யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும், பண்பாடும் (தொடர் - 5)
அப்துல் ரஹீம்.
போர்த்துக்கேயருடைய நாட்டுக்கு அண்மையில் உள்ள இஸ்லாமிய நாடு மொரோக்கோ அங்கு தாம் கண்டவர்களைப் போலவே சமய வணக்கங்களில் ஈடுபட்ட முஸ்லிம்களை இங்கும் மூர் என்று போர்த்துக்கேயர் அழைத்தனர். எனவே இலங்கை முஸ்லிம்களுக்கும் மொரோக்கோவுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்பதனை இதன்மூலம் அறியலாம். இந்த மூர் என்ற பதத்திற்கு தமிழ்ப்பதமாக சோனகன் என்ற பதம் வழக்கிலுள்ளது. இந்திய வரலாற்றாய்வாளர் துலுக்கர் (துருக்கர்) மகமதியர்கள் என்றே பெரிதும் முஸ்லிம்களைக் குறிக்க கையாளுகிறார்கள். சிங்களத்தில் மரக்கலமினிசு என்பதும் சிலவேளை இந்த மூர் என்பதன் மருவல் என்று வாதிடுவோரும் உளர். மரக்கலம் என்ற தமிழ்ப் பதத்திலிருந்தே மரக்கலமினிசு என்று வந்திருக்கவேண்டும் எனத் துணிவதே பொருத்தமாகலாம். இதேபோலசுவர்க்கத்திற்குரியவன் என்று பொருள்படும், சுவனன் என்ற பதம் மருவியே சோனகர் என்று வந்தது என வாதிடுவோரும் உளர்.
உலகினிலே வேறு எங்கும் முஸ்லிம்கள் சோனகர் என்று குறிப்பிடப்படாததால் இதிலும் தமிழின் செல்வாக்கே பிரதிபலிப்பதை காணலாம். இதனைவிட தமிழிலக்கியங்களில் உரோமர், கிரேக்கர், அராபியர் அனைவரும் யவனர் என்று குறிப்பிடப்படுகிறார்கள். யவனர் என்ற தமிழ்ப்பதத்திற்கு கம்மாளர், சித்திரக்காரர், சோனகர் என்ற பதங்களும் உண்டு. சோனகம் என்பது ஐம்பத்தாறு சேதங்களில் உன்று என்றும் பதினெட்டுப் பாசையில் உன்று என்றும் பொருள்படும். சோனகர் என்பதற்கு துலுக்கர், யவனர், உவச்சர் யவன தேசத்தவர் என்றும் பொருள்கள் அகராதியில் உண்டு. சிங்கள இலக்கியமான ஹிர சந்தேசய என்ற நூலில் இந்த யவன என்ற பதமே யோன் என்று குறிப்பிடப்படுவதும் ஈண்டு நோக்கத்தக்கது.. ஈழத்து நூல்களில் இந்தச் சோனகர் என்ற பதம் ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தின்பின் எழுந்த நூற்களிலேயே காணப்படுகிறது.
1344 இல் ஆரியச் சக்கரவர்த்தியுடன் உரையாடும் இப்னுபதூதா தன்னை அறிமுகம் செய்யும்போது சோழமண்டல (சுல்தான்) அரசனுக்குப் பெண் கொடுத்த மைத்துனனும் நண்பனும் என்று அறிமுகம் செய்கிறான். இவ்வாறு ஏற்பட்ட அறிமுகத்தால் சோழமண்டலத்தான் என்ற பதம் சோழகன் என்றும் பின்பு சோனகன் என்றும் மருவியிருக்கலமென துணியவும் இடமுண்டு. அல்லது சோழகக்காற்று எனப்படும் தென்மேல் பருவக்காற்று வீசும் காலத்தில்தான் பெரும்பாலும் ஈழமண்டலக் கரையினை அடைந்துள்ளதால், அதன் பெயரையொட்டியே சோழகர் மருவி சோனகராக வந்ததோ எனவும் துணியலாம்.
அரேபியரின் முதற் குடியேற்றம் யாழ்ப்பாணமும் அதனை சூழ்ந்த தீவுகளிலுNமு நடந்திருக்க வேண்டும். ஆரம்பகால முஸ்லிம்கள் பற்றிய குறிப்பை ஆராய்கையில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்றதாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. பாண்டு மகாராசன் காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள உசுமன்துறை, வலித் தூண்டல், சேந்தான் குளம் போன்ற பகுதிகளில் முக்குக குடியிருப்புகள் இருந்தன என்று காணப்படுகிறது. இவாகள் சிங்கள கூலியாட்களை கொண்டு மீன் பிடித்து கருவாடு ஆக்கி வணிகம் செய்து வந்துள்ளனர். கீரிமலையிலுள்ள நகுலேசர் ஆலயத்தை அசுத்தப்படுத்தினார்கள் என்ற காரணத்தால் இந்த முக்குவர்கள் வெளியேற்றப்பட்டு மட்டக்களப்பில் குடியேறினர்.
தொடரும்...
Post a Comment