Header Ads



விமான கட்டணத்தைவிட 30 % குறைவாக இலங்கை-இந்திய கப்பல்சேவை கட்டணம்

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவை முப்பது வருடங்களுக்குப் பின் மார்ச் முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு தூத்துக்குடிக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளும். இந்திய தரப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பார்வையிட இந்த அதிகாரிகள் குழு அங்கு செல்லும்.

தற்போதைய விமானக் கட்டணங்களிலும் பார்க்க இந்தக் கப்பல் சேவைக்கான கட்டணம் 30 வீதம் குறைவாக இருக்கும். ஆனால், மாதாந்தம் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதால் அதிகளவான வர்த்தக அனுகூலங்கள் கிடைக்குமெனக் கருதப்படுகிறது.

மார்ச் 01 தொடக்கம் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் அதிகளவுக்கு ஆர்வம் இருக்குமென எதிர்பார்க்கிறோம். சுற்றுலா, வர்த்தகம், யாத்திரை,கல்வி போன்ற நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளிடமிருந்தும் பல பயணிகள் கப்பல் மூலம் பயணம் செய்யும் சாத்தியம் இருக்கின்றதென்று கப்பல்துறைச் செயலாளர் ஜே.மோகனதாஸ் கூறியுள்ளார்.

இந்தியாவிலுள்ள பௌத்த தலங்கள்,இலங்கையிலுள்ள இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்கள் என்பன சமய ரீதியான சுற்றுலாவுக்கு அதிகளவுக்கு வழிவகுக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 800 பயணிகளை ஆரம்பத்தில் ஏற்றிச்செல்லக்கூடியதாக கப்பல் சேவை இடம்பெறும். பயணக் காலம் சுமார் 10 மணித்தியாலங்கள் ஆகும். முதலில் இரு நாடுகளுக்குமிடையில் இரு கப்பல் சேவைகள் இடம்பெறும்.

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் இந்த வருட நடுப்பகுதியில் கப்பல்சேவை ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இச்சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான பிணைப்புகள் வலுவடையுமென இராஜதந்திரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.