Header Ads



காசாவின் அவலங்களை எடுத்துரைத்த இம்தியாஸ் - ஆளும், எதிர்க்கட்சிகள் பலஸ்தீனத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் இணைவு


சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம் இன்று(29) அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இலங்கை பலஸ்தீன்  
ஒரு­மைப்­பாட்டு இயக்கம் ஏற்­பாடு செய்­த நிகழ்வு கொழும்பு 07 இல் அமைந்துள்ள லக்‌ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர் கூடத்தில் இன்று -29- இடம்பெற்றது. 


முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சிங்கள மொழியில் எழுதிய “பலஸ்தீனம்” எனும் நூல் இங்கு உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. முதற் பிரதி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்ற் வழங்கி வைக்கப்பட்டது. 


இங்கு முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளருமான இம்தியாஸ் மாக்கீர் மாக்கார் ஆற்றிய உரையின் முழுமையான தமிழ் வடிவம் கீழே இணைக்கப்பட்டுகிறது; 


எனது உரை சிங்களத்தில் இடம்பெறுகிறது. என்றபோதிலும், குறிப்பாக எமது தூதுவர்களுக்காக மொழிபெயர்ப்பு இங்கு வழங்கப்படுகிறது என்பதை நான் அறிவேன்.


இந்த முக்கியமான நாளில், இந்த சிறப்புமிக்க  விருந்தினர் முன்னிலையில், இந்த புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


பாராளுமன்றத்தில் பாலஸ்தீன விவகாரம் குறித்த நான் ஆற்றிய உரைகளே இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கங்களாக அமைந்து காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் சிங்களத்தில் ஆற்றிய உரைகளாக காணப்படுகின்றன. இவ்வுரைகளின் போது  ஆங்கிலத்தில் எடுத்துரைத்த சில மேற்கோள்களையும் இப்புத்தகத்தில் சேர்த்துள்ளேன்.


ஒவ்வொரு வருடமும் வழக்கம்போல நாம் கொண்டாடும் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினத்தில் வைத்து இன்று இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது.


பலஸ்தீன சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் வலி மிகுந்த காலப்பகுதி கடந்து செல்லும் நேரத்தில், நமது நாட்டு மக்கள் சார்பாக நாம் இந்த ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறோம். 


மனிதாபிமானமற்ற தன்மையின் உச்சத்தை இன்று காஸாவில் நாம் காண்கிறோம். இலத்திரனியல் பல் ஊடகங்கள், தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் சமூக ஊடகங்களில் அங்கு நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக கண்டு வருகிறோம்.


மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசி, கர்ப்பிணித் தாய்மார்கள், பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்  தாக்கப்பட்டு கொலை செய்து வருவதை பார்க்கிறோம். பாடசாலைகள் மீது குண்டுகளைப் பொழிந்து, சிறார்களை சாம்பலாக்குவதை நம் கண்களால் பார்க்கிறோம். 


கிரிக்கெட் போட்டி முடிவுகள் வெளியாவதைப் போல, பலஸ்தீன மண்ணில் எத்தனை பேர் பலியாகிறார்கள் என்பதை தினமும் ஊடகங்கள் வாயிலான செய்திகளில் பார்க்கிறோம்.


சர்வதேச சட்டத்தை மதிக்காது இஸ்ரேல் நடந்து வருகிறது. எம்மைப் போன்ற சிறிய நாடுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, சர்வதேச சட்டத்தின் பாதுகாப்பு நிமித்தம் இருந்து வரும் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், மனித உரிமைகள் பேரவை போன்றவற்றுக்கு அடிபணியாது, இந்நிறுவனங்களுக்கு கடமைப்படாது நடந்து வருகிறது. 


நாளை எம்மைப் போன்ற ஒரு சிறிய நாடு இவ்வாறானதொரு சவாலை எதிர்கொள்ள நேரிட்டால், பாதுகாப்புக்காக இருந்து வரும் சுதந்திரமான நிறுவனங்களைச் சுதந்திரமாகச் செயல்பட வைப்பதற்கும், அவற்றைப் பலப்படுத்துவதற்கும் நாம் உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்.


இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான குழந்தைகள், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பெண்கள், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பொதுமக்கள், நாளாந்தம் நூற்றுக்கணக்கானோர் இறந்து மண்ணுலக வாழ்க்கைக்கு அனுப்பும் மனிதாபிமானமற்ற நடவடிக்கையை நாங்கள் எங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை.


60/70 களில், பலஸ்தீன சுதந்திர இயக்கம் மிகவும் சக்திவாய்ந்த, வலுவான இயக்கமாக செயல்பட்டது. இலங்கை, இந்தியா, யூகோஸ்லாவியா போன்ற நாடுகள் இதில் முன்னணியில் இருந்தன. அன்றைய சர்வதேச அரங்கில் இந்நாடுகள் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியது. இதன் பிற்பட்ட காலங்களில், உலக நாடுகள் மனசாட்சியை மறந்து, பாதிக்கப்பட்டவருக்குப் பதிலாக, ஆக்கிரமிப்பாளர் பக்கம் மௌனம் காத்து  நிற்பதை மட்டுமே பார்த்து வந்தோம். 


ஆனால், நீதிக்காக, உலகெங்கிலும் உள்ள மக்கள் தெருக்களில் இறங்கி, கடந்த காலத்தில் பலஸ்தீன விடுதலைக்காக முன்வந்து எழுந்து நிற்பதை நாம் காண்கிறோம். இப்போது ஒரு மாற்றம் தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் சமத்துவத்திற்காக வீதியில் இறங்கியதை நாம் பார்க்கிறோம். உலகம் முழுவதும் யூத சமூகத்தவர்கள் கூட பலஸ்தீன விடுதலைக்காக குரல்கள் எழும்பி வருவதை  கண்டோம்.


சமீபத்தில், அவுஸ்ரேலிய அரசாங்கம் இஸ்ரேலிய அமைச்சர் ஒருவருக்கு தடை விதித்ததைப் பார்த்தோம். 


அமெரிக்கா, இஸ்ரேல் தவிர, ஐரோப்பிய ஒன்றியம், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் தற்போது சர்வதேச நீதிமன்றத்தை நாடத் தொடங்கியுள்ளன.


தென்னாப்பிரிக்காவில் மண்டேலாவின் குரலுக்கு இறுதியில் பணிந்தது போல, பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான அறைகூவலுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் செவிசாய்க்க வேண்டிய நாள் நெருங்கிவிட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும். 


பேரழிவின் மத்தியில் பலஸ்தீன விடுதலைக்கான உலக அபிப்பிராயத்தின் வெளிச்சக் கோடுகள் வெளிப்படுவதையே நாம் இப்போது காண்கிறோம்.


எனவே, நமது நாட்டின் அரசியல் தலைவர்களும் நீதிக்காக உரத்து குரல் எழுப்ப வேண்டும். இதன் மூலம் தான் பாலஸ்தீனத்துக்கு சுதந்திரத்தை எட்டும் தினத்தை விரைந்து ஏற்படுத்த முடியும்.


பலஸ்தீன விடுதலைக்காக உலகம் முழுவதும் உருவாகி வரும் இந்த முற்போக்கான போக்கில், இன்று ஆளும் கட்சியைப் போலவே எதிர்க்கட்சியின் பிரதான தரப்பும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாலே இலங்கையாலும் முன்னணியில் வகிப்பது சாத்தியமாகியுள்ளது. 


அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தது போல், நாம் அரசியல் ரீதியாக வேறு நிலைப்பாடுகளில் இருந்தாலும், எதிர்க்கட்சி பலஸ்தீன் விடயத்தில் சரியான நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக உறுதியாக இருந்து வருகிறது. சில சமயம் சஜித் பிரேமதாச இந்த விவகாரத்தில் என்னை விட ஒரு படி மேலே செயற்பட்டுள்ளார். அவர் எடுத்த நடவடிக்கைகளே இதற்கு சாட்சி பகிரும். 


இதன் மூலமே பாலஸ்தீனத்திற்கு சுதந்திர தினத்தை விரைவுபடுத்த முடியும். அந்நாள் விரைவில் வரட்டும்! பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறட்டும்! 


நன்றி!

No comments

Powered by Blogger.