Header Ads



நானும் தவறிழைத்தவளாகவே உணர்கின்றேன்


ஐக்கிய தேசியக் கட்சியை  மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று அந்தக் கட்சியின் புதிய பொதுச்செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.


கொழும்பு பிளவர் வீதியில் தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், "ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைவு குறித்து 2020 செப்டெம்பர் மாதத்திலிருந்தே நாம் கலந்துரையாடியிருக்கின்றோம்.


அப்போது நான் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராகக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.


பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் கபீர் ஹசீம் ஆகியோரை அழைத்து வந்து கலந்துரையாடியிருக்கின்றேன்.


இன்று இவ்விரு கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அன்றே நாம் உணர்ந்தோம். இந்த அபாயத்தை உணர்ந்ததன் காரணமாகவே இணைந்து பயணிக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தினோம்.


அன்று ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருந்ததால்தான் நாம் இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பதாகப் பெரும்பாலானோர் குறிப்பிட்டனர். ஆனால், இன்று என்னவாகியிருக்கின்றது.


கட்சிகள் இரண்டாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரே இரு தரப்பிலும் இருக்கின்றனர்.இதற்காக நானும் பிரதித் தலைவரும் அர்ப்பணிப்புடன் முயற்சித்து வருகின்றோம்.


அதற்கமைய பேச்சுகளையும் ஆரம்பித்திருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் எம்மால் இதனைத் தனித்துச் செய்ய முடியாது.கீழ் மட்டத்திலிருந்து சகலரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.


யானை சின்னத்தில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெற்றி பெற்றிருக்கின்றார். அவராகவே கோரிக்கையை முன்வைத்து யானை சின்னத்தில் போட்டியிட்டார்.


எனவே, இதனை மீளக் கட்டியெழுப்பினால் நிச்சயம் எம்மால் வெற்றி பெற முடியும். இது யதார்த்தமாகும். ஐ.தே.கவின் பிளவில் நானும் தவறிழைத்தவளாகவே உணர்கின்றேன். அன்று அனைவரும் இணைந்து எடுத்த தீர்மானத்துக்கு நாம் இணக்கம் தெரிவித்தோம்" என்றார்.

No comments

Powered by Blogger.