எதிரணியினருக்கு பெரும் அவமானம் - பிரதமர் மஹிந்த
பொதுத்தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கும், மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலாற்று வெற்றியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால் தாம் பெருமகிழ்ச்சியடைவதாகவும், தேர்தலுக்குப் பயந்து கொண்டிருந்த எதிரணியினருக்கு இந்த தீர்ப்பு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் திகதி மற்றும் ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்திருந்தது.
இது தொடர்பில் கூறும் போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
எதிரணியினர் தங்கள் உள்வீட்டுப் பிரச்சினையை சமாளிக்க முடியாத நிலையிலும், தேர்தல் தோல்வியை எதிர்கொள்ள திராணியற்ற நிலையிலும் கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி தேர்தல் வேண்டாம் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்றம் சென்றனர்.
இந்தநிலையில், அவர்களின் சுயலாப அரசியல் முயற்சியை உயர்மன்றத்தின் தீர்ப்பு தோல்வியடையைச் செய்துள்ளது. நாம் எதிரணியில் இருந்த போதும் தேர்தலுக்குப் பயப்படவில்லை.
தற்போது ஆளுந்தரப்புக்கு வந்தபோதும் தேர்தலுக்குப் பயப்படவில்லை. ஆனால், எதிரணியினர் ஆளுந்தரப்பில் இருந்தபோதிலும் தேர்தலுக்கு அச்சமடைந்தனர்.
இப்போது எதிர்த்தரப்பில் இருக்கின்ற போதிலும் தேர்தலுக்கு அச்சமடைகின்றனர். இப்படியானவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரத்தை நாட்டு மக்கள் ஒருபோதும் வழங்கமாட்டார்கள்.
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் மக்கள் எம்மை வெற்றியடையச் செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment