15 வருடங்களுக்கு பின், சிக்கிய கடாபி!
2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பேருந்தின் தகட்டை அகற்றி தப்பிச் சென்ற சந்தேகநபரான கடாபி என்ற உபேகா சந்திரகுப்தா 15 ஆண்டுகளுக்குப் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டிற்குத் திரும்பி பிலியந்தலைப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாகியிருந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2010 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி கெஸ்பேவ, மாகந்தன பகுதியில் உள்ள ஒரு கிராமிய வங்கியைக் கொள்ளையடிக்க சென்ற சந்தேக நபர்களில் முக்கிய சந்தேகநபர், கடாபி என்ற உபேக சந்திரகுப்தா ஆவார்.
மாகந்தன கிராமிய வங்கியைக் கொள்ளையடிக்க அவரும் மற்ற இரண்டு பேரும் சென்ற போது, நிறுவனத்தின் முகாமையாளர் அவசரகால ஒலிப்பானை அடித்ததும் கடாபியும் மற்றொரு சந்தேக நபரும் தப்பி சென்றனர்.
கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், கடாபியையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதன்போது அவரிடமிருந்து ஒரு கைக்குண்டு, துப்பாக்கி உள்ளிட்ட சில தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொரளை மெகசின் சிறைச்சாலையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பேருந்தின் உட்புறத்திலிருந்து இரும்புத் தகட்டை அகற்றி இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் சந்தேகநபர் சுமார் 10 ஆண்டுகள் வெளிநாட்டில் தலைமறைவாகி, விசா காலாவதியான நிலையில், சுமார் 6 மாதங்கள் அபுதாபியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் கடந்த 2021 ஆம் ஆண்டு நாடு திரும்பிய சந்தேகநபர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தலைமறைவாகி வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிலியந்தலை, மாம்பே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகநபர் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பிலியந்தலை பொலிஸார் இரண்டு நாட்களுக்கு முன்னர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கடாபியை கைது செய்தனர்.
சந்தேகநபர் தப்பிச் சென்று சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் வங்கிக் கொள்ளைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதற்கு முன்பு பல போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் நான்கு சந்தேக நபர்களுடன் சிறைச்சாலை அறையைத் தோண்டி தப்பிக்க முயன்றுள்ளார்.
2017 ஆம் ஆண்டு பாணந்துறை உயர் நீதிமன்றத்தில் சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஆஜராகாமல் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த வழக்கு தொடர்பாக சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment