றிஸ்வி முப்தியுடன் பிரத்தியேக நேர்காணல் (பகுதி 1)
(அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் றிஸ்வி முப்தி www.jaffnamuslim.com ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலே இது)
1) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?
ஒரு சிறந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய நோக்கமாகும். இன்று மட்டுமல்ல ஜம்இய்யா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்நோக்கை இலக்காகக் கொண்டே இயங்கி வருகின்றது.
அல்லாஹுதஆலாவுடைய ஏவல் விலக்கல்களை சிரமேற்கொண்டு தங்களது அனைத்து செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்ளக் கூடியவர்களாக, ஐவேளைத் தொழுகைகளை இறையச்சத்தோடு தொழுதுவரக் கூடியவர்களா, பெரும்பாவங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்து அல்லாஹுதஆலாவின் அருளையும் றஹ்மத்தையும் அடைந்துகொள்ளக் கூடியவர்களாக ஒவ்வொருவரும் மாறவேண்டும். தங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரை புரிந்து, மதித்து, தங்களது தேவைகளைவிட பிறரது தேவைகளை முற்படுத்தி, விட்டுக் கொடுத்து, அன்போடு ஐக்கியத்தோடு வாழ்ந்து சமூக ஒற்றுமையைப் பாதுகாப்பதோடு பிறமத சகோதரர்களுடன் இஸ்லாம் கூறும் பிரகாரம் சக வாழ்வைப் பேணி வாழக் கூடிய சிறந்த சமூகம் ஒன்றை உருவாக்குவதே ஜம்இய்யாவின் நோக்கமாகும்.
விவசாயத்தின் வளர்ச்சிக்கு தண்ணீர் உதவுவதுபோன்று ஜம்இய்யா அனைத்து நலவுகளுக்கும் காரணமாக அமையவேண்டுமென்பதே ஜம்இய்யாவின் குறிக்கோளாகும். இஸ்லாம் வணக்க வழிபாடுகளை மாத்திரம் சொல்லிக் கொடுக்கும் மார்க்கமல்ல. ஒரு நாய்க்கு தண்ணீர் புகட்டியதால் துர்நடத்தையுள்ள ஒரு பெண் மன்னிக்கப்பட்டு சுவனம் நுழைவிக்கப்படுகிறாள், ஒரு பூனையை கட்டிப்போட்டு தான் அதற்கு உணவழிக்கவுமில்லை அது தனது உணவைத் தேடிக் கொள்ள இடமளிக்கவுமில்லையென்பதால் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த ஒரு பெண் நரகம் நுழைவிக்கப்படுகிறாள் என்பது நபிமொழியாகும். எனவே யாரும் ஜம்இய்யாவின் செயற்பாடுகளால் நஷ்டமடைந்துவிடக் கூடாது. மனிதாபிமான அடிப்படையில் பிறமதசகோதரர்களுடன் நல்லுறவை வளர்த்து சிறந்ததொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். அவர்களும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் புரிந்து தெரிந்து முஸ்லிம்களுடன் நன்றாக நடந்துகொள்ள வேண்டும்.
எமது சக்திகள், வளங்கள் சண்டைசச்சரவுகளில் வீணாகாமல் சமூகத்துக்ககு பிரயோசனமான பணிகளில் ஒன்று படும்போது இன்ஷா அல்லாஹ் இது மிகவிரைவில் சாத்தியமாகும். இதனை அடைந்துகொள்ள உலமாக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். உலமாக்கள் கிளைவிவகாரங்களில் மாற்றுக் கருத்துக்கொண்டோரை மதித்து நடக்கவேண்டும். தமது சுய விருப்பு வெறுப்புகளுக்கப்பால் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.
2)அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவராக பணியாற்றிய காலகட்டத்தில் எதிர்கொண்ட கசப்பான சம்பவமாக எதைக் குறிப்பிடுவீர்கள்?
'ஒரு முஃமினுடைய விடயம் ஆச்சரியமாக இருக்கின்றது. அவனுடைய அனைத்து விடயங்களும் நலவாகவே அமைந்துவிடுகிறது. இது ஒரு முஃமினைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. ஒரு முஃமினுக்கு நலவுவந்தால் அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றான் எனவே அது அவனுக்கு நலவாக அமைந்துவிடுகிறது. ஒரு முஃமினுக்கு கஷ்டங்கள் வந்தால் அவன் அதிலே பொறுமை செய்கிறான் அதுவும் அவனுக்கு நலவாகவே அமைந்துவிடுகிறது'சஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவாகியுள்ள இந்த நபிமொழிக்கு முன்னால் என்னால்எதைத்தான் கசப்பென்று சொல்ல முடியும்.
3)ஹலால் விடயத்தில் ஜம்இய்யா தோல்விடைந்துவிட்டதாக முஸ்லிம்களில் ஒரு தொகையினர் இன்னும் நம்புகிறார்களே அதுபற்றிய உங்கள் அபிப்பிராயம் யாது?
யுத்தத்துக்கு சென்று புறமுதுகு காட்டி ஓடி வருவதுபோன்று பாரமெடுத்த ஒரு விடயத்தை எங்களால் செய்ய முடியாது என்று இடைநடுவில் கைவிடுவதுதான் தோல்வியாகும். உண்மையில் ஹலால் விவகாரத்தை ஜம்இய்யா அவ்வாறு பார்க்கவில்லை. ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை பொறுப்பேற்ற நாள் முதல் ஜம்இய்யா இதனை மிகச் சிறப்பாக செய்து வந்தது. 2000ஆம் ஆண்டு இரண்டு அறுப்பு பண்ணைகளுக்கு சான்றிதழ் வழங்கி தனது சேவையை ஆரம்பித்தது. 2004 ஆண்டு உணவு விஞ்ஞான, விவசாய, இரசாயன துறைசார் நிபுணர்களை உள்ளீர்த்து உணவுச்சாலைகள், உற்பத்தி நிறுவனங்கள் போன்ற ஏனைய பிரிவுகளுக்கான சான்றிதழ் வழங்கல் நடவடிக்கை விரிவாக்கியது.
இதனைத் தொடர்ந்து ஹலால் சம்பந்தமான வெளிநாட்டு விஜயங்களினதும்; சந்திப்புக்களினதும், பயிற்சிகளினதும்; ஒப்பந்தங்களினதும் அவசியம் உணரப்பட்டது. அவ்வடிப்படையில் 2005 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் 2009 ஆண்டு (IFCE) பெல்ஜியதுக்கும் 2010 ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் 2011 மலேசியாவுக்கும் 2012 ஆண்டு (CICOT) தாய்லாந்து மலேசியா,இந்தோனேசியா,சிங்கப்பூர் (MUI, MUIS & JAKIM) ஆகிய இடங்களுச் சென்று ஹலால் சம்பந்தமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
2010 ஆம் ஆண்டு ஜுலை 19ஆம் திகதி ஜேர்மனியைச் சேர்ந்த ஹலால் கொன்றோல் நிறுவனத்துடன் கூட்டிணைந்தது.
2011 ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதி மலேசியாவைச் சேர்ந்த International Halal Integrity Alliance, நிறுவனத்தில் அங்கத்துவம் பெற்றது.
2012ஆம் ஆண்டு ஆகஸ்ட 14 ஆம் திகதி; SAARC ஹலால் கவுன்சிலில் அங்கத்துவம் பெற்றதுடன்; அதே வருடம் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி தாய்லாந்து ஹலால் விஞ்ஞான நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி (IFANCA) ஐக்கிய அமெரிக்க ஹலால் சான்றிதற்படுத்தல் நிறுவனத்துடன் மற்றுமொரு ஒப்பந்தத்தையும் கைச் சாத்திட்டது.
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் திகதி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த AFIC நிறுவனத்துடனும் பெப்ரவரி 20 ஆம் திகதி பெல்ஜியத்தைச் சேர்ந்த IFCE நிறுவனத்துடனும் கூட்டிணைந்தது.
2013ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி World Halal Food Council (WHFC) இந்தோனேசியாவின் அங்கத்துவம் பெற்றது.
அவ்வாறே ஜம்இய்யவின் ஹலால் அத்தாட்சிப் படுத்தற்பிரிவு ஹலால் இந்தியாவுடன் கூட்டிணைந்துள்ளதுடன் SANHA, தென்னாபிரிக்கா ஹலால் சான்றிதற்படுத்தல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது.
2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹலால் அத்தாட்சிப் படுத்தற் சபையில் 2004 ஆம் ஆண்டு வரை இரண்டு நிறுவனங்கள் மாத்திரமே சான்றிதழ் பெற்றிருந்தன. அதன் பிறகு 2004ஆம் ஆண்டு 2 நிறுவனங்கள், 2005ஆம் ஆண்டு 1 நிறுவனம், 2006ஆம் ஆண்டு 10 நிறுவனங்கள், 2007ஆம் ஆண்டு 16 நிறுவனங்கள், 2008ஆம் ஆண்டு 39 நிறுவனங்கள், 2009ஆம் ஆண்டு 41 நிறுவனங்கள், 2010ஆம் ஆண்டு 29 நிறுவனங்கள், 2011ஆம் ஆண்டு 35 நிறுவனங்கள், 2012ஆம் ஆண்டு 41 நிறுவனங்கள், 2013ஆம் ஆண்டு 61 நிறுவனங்கள் என்ற அடிப்படையில் புதிய புதிய நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்டன.
ஹலால் சான்றிதழ் வழங்கும் பணியை பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அது அவர்களது உணர்வகளைப் புண்படுத்துவதாகக் கருதினர். உங்களுக்குத் தேவையென்றால் ஹலாலை வைத்துக்கொள்ளுங்கள் எதற்காக எங்களுக்கு உங்களுடைய ஹலால் சின்னம் பொறிக்கப்பட்ட பொருட்களைத் தருகிறீர்கள் என்பதுதான் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டம்.அவர்கள் இதனை வெளியாக்கிய விதம் மிகவும் கவலைக்குரியது.உண்மையில் அதை சரியான முறையில் அவர்கள் அணுகியிருந்தால் அதற்கான மிக நல்லதொரு தீர்வை ஜம்இய்யா எடுத்திருக்கும்.
ஹலால் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு பின்வரும் இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.
* ஜம்இய்யாவினால் ஹலால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பொருட்களில் ஜம்இய்யாவின் ஹலால் சின்னத்தைப் பொறிப்பது நிறுவனங்களின் விருப்பத்தில் விடப்படும்.
* ஜம்இய்யா ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை இலவசமாகச் செய்ய வேண்டும்.
மேற்கூறப்பட்ட இரண்டு தீர்மானத்துக்கமையவே ஜம்இய்யா தனது ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவையை தற்பொழுது நடாத்தி வருகின்றது. எனினும் இவ்வளவு பெரிய பணியை இலவசமாகச் செய்வது ஜம்இய்யாவுக்கு பெரும் சுமையாகவே இருக்கிறது.
ஜம்இய்யாவினால் ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட நிறுவனங்கள்,பொருட்கள் சம்பந்தமான பூரண தெளிவை முஸ்லிம்கள் பெற்றுக் கொள்வதற்காக ஜம்இய்யா 0117425225 எனும் இலக்க விஷேட தொலைபேசி சேவையொன்றை ஆரம்பித்து வைத்துள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 1500 தொலைபேசி அழைப்புக்கள் வந்தவண்ணமுள்ளன. இதிலிருந்து பொதுமக்கள் இதன் பக்கம் எவ்வளவு தேவையுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பது அறிய முடிகிறது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற மலேசியாவின் துயுமுஐஆ நிறுவனத்தின் உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து ஜம்இய்யாவின் ஹலால் அத்தாட்சிப் படுத்தற் முறையை பரசீலித்துச் சென்று அதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருக்கின்றது. இதனைவைத்து பொதுமக்கள் உண்மை நிலையை ஊகித்துக் கொள்ள முடியும்.
றஸுலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹுதைபியா உடன்படிக்கையின்போது விட்டுக்கொடுத்ததே வெற்றிக்கு காரணமாக அமைந்தது.ஜம்இய்யா பெரும்பான்மை சகோதரர்களின் உணர்வுகளை மதித்த வண்ணம் முஸ்லிம்களின் தேவைகளைக் கவனத்திற்கொண்டு இவ்விடயத்தில் செயற்பட இருக்கிறது. எனவே வெற்றிதோல்வி என்று பெயர் சூட்டாமல் நடந்தவற்றிலிருந்து படிப்பினை பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்ததாகும். தொடரும்..!
அகில இலங்கை உலமா சபைக்கு அல்லாஹ்வின் உதவியும் அருளும் கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முதலில் உங்கள் உலமா சபையின் கிளைத் தலைவர்களுள் சில முட்டாள் முனாபிக் உலமாக்கள் உள்ளார்கள் முதலில் அவர்களை களையெடுத்து உலமா சபையை தூய்மைப்படுத்துங்கள்.
ReplyDeleteஇது நான் வெறும் ஊகமாகக் கூறவில்லை ஆதாரத்தோடுதான் கூறுகின்றேன் தேவை ஏற்பட்டால் உலமாக்கள் என்ற போர்வைக்குள் இருக்கும் முனாபிக்களை அடையாளம் காட்டவும் தயாராகவுள்ளேன்.
என்றாலும் அல்லாஹ்வைப் பயந்துதான் அவர்களை அம்பலப்படுத்தாது உங்கள் கவணத்திற்கு கொண்டுவருகின்றேன் எனவே நிங்கள் சற்று கவணம் செலுத்தி இந்த பசுத் தோல் போர்த்திய புலிகளை இனங்கண்டு அவர்களை உலமா சபையிலிருந்து நீக்கி உலமா சபையின் புணிதத்தைப் பாதுகாருங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.
அப்போது அல்லாஹ்வின் உதவி உலமா சபைக்குக் கிடைக்கும்.
noorullah சொல்வதில் 100 வீதம் எனக்கும் உடன் பட முடியும் எமது பள்ளி தெரிவின் போது எமது பகுதி உலமா சபை முனாபிக்தனத்தை பகிரங்கமாக செய்த ஒரு உலமாவிக்கு சார்பாக இருந்ததோடு அதன் பிறகு அந்த குறிப்பிட்ட உலாமாவிற்கு உலமா சபையிலும் பதவி கொடுத்து சிறப்பித்தது.எங்களிடம் எழுத்து மூலமானதும் ஊர் மக்கள் முன் பகிரங்கமாக கூறிய கூற்றும் உள்ளது.
ReplyDeleteஹலால் சம்பந்தமாக ரிஸ்வி முப்தியவர்கள் அளித்த விளக்கம் முழுமையானதாக கருதிவிட முடியாது. 2000ம் ஆண்டில் இருந்து பத்து பதினொருவருடங்களாக ஹலால் தொடர்ப்பான விடயங்களில் ஏற்பட்ட முன்னேற்றம்பற்றியும்,உலக நாடுகளுடன் ஏற்பட்ட பயனுள்ளதொடர்புகள் பற்றியும்விளக்கமளித்துள்ளார்.ஆனால் ஹலால் என்பது ஒரு வாழ்வியல் ஒழுங்குஎன்ற வகையில் இலங்கை மக்களுக்கு வியக்கமளிக்கப்பட வில் லை.ஹலால் தொடர்பான விஞ்ஞான விளக்கங்கள் இலங்கை மக்களை சென்றடையவில்லை. ஹலால் என்பது பிரித் நுால் போன்ற மத அடையாளம் என்பதாகவே சிங்கள மக்கள் கருதினர்.ஒரு சிறுபான்மை இனத்தவரின் மத அடையாளம் பெரும்பான்மை இனத்தவரின் மீது திட்டமிட்டு தினிக்கப் படுகிறது என்ற(தவறான)பிரச்சாரத்துக்கு சிங்கள மக்கள் பலியாகி விட்டனர்.அதிலிருந்து முஸ்லிம்கள் மீது ஏற்பட்ட சந்தேகம் படிப்படியாக வளர்ச்சி கண்டு இந்நாட்டின் அதிபதி முதல்,வேடுவ
ReplyDeleteசமூகம் வரை வியாபத்திருப்பதை காணலாம்.இன்று உலக முஸ்லிம்கள் மீது பல்வேற குற்றச் சாட்டுகளும் அவதுாறுகளும் பரப்பப்பட்வருகின்றன.
எனவே அது அமைதியாக வாழும் இலங்கை முஸ்லிம்கள் மீதும் என்றோ
ஒரு நாள் தினிக்கப் படலாம் என்ற எதிர்ப் பார்ப்புடனேயே காரியங்கள் நடந்தேறியிருக்க வேண்டும்.உண்மையிலேயே ஹலாலின் பெருமாணங்க
சரியாக விளங்கிக் கொண்டால் அரசாங்கமே தமது சுகாதார அமைச்சின்
ஊடாக ஹலாலின் நன்மை தொடர்பாக பிரச்சாரம் பண்ணியிருக்க வேண் டும்.ஜம்மியதுல் உலமா சபையும் ஹலால் தொடர்பான பிரச்சாரங்களை முடுக்கிவிட்டு சட்ட அங்கீகாரத்துடன் தொடங்கியிருக்க வேண்டும்.நோக்
கம் துாய்மையாக இருந்தால் காலம் தாமதித்தேனும் ஹலால் இந் நாட் டில் கொடிகட்டிப் பறக்க எல்லாம் வல்ல அல்லாஃ நல்லருள் புரிவான் என
நம்பலாம்.
ஆமாமா..!
ReplyDeleteஎங்க ஊரிலயும் 'வட்டிக்குப் பணம் எடுத்து வாகனம் வாங்கலாம்' என்று 'பத்வா' கொடுத்த ஆலிமுஷாக்களெல்லாம் உலமா சபையில இருக்காங்க..
அவங்களையெல்லாம் களை புடுங்கினாத்தான் எங்களப் போல சாமானிய மக்கள் உலமாக்களுக்கு கட்டுப்படுவாங்க.
இல்லாட்டி பல சேனாக்களுக்கு எதிரா நாங்க சண்டை புடிக்கிறத விட இந்த 'ஹறாத்'தை 'ஹலாலா'க்குற உலமாக்களோட (எங்க பேனயால) சண்ட புடிக்கிறதத்தான் ஆகப் பெரிய ஜிஹாதாக் கருதுவோம். உடனே கவனமெடுங்க..!
காத்தான்குடியில 'வட்டி ஆகும்' என்ற உலமாக்கள உடனே கண்டு பிடிச்சு அறிவியுங்க!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
(ஜாப்னா இணையதள நிர்வாகிகள் தயவு செய்து இந்தக் கருத்தை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்)