யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும், பண்பாடும் பகுதி -1 , தொடர் 1
அப்துல் ரஹீம்
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு நீண்ட காலத்தைக் கொண்ட ஒன்றாகும். ஈழத்தில் முதலில் அராபியர் குடியேறி வாழ்ந்த பகுதிகள் தமிழர் பெருமளவினராக வாழ்ந்த வடபகுதியில்தான் என்பதனை முஸ்லிம்களின் தாய்மொழியாம் தமிழும் அவர்கள் பின்பற்றுகின்ற பண்பாட்டு அம்சங்களும் நன்கு புலப்படுத்துகின்றன.
என்றாலும் வரலாற்று ஆய்வாளர்கள் எதிர்கொள்ளுகின்ற சிலாசாசனங்களோ வேறுவகை நம்பத் தகுந்த சான்றுகளோ இதனை நிரூபிக்கப் போதியதாக இல்லாததால் இக்கருத்து பலமற்றுள்ளது.
முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் ஒரே இடத்தில் இருந்திருப்பார்களானால் அல்லது போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் அவர்கள் கட்டிடங்கள் சிதைக்கப்பட்டு சூறையாடப்பட்டு துரத்தப்படாது இருந்திருப்பார்களானால் சான்றுகள் கிடைத்திருக்கும்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் குடியேறிய காலத்திலிருந்து அவதானிக்கும்போது இன்று முஸ்லிம்கள் வாழுகின்ற பகுதி ஐந்தாவது அல்லது ஆறாவது இடம் என்பது தெளிவாகும்.
கிழக்குலகத்தில் போர்த்துக்கேயர் தலையெடுக்கும் வரை அரோபியர்களே பெரும் செல்வாக்கு உடையோராயிரந்தனர். அராபியரின் வணிகக் கணங்கள் தந்த பொற்குவையே கீழை நாடுகளில் சாம்ராஜியங்கள் தோன்றவும் காலாக இருந்துள்ளன.
இஸ்லாம் சமயம் முகம்மது நபி (ஸல்) அவர்களின் முயற்சியினாலே அரேபியாவில் வேரூன்ற முன்னதாகவே அராயியரின் வருகைப்பற்றி பண்டைய இலக்கியங்களில் பேசப்படுகிறது. இத்தகைய அராபிய வணிகர்களை இரண்டு பெரிய காரணிகள் இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாம்.
ஒன்று தென் ஆசிய நாடுகளின் மத்தியில் அமைந்திருந்த நிலைமையும் இங்கிருந்த வணிக வாய்ப்பும். அடுத்தது ஆதி பிதா ஆதம் (அலை) முதலில் இறக்கப்பட்ட இடம் இலங்கைதான் என்று அன்றும் நன்கு பரவியிருந்த செய்தி.
இக்காரணிகளால் வந்து உறவாடிய அராபியர் காலப்போக்கில் ஈழத்தின் காலநிலை, தரைத்தோற்றம், வணிக வாய்ப்பு என்பவற்றால் கவரப்பட்டு குடியேறியதில் வியப்புக்கு இடமில்லை. இவர்கள் இவ்வாறு எக்காலத்தில் வந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் குறைவாகவே உள்ளன.
பைஹகீ (ரஹ்) அவர்களும் தபரீ (ரஹ்) (கி.பி. 883) அவர்களும் ஆதம் (அலை) இலங்கையில்தான் முதன்முதலில் வந்திறங்கினர். அது அப்போது இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தது.
தொடரும்...
Post a Comment