த கழிவுப்பொருட்களே நீர் மாசடைதலில் முக்கிய பங்காற்றுகின்றன. விவசாயிகள் உபயோகிக்கும் களைக்கொல்லி,கிருமிநாசினி ஆகியவையும் நீருடன் பாய்ந்து குளம்குட்டைகள்,நதிகளை அடைகின்றன.நச்சுத் திரவங்கள்,உராய்வு நீக்கிகள், பிளாஸ்ரிக்குகள்,உலோகப் பொருட்கள் ஆகியனவும் நீர்நிலைகளை அடைந்து மாசுபடுத்துகின்றன. அமில மழை, வெள்ளப்பெருக்கு,எரிமலைக்குமுறல், பூகம்பம் மற்றும் புயல்போன்ற பேரழிவுகளாலும் நீர் வளங்கள் மாசடைகின்றன.

 நீர்மாசடைவதால் உணவுச்சங்கிலி பெரும் பாதிப்படைகிறது.உதாரணமாக அழுக்கு நீரை விலங்குகள் குடிக்கும்போது நச்சுப் பொருட்கள் அவற்றின் உடலுக்குள் செல் கின்றன.பின்பு அந்த விலங்குகளின் இறைச்சியை மனிதன் உட்கொள்ளும்போது நச்சுப்பொருட்கள் மனித உடலை அடைந்து பெரும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெங்கு,மலேரியா போன்ற பிணிகள் அசுத்த நீர் மூலமே பரவுகிறது. வயிற்றோட்டம்,வயிற்றுவலி தோல்நோய்,நரம்புத் தொகுதி பாதிப்படைதல்,வாந்திபேதி,சிறுநீரகம் மற்றும் இருதயப் பாதிப்பு ஆகிய நோய்கள் அழுக்கடைந்த நீரை பருகுவதாலேயே ஏற்படுகிறது. எனவே நன்நீர் பற்றாக்குறை மனித குலத்திற்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது.

 எங்கள் உடலில் உள்ள சகல உறுப்புகளும் தங்கள் இயக்கத்திற்கு நாம் குடிக்கும் நீரிலேயே தங்கியிருக்கின்றன.அது எங்கள் உடலில் ஒரு உராய்வு நீக்கியாக தொழிற்படுகிறது. உமிழ்நீருக்கு அடிப்படையானது நீர்.உடல் வெப்பநிலையைப் பேணுகிறது. உணவுகளை உணவுக்குழாய்வழியே நகரச் செய்து கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்த உதவுகிறது.பகல் சோம்பலைக் குறைக்கிறது. ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்கிறது. தோலுக்கு போஷாக்கு ஊட்டுகிறது. சமிபாடுசத்து உறிஞ்சுதல் மற்றும் தாக்கங்களை இலகுவாக்கி தொழிற்படவைக்கிறது.குருதிச் சுற்றோட்டத்தை நடைபெறச் செய்கிறது.கிட்ணியில் கல்வளர்வதை தடை செய்கிறது. மேலும் சிறுநீர் தொற்றை தடைசெய்கிறது.இவ்வாறு நன்நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளோ அளப்பரியன.

 எனவே, தூயநீரை நாளாந்தம் பருகி வருபவர்கள் நீண்ட ஆயுளைப் பெறுகின்றார்கள். எமது உடம்பு நீரை தேக்கி வைத்திருக்கும் ஆற்றல் அற்றது. கலங்களுக்கு நீரை வழங்கவும் கழிவுகளை அகற்றவும் நீர் மறுபடியும் நிரப்பப்படவேண்டும்.தற்காலத்தில் மக்கள் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்கு பல்வேறு காரணிகளுடன் முக்கியமாக தூயநீர் அருந்துதல் ஒரு காரணியாகக் குறிப்பிடப்படுகிறது.எனவே தூயநீரை அருந்துங்கள்.குழாயில் வரும் நீர் குளோரின் கலந்து இருப்பதாலும் கிணறு மற்றும் நீர் வளங்களில் பக்றீரியா கிருமிகள் உள்ள காரணத்தினாலும் நீரை கொதிக்க வைத்து ஆறியபின்பே குடியுங்கள்.

 எவ்வளவு நீர் நாளாந்தம் குடிக்க வேண்டுமென அறிவதற்கு ஒரு இலகுவான வழி உண்டு.அது உங்கள் எடையை பொறுத்தது.உதாரணமாக உங்கள் எடை 200 இறாத்தல் ஆயின் அதை இரண்டால் வகுக்க வரும் விடை 100.ஆகவே தினமும் நீங்கள் 100 அவுன்ஸ் அதாவது 12 கப் தூயநீர் அருந்த வேண்டும்.

 எமது இலங்கை வெளிப்படையில் போதிய நீர்வளம் உள்ள நாடுபோலத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல.பருவ காலங்களுக்கு ஏற்பவும் பிரதேச வேறுபாடுகளுக்கு ஏற்பவும் தூய நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சவால்கள் இலங்கையில் உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.கிராமப்புறங்களில் நன்னீரைப் பெறுவதில் தொடரும் இடர்களே அம்மக்கள் வறியவர்களாகவும் நோயாளிகளாகவும் இருப்பதற்கு பெரிதும் காரணமாகிறது.

நகர விரிவாக்கமும் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் குடிசனத்தொகையும் நீர் பற்றாக்குறையை சிக்கல் ஆக்கியுள்ளன.அதேவேளை இன்று 6 மில்லியனாக இருக்கும் மக்கள் தொகை இன்னும் இரு தசாப்த காலத்தில் 13 மில்லியனாக அதிகரிக்கும்.எனவே அதிகரிக்கும் இந்த மக்களுக்குத் தேவையான குடிநீரைப் பெறுவதில் பாரிய சவால்களைத் சந்திக்க நேரிடும்.தற்போது நகரப்புறங்களில் வானளாவ உயரும் தொடர்மாடிகளைக் காண்கிறீர்கள்.வானம் பொய்த்துவிட்டால் "நீர்வெட்டு'எனும் பேச்சு அடிபடுவதையும் நீங்கள் அறிவீர்கள்.

 அதேநேரம்,மொத்தக் கைத்தொழில் பயன்பாட்டிற்கான 5 % ஆக இருக்கும் நீர்ப்பாவனை 2025 இல் மூன்று மடங்காக அதிகரிக்கும் என விவசாய சக்திவள அமைச்சு தெரிவிக்கிறது.

 நகர்ப்புற மக்கள் மட்டுமல்ல கிராமப்புற மக்களும் நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சாத்தியம் தெரிகிறது.கடந்த 20 வருடங்களாக தரைநீர் பயன்பாட்டிற்கான கிணறுகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளமை கிராமிய மட்டங்களில் நீர் தொடர்பான பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வைப் பெற்றுத் தந்தாலும் நிலத்தடி நீர் வற்றி வருவதால் இதுவும் எதிர்காலத்தில் பிரச்சினையாக வளரும் சாத்தியம் உண்டு.எனவே தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவது போன்று மழைநீர் சேகரிப்புத் திட்டம் அமுல்படுத்தப்படவேண்டும்.

 எனவே தீவிரமடைந்துள்ள இப்பிரச்சினைக்கு நாடுகள் ஒன்றிணைந்து நீர் பயன்பாட்டைச் சிக்கனப்படுத்தி நீர் மாசடைதலைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல் மிக அவசியம்.இம்முயற்சியில் ஒரு அங்கமாக ஐ.நா.சபை 2005 - 2015 வரையான பத்து ஆண்டுத்திட்டம் "உயிர்நாடி நீர்' எனும் தலைப்பில் அறிவித்தது.மனிதர்கள் இயற்கை வளத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
 இணக்க சூழ்நிலையில் வாழ்வதற்கு நீர் வளமும் இயற்கை மூல வளமும் உத்தரவாதம் அளிக்கும்.இல்லையென்றால் மனித குலம் ஒருநாள் கூட இப்பூமியில் வாழ முடியாது.

No comments

Powered by Blogger.