புலிகளின் எந்த முக்கிய, தலைவர்களும் உயிர் தப்பவில்லை - எரிக் சொல்ஹெய்ம் திட்டவட்டமாக தெரிவிப்பு
கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உண்மையிலேயே பிரபாகரனை அடிக்கடி சந்தித்த தமிழரல்லாத ஒருவர் நானாக தான் இருக்க வேண்டும். சில வெளிநாட்டவர்கள் பிரபாகரனை சந்தித்தார்கள். அந்த சந்திப்புகள் உலகை பற்றியே ஒரு தவறான நோக்கை கொடுத்திருக்க வேண்டும்.
வெளியுலகை அவர் விளங்கிக்கொள்ளவில்லை. மேலும், பல வெளிநாட்டவர்கள் பிரபாகரனை சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரும் விட்டுக்கொடுப்பை செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவர் உணர்ந்திருக்கக்கூடும். சமாதான இணக்கத் தீர்வு ஒன்று தேவையானால் இரு தரப்பும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது.
கேள்வி: பிரபாகரன் என்ற தனிநபரை பற்றி கூறுங்கள்?
பதில்: பிரபாகரன் போரின் இறுதிக்கட்டம் வரை நீண்டகாலம் ஒரு சிறந்த வீராப்புடைய இராணுவ தலைவராக இருந்தார். உலகில் சொந்த விமானப்படையையும் கடற்படையையும் நிறுவிய அரசு அல்லாத தரப்பாக புலிகள் மாத்திரமே இருந்தனர்.
ஆனால், அவரின் அரசியல் விளக்கப்பாடு துரதிர்ஷ்டவசமாக இதைவிட பெருமளவு குறைவானதாகவே இருந்தது. இவருக்கு தென்னிலங்கை, இந்தியா மற்றும் வெளியுலகம் குறித்த இணக்கப்பாடு பெரிதாக இல்லை.
புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்தில் இருந்த பலர் அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கினார்கள். நெருக்கடிக்கு தீர்வொன்றை காண்பதைக் காட்டிலும் விட்டுக்கொடாத ஒரு தலைவராக இருக்குமாறு அவருக்கு கூறினார்கள்.
சகல வாக்குறுதிகளையும் அவர் காப்பாற்றினார் என்பதை நாம் கூறத்தான் வேண்டும். எங்கெல்லாம் வாக்குறுதி அளித்தாரோ அங்கெல்லாம் இராணுவ நடவடிக்கையை நிறுத்தினார். அவரது படைகள் மீது அவருக்கு முழுமையான கட்டுப்பாடு இருந்தது.
பாலசிங்கம் தான் அவரது பிரதான ஆலோசகரும் நம்பிக்கைக்குரியவராகவும் விளங்கினார். பாலசிங்கத்தின் அறிவுரைகளை பிரபாகரன் கேட்டு நடக்கும் வரை அநேகமாக சகல விடயங்களுமே சரியான திசையில் சென்றன. ஆனால், பாலசிங்கத்தின் அறிவுரைகளை கேட்காத சந்தர்ப்பங்களில், எல்லாமே பிழையாகிப்போனது.
அவரது தனிப்பட்ட ஆளுமை என்று வரும்போது நல்ல சுவையான சமையல்காரர். நாம் இருவரும் சேர்ந்து நல்ல உணவுகளை சாப்பிட்டிருக்கின்றோம். ஆனால், அவர் மிகவும் ஜாக்கிரதையான பேர்வழி. அவருக்கு நெருக்கமாக போவதென்பது சுலபமானதல்ல.
பாலசிங்கத்தின் அறிவுரைகளை பிரபாகரன் முழுமையாக கேட்டிருந்தால் பல்வேறு விடயங்கள் வித்தியாசமானவையாக இருந்திருக்கும்.
விடுதலைப் புலிகள் கிழக்கு மாகாணத்தை இழக்கப்போகிறார்கள் என்று பாலசிங்கம் என்னிடம் கூறினார். பாலசிங்கத்தின் முயற்சிகளை பிரபாகரன் ஆட்சேபித்த காரணத்தால் வடக்கையும் கூட இழக்கவேண்டி வந்தது.
பாலசிங்கத்தை பொறுத்தவரை விடுதலைப் புலிகள் புதிய இராணுவ தந்திரோபாயத்துக்கு முயற்சிக்காமல் சமாதான முயற்சிகளை தொடர வேண்டும் என்று பாலசிங்கம் நினைத்தார். பாலசிங்கத்தின் அறிவுரைகளை விடுதலைப் புலிகள் கேட்டு நடந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலை எவ்வளவோ மேம்பட்டதாக இருந்திருக்கும் என்று நிச்சயமாக கூறுவேன். ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் வடக்கில் தமிழர்கள் ஓரளவு சுயாட்சியை அனுபவித்திருப்பார்கள்.
கேள்வி: பிரபாகரனும் சரணடைந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா
பதில்: என்னிடம் அது பற்றிய எந்த தகவலும் இல்லை. 2009 மே 18 அவரும் அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதற்கான அறிகுறிகளே தெரிந்தன. நாம் முன்வைத்த யோசனையினால் அந்த நேரத்தில் பிரச்சினையை தீர்த்திருக்க முடியும் என்று நம்பினேன்.
எமது யோசனையை அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா ஆகியன ஆதரித்தன. அது ஒரு வலிமையான யோசனை. நீங்கள் போரில் தோற்றுக்கொண்டு போகிறீர்கள் வெற்றிப் பெறுவதற்கு எந்த வழியும் இல்லை என்று பிரபாகரனிடம் கூறினோம்.
ஒவ்வொரு போராளியும் பதிவு செய்யப்பட்டு கப்பல் மூலம் தெற்கிற்கு அல்லது வெளிநாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதே எமது யோசனையாகும்.
சரணடைந்த பிறகு எவருமே கொடுமைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஆதரவு கிடைத்தது. அந்த யோசனை பயனளிக்கும் என்று நாம் நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், அதை 2009 ஏப்ரலில் பிரபாகரன் நிராகரித்து விட்டார்.
ஆனால், விடுதலைப் புலிகளின் எந்த முக்கிய தலைவர்களும் உயிர் தப்பவில்லை. ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மரணமடைந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
உண்மை
ReplyDelete