தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 58 ஆக உயர்வு
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் போட்டி இலக்கங்கள் வழங்கப்பட்டதுடன், தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு 14 பாரிய வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதென கபே இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அரச சொத்துக்களை பயன்படுத்தியது தொடர்பில் 4 முறைப்பாடுகளும், அச்சுறுத்தல் தொடர்பில் 4 முறைப்பாடுகளும், சட்டவிரோத பிரச்சாரங்கள் குறித்து 36 முறைப்பாடுகள் உள்ளடங்களாக 58 முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதென கபே இயக்கம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கஹவத்தை, அக்கரைபற்று, மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மூன்று பதிவாகியுள்ளன.
இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, காலி, அம்பாறை, கம்பஹா மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
வேட்பாளர் போட்டி இலக்கம் வழங்கப்பட்டதன் பின்னர் வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை வேகமாக ஆரம்பித்துள்ளதால் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத பிரச்சாரங்கள் அதிகரித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை பாதுகாப்பதற்காக தேர்தல் திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் விரைந்து செயற்பட வேண்டும் என கபே இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கேட்டுக் கொண்டுள்ளார்
Post a Comment