Header Ads



முஸ்லிம்களின் இதயங்களைத் தாக்குகிறார்கள் - முன்னாள் அமைச்சர் மன்சூர் (பகுதி 1)

 (ஏ.எல்.ஜுனைதீன்) 

    முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.ஆர்.மன்சூர், கல்முனைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக, ஜே.ஆர் ஜெயவர்த்தன ஆட்சி காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராக, குவைத் நாட்டுக்கு இலங்கையின் தூதுவராக பதவி வகித்து முஸ்லிம், தமிழ் சமூகங்களுக்கு சிறப்பான சேவையாற்றியவர். அவர் கொழும்பிலுள்ள தனது வீட்டிலிருந்து  எமது www.jaffnamuslim.com இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டி:-

கேள்வி:-    எமது இலங்கை நாட்டில் தற்போது முஸ்லிம்களின் மத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள கவலைக்கிடமான நிலைமைகள் பற்றி முஸ்லிம் மக்கள் ஆத்திரப்படுவதுடன் கவலையும் தெரிவிக்கின்றனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:-    முஸ்லிம் மக்களின் வணக்க ஸ்தலங்களான. மஸ்ஜித்கள் தாக்கப்படுவதை அவதானிக்கும்பொழுது  உண்மையில் மன வேதனை அடையவேண்டியிருக்கிறது. எமது இலங்கை நாடு பல மதம், மொழி, கலாச்சார விழுமியங்களை உள்ளடக்கியதாக மக்கள் சிறப்பாக வாழும் ஒரு நாடு என எமது அண்டை நாடுகளில்  ஏன் உலக நாடுகளில் மதிக்கப்படுகின்ற அந்த நல்லெண்ணமும் மதிப்பும் படிப்படியாக அழிந்து விடுமோ என்ற அச்சமும் கவலையும்  அமைதியை விரும்புகின்ற எல்லா இன, மதங்களைச் சேர்ந்த மக்களின் சிந்தனையிலும் இருந்து கொண்டிருக்கிறது.

           எனது சிந்தனையில் இதற்கு முக்கிய காரணம் இந் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் முறையாக அமுல்படுத்தப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன். ஒரு நாட்டின் உயிர்நாடி அரசியல் அடிப்படைச் சட்டம் என்று கூறுவார்கள். இந்தச் சட்டங்கள் புத்தகங்களில் மட்டும்தான் இருந்து கொண்டிருக்கின்றதே தவிர  செயல் முறையில் நடைமுறைப்படுத்தவில்லை என்பது எனது கருத்தாகும். இந்த அடிப்படைச் சட்டத்தில் மனித உரிமை,வாக்குரிமை, வதிவிட உரிமை, மத உரிமை,மொழி உரிமை என்பன போன்றவைகள் அடங்கியுள்ளன.

         உலக நாடுகளைப் பிரநிதித்துவப் படுத்தும் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் ஸ்தாபனம் என்பன போன்றவை ஏற்றுக் கொள்ளக்கூடிய அடிப்படைச் சட்டம்தான் எமது இலங்கை நாட்டில் இருக்கின்றது. ஆனால் இந்த அடிப்படைச் சட்டம் உரிய முறையில் எமது நாட்டில் நடை முறையிலுள்ளதா? என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வியாகும். உதாரணமாக மொழி உரிமை அது அடிப்படைச் சட்டத்தில் உள்ளது ஆனால் நடைமுறையில் இல்லை. அதே போன்றுதான் மத உரிமை, கலாச்சார உரிமை என்பனவும் மனிதனின் தனிப்பட்ட அடிப்படை உரிமையாகும் என எமது அரசியல்சாசனத்தில் பதியப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவும் நடை முறையில் செயல்படவில்லை என்பதற்கு குறிப்பாக தற்பொழுது முஸ்லிம்களால் இதயம் போன்று கருதப்படுகின்ற மஸ்ஜித்கள் தாக்கப்படுவதைக் குறிப்பிடலாம்.

          எவராவது வணக்க ஸ்தலங்கள் தாக்கப்படுவதை நியாயப்படுத்தவோ ஆதரிக்கவோ முற்படுவாரேயானால் அவர் இந் நாட்டின் விரோதி இந் நாட்டின் அடிப்படைச் சட்டத்திற்கு விரோதி ஏன் உலகலாவிய ரீதியில் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளை அவமதித்து செயல்படுகின்ற ஒருவர் என்றே நாம் கருத வேண்டும்.

          உலகலாவிய ரீதியில் எல்லா நாடுகளிலும் பல இன, பல மத, பல கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் இனைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம் இந்த அடிப்படை உரிமைகளை மிகவும் கவனமாக அமுல்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் காண்கின்றோம். அப்படியாக அந்நாடுகளில் மனித உரிமைக்கான நடைமுறைகள் சிறப்பாக இருக்கும்போது எமது சின்னஞ் சிறிய நாட்டில் ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பி என்னைப் போன்றவர்கள் கவலை அடைகின்றோம்.

        சமீபத்தில் நான் லண்டனில் உள்ள ஒரு புகையிரத நிலையத்தில் கண்டறிந்த ஒரு காட்சியை இங்கு குறிப்பிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன். அந்நாட்டில் முஸ்லிம் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்ற  சில பெண்கள் முகம் மூடப்பட்ட நிகாப் ஆடை அணிந்தவர்களாக அமர்ந்திருந்ததைப் பார்த்தேன். அந்த புகையிரத நிலையத்தில் மேலத்தேய கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இளைஞர், யுவதிகள்,நிகாப் அணிந்திருந்த பெண்கள் அவர்களோடு வந்த ஆண்கள் எல்லோரும் ஒற்றுமையாகக் கூடியிருந்ததைப் பார்த்த எனக்கு 90 வீதமான மக்கள் மேலத்தேய கலாச்சாரத்தில் வாழ்கின்ற இந்நாட்டில் இவ்வாறு முஸ்லிம் பெண்கள் துணிச்சலாக முகத்தை மூடியவர்களாக  நிகாப் அணிந்திருப்பது ஏனையவர்கள் இவர்களைப் பார்த்து ஏளனம் செய்வதற்கு அல்லது சொல்வதற்கு இடமளிப்பது போல் இருக்காதா? இதன் மூலமாக இங்கு அமைதி குலையாதா? என்ற சிந்தனை எனது மனதில் எழுந்து அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வைத்தியத்துறையில் கடமையாற்றுகின்ற கலாநிதி ஒருவரிடம் எனது சந்தேகத்தை வினவிய போது அவர் சிரித்தவராக  என்னை நோக்கி (Grandpa) தாத்தா உங்களுக்கு தெரியுமா பிரிட்டன் போன்ற நாட்டிலே அடிப்படை மனித உரிமை என்ற கொள்கையும் அந்த சிந்தனையும் எல்லோரும் சமமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சட்ட நடைமுறையும் ஒழுங்கும் இந்நாட்டில் இருக்கின்றது. அது மதிக்கப்பட்டு சரியான முறையில் அமுல்படுத்தப்படுவதன் காரணமாக ஒரு சமூகத்தினரின் கலாச்சாரங்கள், விழுமியங்கள் என்பனவற்றை ஏணைய சமூகத்தினர் மதித்து நடக்கின்றனர். அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழ்கின்றனர். இதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏன் இந்நாட்டில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு மேல் ஒருவர் தொழில் செய்து இங்கு சீவிப்பாரேயானால் இங்குள்ள சட்டத்தின் அடிப்படையில் அவர்களை இந்நாட்டுப் பிரசையாகப் பதிவு செய்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசப்படுகின்ற சவுதிஅரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் நூறு வருடங்கள் அந்நாட்டில் வாழ்ந்தாலும் அவர் ஒரு இஸ்லாமிய மகனாக இருந்தாலும் சரியே அப்படிப்பட்டவர்களை அந்நாட்டுப் பிரசைகளாக ஏற்றுக் கொள்வார்களா? பாருங்கள் இந்த நவீன உலகத்தில் எப்படி நாகரிகங்களும் பண்புகளும் இருந்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்(Grandpa) தாத்தா என்று பிரித்தானியா  நாட்டின் நடைமுறைச் சட்டங்கள், கொள்கைகள் பற்றி  விபரித்தார். நானும் திகைத்துப் போனேன்.

      இதனை நான் இங்கு சொல்வதற்குக் காரணம் சட்டமும் ஒழுங்கும் நிலை குலைந்து போய்க்கொண்டிருப்பதை நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.அதற்கான உரிய நடவடிக்கைகளை பொறுப்பானவர்கள் எடுக்கவில்லை. எமது உரிமைகள் தடுக்கப்படுகின்றபொழுது அல்லது மத ஸ்தலங்கள் தாக்கப்படுகின்ற பொழுது நீதித்துறைக்குப் போகவும் தயங்குகின்றோம். ஏனெனில் சரியான நியாயம் கிடைக்குமா  என்ற சந்தேகமும் அச்சமும் எமது மனதில் இருந்து கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலை மாறாத வரை  அச்சம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். இதனைப் போக்குவதற்கான ஒரே வழி ஜனநாயக வழியே தவிர தலிபான்கள் கூறுகின்ற வழிகளை என் போன்றவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். 

         அன்பு, ஆதரவு, சகிப்புத் தன்மை, என்பனவற்றையும் சிறந்த கலை, கலாச்சாரத்தயும் கொண்ட நல்ல சமூகம் என்ற நற்பெயரைப் பெற்றார்களோ அந்த நற்பெயர் அழிந்துவிடாதவாறு சிங்கள வாக்காள மக்களும் நாமும் இணைந்து ஜனநாயக வழியில் தமது பொன்னான வாக்குகளைக் கொண்டு தற்போதுள்ள ஆட்சியாளர்களை அகற்ற வேண்டும். இதுதான் இதற்கு சரியான வழியே தவிர வேறு வழி எதுவும் எனக்கு தெரியவில்லை.

தொடரும்..!

2 comments:

  1. Super. We have to try to change the present government. Avarkal aadsiyil ulla kuraifaadukalai maraikka makkalai inaththai mukal nilaiyil vaithu aadsiyai nadathaalaam enru enukinraarkal.

    ReplyDelete

Powered by Blogger.