Header Ads



வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களின் கடமைகள் (பகுதி 4)

(அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலே இது)

10) இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்த வேண்டுமா? 

எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ளவெண்டும் என்பதுதான் அரசியலில் முதிர்ந்த எமது முன்னோர்களின் நிலைப்பாடாகும். அதற்கு பல்வேறு ஆதாரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு விடயத்திலும் நாம் அத்துறைசார்ந்தவர்களிடமிருந்தே படிப்பினை பெறவேண்டும். அந்தவகையில் ஜம்இய்யாவின் நிலைப்பாடும் இதுவாகவே இருக்கின்றது. இலங்கையில் முஸ்லிம்களின் வரவலாறு சம்பந்தமாக கலாநிதி லோனா தேவறாஜ் அவர்கள் எழுதியிருக்கும் தனது நூலிலும் முஸ்லிம்கள் வரலாற்று நெடுகிலும் வேறெந்த வெளிசக்திகளுக்கும் பேரம் போகவில்லை என்பதாகப் புகழ்ந்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

11) சர்வதேச உலமாக்கள் மற்றும் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுபவர் என்ற வகையில் இலங்கை முஸ்லிம்கள் குறித்து எவருடனாவது பேச்சுக்களை நடத்தியுள்ளீர்களா?

எல்லா நாட்டிலும் மேற்சொன்னவைகளையே சொல்லிவருகிறேன் இரகசியமாகப் பேசுவதற்கு எனக்கு எதுவும் கிடையாது. எங்களுக்கு இரண்டு முகம் இருக்க முடியாது. இரண்டு முகம் என்பது ஒரு முஃமினுடைய தன்மையல்ல. இந்த பிரச்சினைக்குப் பிறகு பல நாடுகளுக்கு  சென்று வந்தள்ளேன் இங்கு எதைச் சொல்கிறேனோ அதைத்தான் அங்கும் சொன்னேன். நாம் உண்மை முஸ்லிம்களாக வாழவேண்டும். திமையை தீமையால் அல்ல மாறாக நலவால் நாம் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் இஸ்லாத்தின் உண்மைநிலையை உலகுக்கு உணர்த்த முடியும். 

சிறுபான்மையாக வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு நபியவர்களுடைய மக்கத்து வாழ்க்கை எமக்கு ஆதாரமாக இருக்கின்றது. நாம் இஸ்லாம் கூறும் பிரகாரம் நல்ல முறையில் நடந்தும் பிற மதத்தினர் எங்களுக்கெதிராக சூழ்ச்சிகள் செய்தால் அல்லாஹ் அதற்குப் பொதுமானவன். 'இன்னும் அல்லாஹ் சதிசெய்பவர்களின் சதியைமுறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகவும் சிறந்தவன்' (ஆலு இம்ரான் 54)  

12) ஜம்இய்யத்துல் உலமாவும், அதன் தலைவராகிய நீங்களும் ஐ.தே,க தலைவரை சந்திக்க மறுத்ததாக கூறப்படுகிறதேஉண்மையா? ஏன்?

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை சந்திப்பதற்கு நாம் நேரம்கொடுத்து மறுக்கவில்லை. இப்படியொரு சந்திப்பை வெள்ளிக் கிழமை 10:30 மணிக்கு ஏற்பாடு செய்யப்போவதாக ஒரு சகோதரர் எம்மைத் தொடர்புகொண்டார். இது முக்கிய சந்திப்பு நாட்டின் பல பாகங்களிலுமுள்ள உலமாக்கள் இதில் பங்கேற்க வேண்டும். ஆனால் வெள்ளிக்கிழமையில் அதுவும் 10:30 மணிக்கு அவர்களை அழைப்பது சாத்தியமில்லை. வேறொரு தினத்தில் ஏற்பாடு செய்யுங்கள் என்று நான் கூறிவிட்டேன். ஜம்இய்யவின் கௌரவ யெலாளர் அவர்களும் இந்த பதிலையே கூறியிருக்கிறார்கள். எம்மைத் தொடர்புகொண்ட சகோதரர் வேறு உலமாக்களை அழைத்துச் செல்லலாம் என்ற நல்லெண்ணத்தில் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார். அல்லாஹ் அவருடைய நல்லெண்ணத்துக்கு நற்கூலி அளிப்பானாக. ஆனால் அவர் எதிர்பார்த்தது போன்று நடைபெறவில்லை. அதனால் ஜம்இய்யா வாக்களித்துவிட்டு மறுத்துவிட்டதாக ஜக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நினைத்துக்கொண்டார்கள். இதனையே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரை ஜம்இய்யா சந்திக்க மறுத்ததாக சிலர் கதையைப் பரப்பி விட்டனர். 

இதன் பிறகு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஐக்கிய தேசியக் கட்சியைச் சந்திப்பதற்காக நேரம் கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தது. அதற்கு இது வரை எவ்வித பதிலும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

13) வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் ஜம்இய்யத்துல் உலமாவுக்கு எத்தகைய பங்களிப்புகளை நல்கவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

வெளிநாடுகளில் வசிக்கக் கூடியவர்களுக்கு வித்தியாசமான வளங்கள் இருக்கின்றன. அவற்றை இனங்கண்டு சமூக முன்னேற்றத்துக்காக பாவிக்க வேண்டும். உதாரணமாக வெளிநாடுகளில் முஸ்லிம்கள் வசிக்கும் அதே பிரதேசங்களில் பௌத்த சகோதரர்களும் வசிப்பார்கள் அவர்களுக்கு இலங்கையிலுள்ள பௌத்தர்களோடு மிக நெருங்கிய தொடர்பும் இருக்கும். அவர்களோடு  நல்லுறவை வளர்த்து  அவர்களினூடாக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக அரபு நாடுகளில் வசிக்கும் பௌத்தர்கள் இஸ்லாத்தின் மனிதநேயத்தைக் கண்ணூடாகக் கண்டு கொண்டிருப்பதுடன் இஸ்லாம் மனித நேயத்துக்கு வழங்கியிருக்கும் நலவுகளை அனுபவித்துக் கொண்டும்தான் இருப்பார்கள் எனவே அவர்கள் தனது மதத்தைச் சேர்ந்த பிறருக்கு தெளிவவுபடுத்துவது இலகுவாக இருக்கும்.

இதுபோன்று செய்ய வேண்டிய பல்வேறு பணிகள் இருக்கின்றன. தனது ஏழ்மையின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய எத்தனையோ ஏழைக் குமருகள் பரிதாபத்துடன் வாழ்வைக் களிக்கின்றனர். றிசானா நபீக்குடைய பிரச்சினை வந்தபோது முழு நாடும் பல்வேறு கோணங்களில் பேச ஆரம்பித்தது. ஆனால் இப்பொழுது அது மறந்த கதையாக ஆகிவிட்டது. வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் நிலமை கவனத்திற்கொள்ளப்பட்டு சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி விடயங்களைக் கவனிக்கவேண்டும். இப்படியாக அதிகமான பணிகளைகச் சொல்லிக் கொண்டே போகலாம். 

வெளிநாடுகளில் வாழும் நம் நாட்டவர்கள் பிரச்சினைகள் வரும்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது மட்டும் போதுமானது என நினைக்கின்றனர். உண்மையில் இது தவறாகும். தங்களிடமிருக்கும் அனைத்து வளங்களும் நாட்டினதும் சமூகத்தினதும் உயர்வுக்காக பயன்படுத்தப்படல் வேண்டும். 

இங்கிலாந்திலிருந்து அங்குள்ள சகோதரர்கள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் இங்கு அனைத்து அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் ஒன்று கூடியிருக்கிறோம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்கள் எத்தகைய பங்களிப்புக்களைச்செய்ய வேண்டுமெனக் கேட்டார்கள். அவர்களுடன் இத்தலைப்பில் சுமார் அரைமணி நேரம் மிக விரிவாகப் பேசினேன். தொடரும்..

http://www.jaffnamuslim.com/2013/08/1.html  Part 1
http://www.jaffnamuslim.com/2013/08/2.html  Part 2
http://www.jaffnamuslim.com/2013/08/3_5.html  part 3

2 comments:

  1. உண்மையான கருத்து. வெளிநாட்டில் வாழும் சில முஸ்லிம்கள் இங்கு ஒரு பிர்ச்சினை ஏற்படும் போது ஆஹா ஓஹோ எண்டு துள்ளி குதிக்கிறார்கள். இங்கு முஸ்லிம்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் எப்படி பட்ட சூழலில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து விட்டார்கள் அல்லது சிந்திக்க மறுக்கிறார்கள். உண்மையில் அவர்கள் இங்கு வாழும் எமக்காக செய்யும் துஆ ஒன்றே எமக்கு தேவையாகும். பல தியாகங்களை செய்து பல இன்னல்களோடு வாழும் அவர்களின் துஆக்களை இறைவன் ஒரு போதும் வீணாக்க மாட்டன். அரசியல் தலைமைகளையும் ஜம் இய்யதுல் உலமாவையும் ஏன் சாதாரண மக்களையும் குறை கூறி கொச்சைப்படுத்த வேண்டாம். மனிதன் பிழை விடக்கூடியவனே. மனிதன் எந்த பதவியில் இருந்தாலும் அவன் பிழை விடுவது கலா கத்ர்ல் உள்ளது. என்ன அவர்கள் செய்யும் பிழைகள் அவர்களின் பிரபல்யம் காரணாமாக வெளிப்படுகிறது எங்களின் பிரபல்யமின்மை காரணமாக நாங்கள் செய்யும் பிழைகள் வெளியே தெரிவதில்லை. இறைவன் முன் யாவரும் சமமே. எனவே முஸ்லிம் நாங்கள் யாவரும் ஒரு குடும்பமே. எனவே எங்கள் சகோதரர்களின் குறைகளை நாமே வெளிப்படுத்தாமல் அவேர்களுக்காக நாம் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் நிறைய விடயங்கலை தெரிந்து கொண்டோம். இவ்வளவு சவால்களுக்கு மத்தியில் பாடு படும் இவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி நிச்சயம் கிடைக்கும்.சகல முஸ்லீம்களும் ஜம்மியத்துல் உலமாவிற்கு கட்டுப்பட வேண்டும். அதில் தான் வெற்றி உண்டு.
    "நீங்கள் ஒரே சங்கமாக (ஒற்றுமையாக) இருந்து கொள்ளுங்கள். உங்களிடையே ஏற்படும் பிளவுகள் குறித்து கவனமாக இருந்து கொள்ளுங்கள்" - புகாரி/முஸ்லிம்

    ReplyDelete

Powered by Blogger.