Dr ஷாபி முஸ்லிம் என்பதால், இனவாத வழக்கு சோடிக்கப்பட்டு இலக்கு வைக்கப்பட்டுள்ளார் - சட்டத்தரணி நவரத்ன
(எம்.எப்.எம்.பஸீர்)
சட்ட விரோத கருத் தடை விவகாரம் தொடர்பில் குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நீதிவான் நீதிமன்ற விசாரணைகள் இன்று குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிணையில் உள்ள வைத்தியர் ஷாபி மன்றில் ஆஜரகியிருந்தார். அவர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டாரவின் கீழ், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன், சைனாஸ் அஹமட், பசன் வீரசிங்க, ஹரித்த நவரத்ன பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜரானது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கல்யானத்த திரானகமகே, மொஹாம், சட்டத்தரணி சானக உள்ளிட்டோர் ஆஜராகினர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.திலகரத்ன, சமூக கொள்ளை விசாரணைன் அறையின் புதிய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயசுந்தர, பொலிஸ் பரிசோதகர் மொஹான், பொலிஸ் கான்ஸ்டபிள் சில்வா ஆகியோரை கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று பிரிவின் வைத்தியராக இருந்த சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி முஸ்லிம் என்பதாலேயே அவர துரத்தி இலக்கு வைக்கப்படுவதாக அவரது சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டார இதன்போது நீதிமன்றில் தெரிவித்தார்.
இனவாதத்தின் அடிப்படையிலேயே குறித்த வழக்கு சோடிக்கப்ப்ட்டுள்ளதாகவும் வைத்தியர் ஷாபி தொடர்பிலான இந்த விவகாரத்தில், அரசியலமைப்பின் 12 (3) ஆவது சரத்து மீறப்பட்டுள்ளதாகவும், அதனால் சாட்சிகள் இன்றி குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது சேவை பெறுநரை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.
இதன் பின்னர் விடயங்கள் அனைத்தையும் ஆராய்ந்த குருணாகல் நீதிவான் சம்பத் ஹேவாவசம், சி.ஐ.டி. கோராமலேயே விஷேட உத்தரவொன்றினை சி.ஐ.டி.க்கு வழங்கினார்.
இதுவரை இவ்விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் சில பரஸ்பர தன்மைகள் உள்ளன.
எனவே அவை தொடர்பில் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் இருந்து மீள வாக்கு மூலங்களை பதிவு செய்யவும் என புதிய விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டார்.
அதனபடி புதிய விசாரணைக் குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ஒரு மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டு இவ்வழக்கு எதிர்வரும் 2020 ஜனவரி 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Post a Comment