பொது பலசேன என்பது 'பௌத்த சக்தியின் இராணுவம்' - அவுஸ்ரேலிய ஊடகம்
[அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்ட The Global Mail என்னும் ஊடகம் 'HOW NOT TO WIN A WAR' என்னும் கட்டுரைத் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகின்றது. ERIC ELLIS எழுதியுள்ள அக்கட்டுரைத் தொடரின் THE MONKS’ ARMY என்னும் இரண்டாம் பகுதி இது. இதனை மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி]
பொது பல சேன என்பது 'பௌத்த சக்தியின் இராணுவம்' என மொழிபெயர்க்கப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் மூத்த அரசியல்வாதிகளின் துணையுடன் உருவாக்கப்பட்ட பொது பல சேன, ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து பிரிந்து சென்று உருவாக்கப்பட்டது. அதாவது சிறிலங்காவின் மிகப் பிரதான மதக் கட்சியான ஜாதிக கெல உறுமய மிதவாத சக்தியாகச் செயற்படுவதைக் காரணங் காட்டியே பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாதக் குழு உருவாக்கப்பட்டது.
இதிலிருந்து பொது பல சேன அமைப்பானது தான் சிறிலங்காத் தீவில் பௌத்தத்தைப் பாதுகாக்கின்ற உண்மையான ஒரு பாதுகாவலன் எனத் தன்னைத் தானே உரிமை கோரிக் கொண்டது. சிறிலங்காவில் தற்போது அமைதி நிலவினாலும் கூட, சிங்கள பௌத்த பேரினவாதிகள் பொது பல சேனவின் கருத்திற்கு மதிப்பளிக்கின்றனர். அதாவது சிறிலங்காத் தீவும் பௌத்தமும் ஒருபோதும் ஆபத்தைச் சந்திக்கக் கூடாது என்பது இந்த அமைப்பின் கருத்தாகும்.
விழிப்புணர்வை வழங்குகின்ற, மதக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்ற பொதுபல சேனவானது முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்களைக் குறிவைத்து தாக்குதலை மேற்கொள்கின்றது. முஸ்லீம் புனித தலங்கள், வர்த்தக நிலையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதலை மேற்கொள்கின்றது. இதில் சிறிலங்கா காவற்துறையினர் சிறிதளவில் தலையீடு செய்கின்ற போதிலும், பொது பல சேனவானது அதனையும் எதிர்த்து தனது நடவடிக்கையை மேற்கொள்கிறது.
சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் அடிப்படை மத மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதேவேளையில், முஸ்லீம் வைத்தியர்கள் சிங்களப் பெண்கள் கரித்தரிக்காது இருப்பதற்கான மருத்துவத்தைச் செய்வதாகவும் பொதுபல சேன குற்றம் சாட்டுகிறது. பௌத்த மதத்தைத் திரிவுபடுத்தி கத்தோலிக்கர்கள் தமது மதத்தைப் பரப்புவதற்காக பரப்புரைகளில் ஈடுபடுவதாகவும் பொதுபல சேன தேவாலய நிர்வாகங்களை எச்சரித்துள்ளது.
பொதுபல சேன அமைப்பானது 'தீவிரவாத அமைப்பு' என சிறிலங்காவின் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விபரித்துள்ளார். "சிங்கள சமூகத்தின் கல்வியறிவற்ற கீழ்த்தர சமூகத்திலிருந்து தோற்றம் பெற்ற ஒரு இனவாத-மதவாத பாசிச அமைப்பே பொதுபல சேன" என சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரியான டயான் ஜெயதிலக முத்திரை குத்தியுள்ளார். இந்த அமைப்புத் தொடர்பான தமது விசனத்தை தமிழ்த் தலைவர்களும் முன்வைத்துள்ளனர்.
"இது ராஜபக்ச அரசாங்கத்தால் விளையாடப்படும் ஒரு விளையாட்டு என நான் கருதுகிறேன். இந்த அரசாங்கத்தை விட சிங்கள –பௌத்த தீவிரவாத அமைப்பொன்றை எம்மால் அடையாளப்படுத்த முடியாது என நான் கருதுகிறேன். இந்நிலையில் பொதுபல சேன என்கின்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்பானது சிறிலங்கா அரசாங்கத் தரப்பிலிருந்து தீடீரெனத் தோற்றம் பெற்றுள்ளது. தற்போது ராஜபக்ச அரசாங்கமானது பார்ப்பதற்கு மிதவாதி போல் தென்படுகிறது" என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரும் போரால் அழிவுற்ற வடக்கு கிழக்கில் செயற்படும் செயற்பாட்டாளருமான குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
போருக்குப் பின்னான சிறிலங்காவில் பௌத்த ஆயுதக் குழுவொன்று தோற்றம் பெற்றுள்ளது. பர்மா மற்றும் தென்கிழக்காசியாவில் போர் நடைபெற்ற நாடுகளில் இடம்பெற்ற சீர்திருத்தச் செயற்பாடுகளைப் பிரதிபலிப்பதாகவே பொதுபல சேனவின் செயற்பாடுகளும் உள்ளன.
பொதுபல சேனவின் பிரதம நிறைவேற்று இயக்குனரும் இதன் பௌத்த தலைமைத்துவக் கல்லூரியின் நிகழ்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளருமான டிலன்ந்த விதனேஜ்ஜை ((Dilanthe Withanage) The Global Mail ஊடகமானது இந்த அமைப்பின் செயலகம் ஒன்றில் சந்தித்தது. தனது 40வது வயதுகளில் உள்ள விதனேஜ் ஆங்கிலம் மற்றும் ரஸ்ய மொழிகளில் உரையாடினார். "இந்த நாட்டில் பௌத்தம் பாதுகாக்கப்படவில்லை என நாம் உணர்ந்தோம். அத்துடன் பௌத்தர்கள் உள்நாட்டிலும், அனைத்துலகிலும் மிகப் பெரிய ஆபத்தைச் சந்திக்கின்றார்கள். இதனாலேயே பௌத்தத்தையும் பௌத்தர்களையும் பாதுகாப்பதற்காக நாங்கள் பொது பல சேன என்கின்ற இந்த அமைப்பை உருவாக்கினோம்" என விதனேஜ் கூறினார். சிறிலங்கர்களில் 75 சதவீதத்தினர் தம்மை பௌத்த சிங்களவர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அரசாங்கத்தின் குறிப்பாக அதிபர் ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாயவின் உருவாக்கமே பொதுபல சேன எனப் பெரும்பாலான சிறிலங்கர்கள் நம்புகின்றனர். சிறிலங்காவில் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாத, முன்னாள் போர் வீரரும், 2009 வரை தமிழ்ப் புலிகளை அழிப்பதற்கான போருக்குக் கட்டளை வழங்கியவருமான கோத்தபாய ராஜபக்ச தற்போது நாட்டின் பாதுகாப்புச் செயலராக பணிபுரிகிறார். பொது பல சேனவுடன் தனக்கு தொடர்பு உள்ளது என்கின்ற குற்றச்சாட்டை கோத்தபாய நிராகரித்துள்ளார்.
மும்பையைத் தளமாகக் கொண்டியங்கும் சிவ சேன அமைப்பு மற்றும் இந்திய தேசியவாதக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் நிழலாகச் செயற்படும் தேசிய இந்துத் தீவிரவாத நாட்டுப்பற்றாளர் அமைப்பான Rashtriya Swayamsevak Sangh போன்றவற்றின் செயற்பாடுகளை ஒத்ததாக பொதுபல சேன காணப்படுகிறது.
இவ்வாறான ஒப்பீடுகளை பொதுபல சேனவின் பிரதம நிறைவேற்று இயக்குனர் விதனேஸ் மறுக்கிறார். "நாங்கள் எந்தவொரு அரசியற் செல்வாக்கையும் கொண்டிருக்கவில்லை" என இவர் கூறுகிறார்.
"ஜேர்மனி நண்பரான' Michael Kreitmeir எவ்வாறு பொதுபல சேனவுக்கு உதவினார் என்பதை அறிவதற்காக The Global Mail ஊடகம் அவரைச் சந்தித்தது. தனது தொண்டு நிறுவனமான Little Smile இன் ஒரு பகுதியாக 2007ல் காலியில் Meth Sevena’ என்கின்ற மத மையம் ஒன்று உருவாக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இதன் உரிமை தனக்கு மறுக்கப்பட்டதால், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொழும்பிலுள்ள பௌத்த கலாசார மையத்தை தான் அணுகியதாக மைக்கேல் கிறெய்ற்மெயர் என்கின்ற ஜேர்மனியர் கூறினார். ஆனால் இந்தப் பிரச்சினையுடன் பொதுபல சேன தொடர்புபட்டுள்ளது என்பதை தான் அறிந்தபோது தான் அதிர்ச்சியுற்றதாகவும், பின்னர் இத்திட்டத்தை திறந்து வைப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச கலந்து கொண்டதானது தனக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் இவர் கூறினார். "ஒருபோதும் பொது பல சேனவின் மையமாக இருக்க முடியாது" என கிறெய்ற்மெயர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டின் ஆரம்பத்தில், இஸ்லாமியர்கள் தமது மத வழிகாட்டலுக்கேற்ப மிருகங்களைப் பலியிடுதல் மற்றும் 'ஹலால்' முத்திரை குத்தப்பட்ட உணவுகள் விற்கப்படுதல் போன்றன தொடர்பில் சிறிலங்கா அதிபரின் ஆலோசகரும், கொழும்பு பொது அமைப்புக்களின் முதன்மையான பிரதிநிதியுமான மிலிந்த மொறகொட சிங்கள இஸ்லாமியத் தலைவர்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துகின்ற ஒரு கருத்தரங்கு ஒன்றை நடாத்துவதற்கு வழிவகுத்தார். இதில் முஸ்லீம் மற்றும் பௌத்த தலைவர்கள் வெளிப்படையாகத் தமது கைகளை ஒன்று சேர்த்து ஒற்றுமையைக் காட்டினர்.
ஆனால் இந்தக் கருத்தரங்கின் பின்னர் பொது பல சேனவானது 'ஹலால்' உணவுப் பொருட்கள் மீது தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியதுடன், "பௌத்தத்தின் புனிதத்தை மிலிந்த மொறகொட களங்கப்படுத்துவதுடன், புனிதமான பிக்குகளின் கருத்துக்களை அழிக்க முற்படுவதாகவும்" குற்றம் சுமத்தியது.
"பௌத்த மதத்தை கடைப்பிடிக்கின்றவன் என்ற வகையில், உண்மையான பௌத்தமானது நடுநிலையானது. அதாவது விட்டுக்கொடுப்புக்கள் சகிப்புத்தன்மை போன்றவற்றைக் கூறுகின்றது. இவ்வாறான ஒரு பௌத்தத்தையே நான் பின்பற்றுகிறேன். விட்டுக்கொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மை போன்றவற்றை உபதேசித்த புத்த பெருமான் தீவிரவாதத்தை எதிர்த்தார். ஒரு புனிதமான மதத்தைக் காப்பாற்றுபவர்கள் எனத் தம்மைத் தாமே கூறிக்கொள்ள வேண்டிய தேவையில்லை" என மிலிந்த மொறகொட The Global Mail ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
"மதம் என்பது தனிப்பட்ட விடயம்" என விதனேஸ் கூறினார். ஆனால் அண்மைய சில மாதங்களாக விதனேஜ்ஜின் பொது பல சேனவானது வெளிப்படையாக மத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
ஜனவரியில், கொழும்பின் தெற்கிலுள்ள, பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் சிறிலங்காவின் மிகப் பெரிய நிறுவனமான 'ஜோன் கீல்ஸ்' நிறுவனத்தின் விடுதி ஒன்றில் விருந்தொன்றை வைப்பதென பொது பல சேனவின் தலைமைப்பீடம் தீர்மானித்திருந்தது.
'கீல்ஸ்' என்கின்ற இந்த நிறுவனமானது பல்துறை சார் வர்த்தக நிறுவனமாகும். அதாவது தகவற் தொழினுட்பம், வங்கிகள், தேயிலைத் தோட்டங்கள், விடுதிகள், வர்த்தகம் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் தனது கால்களைப் பதித்துள்ளது. இது ராஜபக்ச சகோதரர்களின் ஆதரவுடன் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது. 'கீல்ஸ்' நிறுவனத்தின் தலைவரான சுசந்த ரட்ணாயக்க உள்ளார். தொடரும்...!
Post a Comment