13 இலட்சம் மக்கள் பாதிப்பு, கன மழையும் தொடருமாம்
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி தெரிவித்தார்.
வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9664 வீடுகள் பகுதியளவில் சேதமடைந் திருப்பதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாண கூறினார்.
இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாகவே தற்போதைய மழைக் காலநிலை தொடருமென அவர் கூறினார்.
தற்போதைய மழைகால நிலையின் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. மீனவர்கள் முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்று முன்தினம் முதல் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கிய போதிலும் இலங்கைக்கு அருகில் திரும்பவும் அமுக்க நிலை உருவாகி இருப்பதால் மழைக் காலநிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment