இனவாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடமில்லை, சட்டத்துக்கு மேல் யாருமில்லை - அக்கிராசன உரையில் அடித்துக்கூறினார் ஜனாதிபதி
பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார்.
தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்ற வகையில் தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே, அனைத்து பிரஜைகளின் தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு தாம் கடமைப்பட்டிருப்பதாகவும், அதற்கு பொறுப்புக் கூறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மக்களுக்கான பொறுப்பு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இந்த தருணத்தில் இருந்து ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் எனவும், நாங்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை.
எந்தவொரு மதவாதத்திற்கும் இடமில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
"ஆனால் எமது நாட்டில் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத, கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என உறுதியளிக்கிறேன்"
அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
"வினைத்திறன் மிக்க அரச சேவை, மக்களின் நலனுக்காகச் செயற்படும் பொதுச் சேவை, இந்த நாட்டில் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம். அதற்காக அரச ஊழியர்களிடமிருந்தே எமக்கு பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன். அதில் கவனம் செலுத்தியுள்ளோம்"
ஒவ்வொரு பிரஜையும் அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்படக் கூடாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
"அரசியல் மாற்றங்கள் இருக்கலாம். சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. எனவே, அனைவருக்கும் அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை நாங்கள் உருவாக்குவோம் என்பதை உறுதியளிக்கிறோம்."
அக்கிராசனத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிகொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, சட்டத்துக்கு மேல் யாரும் இல்லை, நான், உட்பட அனைவரும் சட்டத்துக்கு கீழ்படிந்தவர்கள். அத்துடன், கடந்தகாலங்களில் இடம்பெற்ற மிகவும் கொடூரமான சம்பவங்கள் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டத்தின் முன், நிறுத்தப்படுவார்கள். அத்துடன், சட்டம் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழுப்புவோம்.
Post a Comment