Header Ads



23 நாட்களின் பின் உயிரிழந்த மாணவன்


 பதுளையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் 23 நாட்களின் பின் இன்று (23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் 2019ஆம் ஆண்டு கணிதப்பிரிவு மாணவனான கைலைநாதன் சிந்துஜன் என்பவரே உயிரிழந்தவராவார்.


கடந்த முதலாம் திகதி கொழும்பிலிருந்து பதுளைக்கு களப்பயிற்சிக்காகச் சென்று கொண்டிருந்த வேளை பதுளை – மஹியங்கனை வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடம் புரண்டதனால் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர்.


பஸ் சாரதி உட்பட 36 பேர் காயமடைந்திருந்தனர். காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் படுகாயமடைந்திருந்த 6 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.


படுகாயமடைந்திருந்த சிந்துஜன் கடந்த வாரம் இரத்மலானையில் அமைந்துள்ள பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இன்று அதிகாலை 5:30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.


இவருடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.


யாழ் விசேட நிருபர்

No comments

Powered by Blogger.